Published:Updated:

இதுதான் ரியல் #10yearchallenge! - இளைய தலைமுறையினருக்கு உதாரணமான விவசாயி மகன்

இதுதான் ரியல் #10yearchallenge! - இளைய தலைமுறையினருக்கு உதாரணமான விவசாயி மகன்
இதுதான் ரியல் #10yearchallenge! - இளைய தலைமுறையினருக்கு உதாரணமான விவசாயி மகன்

கடந்த சில நாள்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்தச் சமூக வலைதளத்துக்குச் சென்றாலும் முதலில் கண்ணில் படுவது #10yearchallenge தான். முன்னதாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கீ கீ சேலஞ்ச் போன்றவை ட்ரெண்டிங்கில் இருந்தன. இந்தச் சவால்கள் அனைத்தும் சற்று ஆபத்தானதாகவே இருந்தது. ஆனால், 10 இயர் சேலஞ்ச் மிகவும் எளிமையானது. தற்போதிலிருந்து பத்து வருடங்களுக்கு முன்னால் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதைக் காட்டுவதே இந்த #10yearchallenge

இந்தச் சவாலை உலகில் உள்ள பல பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்களும் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே கடந்த பத்து வருடத்தில் தங்களின் தோற்றம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை மட்டுமே மையமாக வைத்து இந்தச் சவாலை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான பதிவு நம் கண்ணில்பட்டது. ஆம், ‘ பத்து வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயியின் மகன், தற்போது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்’ என்பதுதான் அந்தப் பதிவு.

அவரிடம் பேசியபோது பத்து வருடத்தில் தன் வாழ்வில் நடந்த மாற்றங்கள் குறித்து நம்மிடம் சுருக்கமாக பகிர்ந்துகொண்டார். `` நான் ஜெயராஜ். புதுச்சேரியில் உள்ள கூடப்பாக்கம் கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். தந்தை முனுசாமி விவசாயியாக உள்ளார். சிறு வயதில் இருந்தே எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆறாவது படிக்கும்போது ஒரு பிரபலமான சி.பி.எஸ்.இ கல்வி நிறுவனத்தில் எனக்கு இடம் கிடைத்தது. என் தந்தை, அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.

அதைக் கேட்டு வளர்ந்த எனக்கும் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்ற லட்சியம் வந்தது. அதனால் சி.பி.எஸ்.இ- யை விட மாநில கல்வியில் படித்தால் மட்டுமே சிறப்பாக படிக்க முடியும் என நினைத்து எனக்கு வந்த வாய்ப்பை உதறிவிட்டு அரசுப் பள்ளியில் படித்தேன். நான் நினைத்தது போலவே 2008-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தேன். அதன் பின்பு பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் ஏழாவது இடம் பிடித்தேன். 

2011-ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த எனக்கு அப்போது புதுச்சேரியில் புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.  ஐந்து வருடங்கள் புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படித்து தேர்ந்தேன். தற்போது சண்டிகரில், குழந்தைகள் நல மருத்துவராக மேல் படிப்பு (MD) படித்து வருகிறேன். கடந்த பத்து வருடங்களில் என் வாழ்வு இவ்வளவு அழகாக மாறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறி முடித்தார். 

தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்துப் பதிவிடப்பட்ட லட்சக்கணக்கான #10yearchallenge பதிவுகளுக்கு நடுவே தன்னுடைய வாழ்க்கையே மாறியிருந்ததைப் பதிவிட்டிருந்த ஜெயராஜுக்குப் பாராட்டுகள்.