“இன்னும் பல நந்தினிகளைக் காப்பாற்ற என் கதை உதவட்டும்!” - திருவண்ணாமலை நந்தினி | The girl who stopped her marriage as a child is now a 'Beti Bachao' face

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (26/01/2019)

கடைசி தொடர்பு:15:14 (26/01/2019)

“இன்னும் பல நந்தினிகளைக் காப்பாற்ற என் கதை உதவட்டும்!” - திருவண்ணாமலை நந்தினி

"என்னைப் போன்ற பல நந்தினிகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற உதவும் என்பதால்தான், இந்தக் கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற என்னுடைய எதிர்காலக் கனவை நோக்கி உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன்!”

டித்து அரசு அதிகாரியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த 13-வயது பெண் குழந்தையைத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிறான் அவரின் அம்மாவின் தம்பி. தாய் இறந்துவிட்டார். தந்தையும் கைவிட்டுவிட்டார். அடைக்கலம் கொடுத்த தாய்மாமாவே இப்படித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தும் சூழலில் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைக்கிறாள் அந்தப் பெண்குழந்தை. அப்போது பள்ளியில் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் நிறைந்த துண்டு அறிக்கையைத் தன் புத்தகத்துக்குள் வைத்திருந்தது ஞாபகம் வருகிறது. அதிலிருந்த ஓர் எண்ணுக்குப் போன் செய்த அந்தச் சிறுமி, தான் ஒன்பதாம் வகுப்புப் படிப்பதாகவும் தன்னைவிட இரண்டு மடங்கு வயதில் மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தவதாகவும் சொல்லிவிட்டு, தான் படிக்க விரும்புவதால் இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னைக் காப்பாற்றி படிப்பைத் தொடர உதவிகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த போனைத் துண்டித்துவிட்டார்.

திருவண்ணாமலை நந்தினி

யார் என்ற அடையாளம் எதுவும் சொல்லாமல் துண்டிக்கப்பட்ட அந்த அழைப்பின் பின்னணியில் இருக்கும் அந்தப் பெண் குழந்தையைத் தேடும்படலம் முடுக்கிவிடப்பட்டது. அடுத்த நாளே அந்தப் பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீட்டுவந்து குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் பெண்ணின் சாமர்த்தியத்தைப் பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் விருதும் பாராட்டும் கிடைக்கிறது.  இதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

அந்தப் பெண்ணும், அவரது கதையும் இளம்வயதில் கட்டாய திருமணத்துக்கு வலியுறுத்தும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றன. இது ஏதோ ஒரு கதை என்று நினைத்துவிட வேண்டாம். உண்மையில் திருவண்ணாமலையில் நந்தினி என்ற பெண் குழந்தைக்கு நடந்ததுதான். இப்போது ‘பேடி பச்சாவ் பேடி பதாவ்’ என்ற முழக்கத்துக்கான பிரசார முகமாக நந்தினியின் இந்தக் கதையைத் ‘குழந்தைத் திருமணம் வேண்டாம்’ என்றத் திட்டத்துக்காகப் பயன்படுத்திவருகிறார்கள்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு

வியாழக்கிழமை (24.01.2019) டெல்லியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ‘பேடி பச்சாவ் பேடி பதாவ்’ன் ஒராண்டு நிறைவடைந்தது. அந்த நிகழ்ச்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பெண் குழந்தைத் திருமணம் வேண்டாம்’ என்ற திட்டத்தின் விழிப்புஉணர்வு பிரசாரத்துக்காக நந்தினியின் வாழ்க்கைக் கதை இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய நந்தினி, “நான் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், எனக்குப் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் திருமணம் நடப்பதற்கு ஒரு நாளுக்குமுன் என்னை எப்படி இந்தத் திருமணத்திலிருந்து காப்பாற்றிக்கொள்வது என்று தெரியாமல் பயத்திலிருந்தேன். அப்போதுதான் இந்தத் துண்டுப்பிரசுரம் ஞாபகத்துக்கு வந்தது. என் பள்ளிப்புத்தகத்தில் எதேச்சையாக வைத்திருந்த இந்தப் பிரசுரத்தைத் தேடி எடுத்து அதிலிருந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினேன். உதவி வந்தது. இப்போது சுதந்திரமாக நான் விரும்பியபடி படித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் போன்ற பல நந்தினிகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற உதவும் என்பதால்தான், இந்தக் கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற என்னுடைய எதிர்காலக் கனவை நோக்கி உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார். 

திருவண்ணாமலை நந்தினி

என்னதான் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினாலும்., இன்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசி எண்ணான 1098-க்கு வரும் பல அழைப்புகள், பெயர் மற்றும் பிற விவரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குபவையாகவே இருக்கின்றன. இதனால் உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேவையான உதவியைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாத சூழ்நிலையிலேயே அதிகாரிகளும் அரசும் இருக்கின்றன. விரைவில் தைரியமாகப் பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியில் சொல்லும் காலம் உருவாக வேண்டும். நந்தினிபோல பலரின் வாழ்க்கை இன்னும் பலருக்கும் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்