Published:Updated:

`மக்களின் வலியை உணர்ந்தாலே போதும்!' - `காந்தியடிகள் காவலர் பதக்கம்' வென்ற திருக்குமார்

`மக்களின் வலியை உணர்ந்தாலே போதும்!' - `காந்தியடிகள் காவலர் பதக்கம்' வென்ற திருக்குமார்
`மக்களின் வலியை உணர்ந்தாலே போதும்!' - `காந்தியடிகள் காவலர் பதக்கம்' வென்ற திருக்குமார்

``மக்களுக்கான கஷ்டத்தை நம்முடைய கஷ்டமாகப் பார்க்கவேண்டும். அது தற்போது குறைந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதன் விளைவுதான் மக்களுக்கும் காவலர்களுக்குமான இடைவெளி''

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதங்களை வழங்கி கௌரவித்தார். மதுவிலக்கு தொடர்பான குற்றங்கள் குறைய காரணமாக இருந்த காவலர் திருக்குமாருக்கு, `காந்தியடிகள் காவலர் பதக்கம்' வழங்கப்பட்டது. அத்துடன் அவரது செயல்பாடுகளை பாராட்டி 40 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கினார் தமிழக முதல்வர். இந்தக் காசோலையை கஜா புயலால் பாதிக்கபட்டு சிதிலமடைந்த அரசுப் பள்ளிக்குக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் அவர். திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் திருக்குமாரிடம் பேசினோம்.


உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்... 
``தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமம்தான் என் சொந்த ஊர். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். விவசாயத்தை நம்பியே வாழ்ந்துவந்தோம். 90-களில் எங்கள் ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் தலைகாட்ட தொடங்கியது. விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தபோது, தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பட்டுப்போக ஆரம்பித்தன. போர் (borewell) போட்டுத் தண்ணீரை உறிஞ்சும் காலகட்டத்தின் தொடக்கம் அது. வேறுவழியின்றி சென்னை வந்து, தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சென்னையிலிருந்து கொண்டே காவல்துறைப் பணிக்கு முயற்சி செய்து தேர்வானேன். காவலராகப் பணியில் சேர்ந்து 26 வருடங்கள் கடந்துவிட்டன.’’

காவல்துறை மீதான ஆர்வம் எப்படி வந்தது?

``எங்கள் ஊரில் பொதுவாக வீட்டுக்கு ஒரு ராணுவ வீரர் இருப்பார்கள். என் அண்ணனும் ஒரு ராணுவ வீரர். பொதுவாகவே எங்களுக்கு உடல்உழைப்பு அதிகம் என்பதால், காவலர் களப்பயிற்சி கடினமாக இருந்ததில்லை. ஒரு சம்பவத்தை நினைவுகூர ஆசைப்படுகிறேன். சென்னையில் காவலர் பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரம் அது. என்னுடன் இருப்பவர்கள் நல்ல உடல்வாகுடன் இருந்தனர். அவர்களைக் கண்டதும், `சரி நமக்கு வேலை கிடைக்காது' என்று பயந்துகொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வந்த 90 சதவீதம் பேர் கயிறு ஏறும் பயிற்சியில், தோற்று வெளியேறிவிட்டனர். பனை மரம், தென்னை மரம் ஏறுவது என்பது எங்கள் வாழ்வோடு இணைந்தது என்பதால், என்னால் எளிதாக அதைச் செய்ய முடிந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கே வாய்த்த வரம் அது!’’

26 வருடங்களாகக் காவல்துறையில் பயணிக்கிறீர்கள். இந்தத் துறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``தலைசிறந்த பணியாகவே காவல்துறையைப் பார்க்கிறேன். நேர்மையாக வேலை செய்தால், இதைவிட மக்களுக்குத் தொண்டு செய்யும் பணி வேறு இல்லை. சேவை மனப்பான்மையோடு செய்யவேண்டிய பணியாகவே கருதுகிறேன். அதுதான் அடிப்படையும் கூட. அந்த சேவை மனப்பான்மை இல்லாவிட்டால் அது தவறான பாதைக்கு வழிவகுக்கும்.’’ 

காவல்துறை மீதான விமர்சனங்கள், மக்களுக்கு காவலர்கள் மீதான அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?

``ரோஜா இருந்தால் முள் இருக்கத்தானே செய்யும். காவலன் என்பவன் மக்களிடமிருந்துதான் உருவாகிறான். சமூக மாற்றங்கள்தான் அவனை வார்த்தெடுக்கின்றன. நீங்கள் எப்படி வளர்கிறீர்களோ அப்படித்தானே அந்தக் குழந்தை வளரும். அவர்கள்தானே எதிர்காலத்தில் காவலர்களாக உருப்பெருகிறார்கள். அப்போ, தொடக்கப்புள்ளி என்பது குடும்பம்தான். இப்படித்தான் இருக்கவேண்டும் என்றபடி `அறம்' சார்ந்து ஒருவனை வளர்த்தெடுக்கவேண்டும். அதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. அப்படியான வளர்ச்சியுடன் நல்ல நூல்கள் எதிர்காலத்தில் இணையும்போது, மக்களுக்கான, சேவை மனப்பான்மையுடைய காவலன் தோன்றுவான். நல்ல புத்தகங்கள் நிறைய இடத்தில் வழிநடத்தும் என்பதை அனுபவமாக உணர்ந்திருக்கிறேன். புத்தகங்கள் மக்களுக்கான வலியை, விதைக்கும் ஆற்றல் பெற்றவை. மக்களுக்கான கஷ்டத்தை நம்முடைய கஷ்டமாகப் பார்க்கவேண்டும். அது தற்போது  குறைந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதன் விளைவுதான் மக்களுக்கும் காவலர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கக் காரணம். அந்த நெருக்கத்தைக் கூட்டினால் இந்த அவப்பெயர் மறைந்துவிடும்.’’


குடியரசு தினவிழாவில், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையைப் பள்ளிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள். என்ன காரணம்?

``இது சிறிய தொகை. பெரிய தொகையெல்லாம் அல்ல. ஏதோ நமக்குக் கடவுளால் வழங்கப்பட்டது, அப்படியே பாதிக்கப்பட்ட பள்ளிக்குக் கொடுத்திடலாம் என முடிவெடுத்தேன். தஞ்சையைப் பொறுத்தவரை தென்னை விவசாயத்தை நம்பியே அவர்கள் வாழ்வாதாரம். அந்த வாழ்வாதாரமே முற்றிலுமாக அழிந்திடும்போது, எதுசெய்தாலும் அது தற்காலிகம்தான். அப்படியாகப் பாதிக்கப்பட்டுக் கிடக்கும், நான் படித்த அரசுப் பள்ளிக்கு இந்தத் தொகையைக் கொடுக்க உள்ளேன். இது மிகவும் சிறிய உதவிதான். இதைச் சொன்னதுக்குக் காரணம், மற்றவர்களும் உதவ முன்வரவேண்டும் என்பதுதான். இல்லாவிட்டால் யாருக்கும் தெரியாமல் பணத்தைக் கொடுத்து உதவியிருப்பேன். தனியார் பள்ளி மோகத்தால், அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்படும். அதைத் தடுக்கவே இத்தகைய முயற்சி.’’


`காந்தியடிகள் காவலர் பதக்கம்' பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?

``தனிப்பட்ட முறையில் இது எனக்கு மகிழ்ச்சி. இது ஒரு அங்கீகாரம்தான். இந்த அறிவிப்பு வரும்போது மேலும் உற்சாகம் கூடியது. ஏதாவது ஒருவகையில் பொதுமக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதிலும், நம்மால் யாரும் பாதித்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பேன்'' என்றவரை இடைமறித்து மற்றவர்கள் வாழ்வில் நீங்கள் செய்த குறிப்பிடும்படியான செயல்களைக் கூற முடியுமா என்று கேட்டபோது, `செஞ்சத சொல்லக்கூடாதில்ல சார்!'' என்றபடி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு