``சாமி வேஷம் போட்டா, சிலர் எதிர்க்கிறாங்க; பலர் கொண்டாடுறாங்க!" - நாடக நடிகர் ஃபைசல் | King Faizal a Muslim Stage Performer Who Plays a role of Hindu Gods

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (28/01/2019)

கடைசி தொடர்பு:19:13 (28/01/2019)

``சாமி வேஷம் போட்டா, சிலர் எதிர்க்கிறாங்க; பலர் கொண்டாடுறாங்க!" - நாடக நடிகர் ஃபைசல்

`அனைத்து மதங்களையும் சமத்துவத்தோடு நேசிப்பதால்தான், என்னால் உண்மையான கலைஞனாக இருக்க முடிகிறது. இஸ்லாமியரான நான் இந்துக் கடவுளின் வேஷம் போட்டு நடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்... பலர் பாராட்டினார்கள்.’

``சாமி வேஷம் போட்டா, சிலர் எதிர்க்கிறாங்க; பலர் கொண்டாடுறாங்க!

லை, மக்களுக்கானது. மனித வாழ்வின் அரிதான பல மாற்றங்களுக்கு, கலை ஓர் உந்துசக்தியாக இருந்துள்ளது. மக்களை தங்களின் சுய அடையாளங்களைத் துறந்து இணைக்கும் கருவியாக, கலை இருக்கிறது. அதன் தேவைகளை, அவசியத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு இயங்கும் கலைஞர்கள் பலர். அப்படி ஒருவர்தான் கிங் ஃபைசல். 

நாகை சுற்றுவட்டாரத்தில் பரவலாக அறியப்படும் நாடகக் கலைஞர்களில் இவரும் ஒருவர். புராணக் கதைகளில் வரும் இந்து தெய்வங்களின் வேடமேற்று அவர் நடித்த அத்தனை நாடகங்களும் மிகப் பிரபலம். நாகை மாவட்ட நாடகக் கலைஞர்கள் சங்கப் பொருளாளர், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர், நடிகர் சங்க உறுப்பினர் எனப் பல முகங்கள் இவருக்கு இருந்தாலும், இவர் நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு சிவன், விஷ்ணு என்றால் இவரின் அரிதாரம் பூசிய முகம்தான் நினைவுக்கு வரும். இஸ்லாமியரான இவர், இந்துக் கடவுள்களின் வேடமேற்று நடிப்பதற்குப் பாராட்டுகள் குவிவதோடு, ஒருபுறம் எதிர்ப்புகளும் குவிந்துவருகின்றன.

கிங் ஃபைசல்

நாகப்பட்டினம் மாவட்டம், மங்கைநல்லூரைச் சேர்ந்தவர் கிங் ஃபைசல். பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால், 1982-ம் வருடம் பள்ளி ஆண்டு விழாவில் முதன்முதலில் மேடையேறியுள்ளார். பெரும் மக்கள் கூட்டம், முகத்தில் அரிதாரம், கைதட்டல்கள் என அந்தச் சூழல் அவருக்குள் ஏற்படுத்திய ரசவாதம், அவரை நாடக உலகுக்குள் இழுத்தது. அந்தச் சுரம் சற்றும் குறையாமல் இன்று வரை நூற்றுக்கணக்கான நாடகங்களில் அசத்தியிருக்கிறார் கிங் ஃபைசல்.

நாடகம்

முறைப்படி நாடகக் கலையைக் கற்றுக்கொள்ளாத இவர், 15 வருடத்துக்கு முன்பு `தெய்வத் தெருக்கூத்து ஆன்மிகக் கலைக்குழு' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து சிவன், விஷ்ணு, நாயன்மார், சித்தர் எனப் பல வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தற்போது அந்த அமைப்பை `கலைத்தாய் அறக்கட்டளை' என மெருகேற்றி இயங்கிவருகிறார்.

நாடகம்

தமிழ்நாட்டின் பல கோயில்களில் கடவுள் வேடமேற்று நாடகம் நடத்தியதில், இவருக்குப் பலமுறை எதிர்ப்புகள் வந்துள்ளன. ஆனால், அதைவிட அதிகமான மக்கள் ஆதரவு இருந்ததால் அதை கடந்துவந்தாகக் கூறுகிறார் ஃபைசல்.

``இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த எனக்கு, மதப்பற்று உண்டு. இருப்பினும் இந்து மதக் கதைகளைப் படித்து அதை உணர்வுபூர்வமாக உள்வாங்கி நடிக்கிறேன். அனைத்து மதங்களையும் சமத்துவத்தோடு நேசிப்பதால்தான், என்னால் உண்மையான கலைஞனாக இருக்க முடிகிறது. இஸ்லாமியரான நான் இந்துக் கடவுளின் வேஷம் போட்டு நடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்... பலர் பாராட்டினார்கள்.

நாடகக் குழுவுக்கு, பெண்கள் அவசியம். பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எங்கள் குழுவில் பெண் கலைஞர்கள் இல்லை. அந்தச் சமயத்தில்தான் சில திருநங்கைகள் வாய்ப்பு கேட்டு வந்தார்கள். `பெண்களுக்குப் பதிலாக, மனதளவில் பெண்களாகவே வாழ்ந்துவருபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன?' எனத் தோன்றியது. இப்போது எங்கள் குழுவில் ஆண்கள் பாதி, திருநங்கைகள் சரிபாதி உள்ளனர். நாடகக் கலைஞர்களை, பலரும் ஏளனமாகப் பார்ப்பதுண்டு. ஆனால், அதைக் கடந்து பாராட்டிக் கொண்டாடும் சிலரால்தான் கலைஞர்கள் உயிர்ப்புடன் செயல்பட முடிகிறது" எனச்  சொல்லி நெகிழ்கிறார் கிங் ஃபைசல்.

நாடகம்

தமிழக அரசின் மாவட்ட அளவிலான கலை வளர்மணி விருது, பாண்டிச்சேரி அரசு சாதனையாளர் 2016 விருது, திருவாவடுதுறை ஆதீனம் - கூத்திசைக் குழு செம்மல் விருது, கும்பகோணம் ரோட்டரி விருது உட்பட ஏராளமான சங்கங்கள், அமைப்புகள் இவரை விருதுகளால் கௌரவப்படுத்தியுள்ளன. 2008-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி `ரசிகன்' தொடரில் சிவாஜி கணேசன் வேடமிட்டு முதல் பரிசு பெற்றுள்ளார். சமீபத்தில் மயிலாடுதுறையில் நடைபெற்ற `காவிரி புஷ்கர' விழாவில் ருத்ரதாண்டவ நிகழ்ச்சியில் சிவன் வேடம் அணிந்து சிவதாண்டவம் ஆடி ஆன்மிகப் பெரியோர்களைப் பிரமிக்கவைத்துள்ளார். மதம், இனம் சார்ந்த பிரிவினைகளுக்கு மத்தியில் கிங் ஃபைசல் தனது கலையின் வழியாக மதத்தைக் கடந்து கொண்டாடப்படுகிறார். 


டிரெண்டிங் @ விகடன்