மும்மடங்கு உயர்ந்த பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி... உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா? | Plastic Waste Imports Increasing in india

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (26/01/2019)

கடைசி தொடர்பு:18:42 (26/01/2019)

மும்மடங்கு உயர்ந்த பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி... உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா?

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எப்படிக் கையாளப்போகிறது இந்தியா?

மும்மடங்கு உயர்ந்த பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி... உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா?

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமீப காலமாக சற்று அதிகமாகவே உணர ஆரம்பித்திருக்கிறது உலகம். பயன்படுத்த எளிமையானவை, செலவு குறைவு எனப் பல காரணங்களால் மக்களிடையே பிளாஸ்டிக் பொருள்கள் பிரபலமாகத் தொடங்கின. தொடக்கத்தில் சிறிய அளவில் பயன்பாட்டில் இருந்தபோது தெரியாத அதன் பாதிப்பு பின்னர் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வழிகள் ஆராயப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழகத்தில்கூட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு சில மாநிலங்களும் இது போன்ற தடையை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளன. ஒருசில மாநிலங்களில் நிலைமை இப்படி இருக்க மற்றொரு பக்கம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது புதுடெல்லியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று.

50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகள்

இந்தியாவில் ஒரு நாளில் 26,000 கிலோ டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அதில் 15,500 டன் கழிவுகள் முறையாகச் சேகரிக்கப்படுகின்றன. அதிலும் மறுசுழற்சிக்குச் செல்பவை என்று பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இப்படி உள்நாட்டில் குவியும் கழிவுகளே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போது அதனுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவுகளும் இணைந்து கொள்கின்றன. உலகில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் 10-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் மறுசுழற்சி செய்வதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. மறுசுழற்சி தொழிலில் வர்த்தக வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இறக்குமதி செய்யப்படும் கழிவுகளின் அளவு சமீப காலமாக அதிகரித்துள்ளது என்கிறது புது டெல்லியைச் சேர்ந்த அமைப்பான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஸ்மிருதி மன்ச் (Pandit Deendayal Upadhyay Smriti Manch). இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2016-2017 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளின் அளவு 12,000 டன்கள். அது கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் 48,000 டன்களாக உயர்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது 2018-2019 நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 25,000 டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் மலாவி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியானவை. குறிப்பாகச் சீனா தடை செய்த சில குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் கழிவுகள்கூட இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

PET பாட்டில்கள்

இந்தக் கழிவுகளில் PET பாட்டில்கள், மற்றும் தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறுசுழற்சியின் போது சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. பின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது இல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது. இது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களும், ரசாயனங்களும் வளிமண்டலத்தில் கலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால் மண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. சீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை இறக்குமதி செய்து குவிக்கிறது.

சட்டத்தில் உள்ள குறைபாடுகளால் நடக்கும் முறைகேடு

பிளாஸ்டிக் கழிவுகள்

இப்படி இறக்குமதியில் நடக்கும் முறைகேடுகளுக்குச் சட்டத்தில் உள்ள ஓட்டைதான் காரணம் என்கிறது இந்த அமைப்பு. மறுசுழற்சி செய்வதில் இருந்த சிக்கல்கள் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளை குறிப்பாக PET பாட்டில்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டு அவை முறையாகப் பிரிக்கப்படாததின் காரணமாக அவை மறுசுழற்சி மையங்களை அடைவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு அடுத்தடுத்த திருத்தங்கள் மூலமாகச் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மட்டும் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதி தரப்பட்டது.

தற்பொழுது அதன் மூலமாகவே முறைகேடாகக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் விளைவுகளைத்தான் தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகளின் அளவுகள் காட்டுகின்றன என PDUSM அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க அரசு எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவைதான். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து உள்ளே வரும் கழிவுகளை கட்டுப்படுத்தத் தவறினால் உலகநாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியாக இந்தியா மாறும் நிலை ஏற்படலாம். 


டிரெண்டிங் @ விகடன்