``சமகால அரசியல் தெரிஞ்சுக்கணும் ப்ரோ!’’ -`காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்’ அறிவரசு | An Interview with the Casteless Collective lyricist Arivarasu

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (29/01/2019)

கடைசி தொடர்பு:18:55 (29/01/2019)

``சமகால அரசியல் தெரிஞ்சுக்கணும் ப்ரோ!’’ -`காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்’ அறிவரசு

"எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் வரிகளையோ அவை என்ன சொல்ல வருகின்றனோ என்பதையோ அவர் கேட்டுருப்பார் என்று சொல்ல முடியாது. `மோடி’னு கேட்டதும் அதைத் தடுத்து நிறுத்தணும்னுதான் அவர் யோசிச்சிருப்பார்."

``எங்களின் எல்லாப் பாடல்களும் அரசியல் சார்ந்தவை. சமூகத்தில் இப்போது என்ன சூழல் இருக்கிறதோ, அதை மையமிட்டுதான் பாடிக்கொண்டிருக்கிறோம். இன்று இருக்கும் அரசியல் சூழலில் அதற்கான எதிர்ப்புகளும் எழத்தான் செய்கின்றன. அதற்காக நாங்கள் பாடுவதை நிறுத்த வேண்டும் என்றால், எங்களின் எல்லாப் பாடல்களையும்தான் நிறுத்த வேண்டும். இதற்காகவெல்லாம் பாடாமல் இருக்க முடியாது. தொடர்ந்து இப்படியான பாடல்களைப் பாடிக்கொண்டுதான் இருப்போம்” என்கிறார் பாடலாசிரியர் அறிவரசு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தான் எழுதிய `மோடி மஸ்தான்...’ என்ற பாடலைப் பாடினார் அறிவரசு. காவல் துறையினரால் அந்தப் பாடல் பாடுவது தடைசெய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பத்துக்குப் பிறகு, அந்தப் பாடலைத் தவிர்த்து, வேறுசில பாடல்களைப் பாடி, அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.

பாடலாசிரியர் அறிவரசு

27.01.2019 அன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் `சென்னைக் கலைத் தெருவிழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பறை இசைக் கலைஞர்கள் பாண்டியன் மற்றும் அருணாவின் பறை ஆட்டத்துக்கும், `தி காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்'-ன் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

`தி காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்' குழுவினர், `மகிழ்ச்சி' என்கிற இசைத் தொகுப்பிலிருந்து பல்வேறு பாடல்களைப் பாடினர். நிறைவாக, `மோடி மஸ்தான்...’ என்ற பாடலைப் பாடத் தொடங்கியதும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ``இது ஒரு கலை நிகழ்ச்சி என்று சொல்லித்தான் அனுமதி வாங்கியுள்ளார்கள். அதில் சாதி, மதரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தும் பாடல்களையோ, தலைவர்களை விமர்சித்தோ பாடல்கள் பாடக் கூடாது'' எனத் தடுத்து நிறுத்தினார். இதனால் அந்த `மோடி மஸ்தான்...’ பாடல் பாடுவதைத் தவிர்த்தவிட்டு, தொடர்ந்து வேறு சில பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை முடித்தனர்.

பாடலாசிரியர் அறிவரசு

இது தொடர்பாக `மோடி மஸ்தான்...’ பாடலை எழுதி, பாடிய அறிவரசுவிடம் பேசினேன்.

```சென்னைக் கலைத் தெருவிழா’ என்பதே, கலை மூலமாக மக்களிடம் சமூக அரசியல் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுதான். பெசன்ட்நகரைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஜனவரி 27 அன்று நடந்த நிகழ்ச்சியில் பாடகி சின்மயி பாடியதற்குப் பிறகு நாங்கள் பாடல்களைப் பாடத் தொடங்கினோம். 6 மணிக்குத் தொடங்கிய எங்கள் நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு, துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சாதி அடிப்படையில் மக்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் எனப் பல பிரச்னைகளைப் பற்றிய பாடல்களைப் பாடினோம். இவையெல்லாம், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் பாடிவருபவைதான்.

இந்தப் பாடல்களோடு, சில புதிய பாடல்களையும் பாடினோம். அவற்றில் ஒன்றுதான் நான் எழுதிய `மோடி மஸ்தான்...’ பாடல். இது ஜாலியான ஒரு பொலிட்டிகல் சட்டையர் பாடல். இதில் `மோடி' என்ற வார்த்தை ஒலித்ததும் `அதைப் பாடக் கூடாது... பாடக் கூடாது’  என்று அங்கு இருந்த காவல் அதிகாரி தடுத்து நிறுத்தினார். எனக்குத் தெரிந்து பாடல் வரிகளையோ, அவை என்ன சொல்லவருகின்றன என்பதையோ அவர் கேட்டிருப்பார் என்று சொல்ல முடியாது. `மோடி’ என்ற சொல்லைக் கேட்டதும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் அவர் யோசித்திருப்பார். பொதுவாக, எங்கள் பாடல்கள் அனைத்தும் சமூகப் பிரச்னைகளைப் பறைசாற்றக்கூடிய பாடல்களாகத்தான் இருக்கும். இதுவும் அப்படி ஒரு சமகால சமூகப் பிரச்னையைப் பேசும் ஒரு பாடல்தான்.  

சென்னை கலைத் தெருவிழா

இது ஒரு பாடல்தானே... ஒரு படைப்புதானே. அதைக் கேட்டு ஏன் அவர்களுக்கு அப்படியொரு பயம்? ஒரு படைப்பு, என்னவெல்லாம் செய்யும் என்று அறிந்திருக்கிறார்கள். அப்படித் தெரிந்தவர்கள், அந்தப் பாடல் என்ன சொல்ல வருகிறது என்பதை முழுதாகத் தெரிந்துகொள்ளாமல் அதைத் தடுப்பதை என்னவென்று சொல்வது? ஒரு கலைஞராக அவனோட வரையறைக்குள் நின்று சமூகப் பிரச்னையைப் பேசவும், அதை மக்களிடம் கொண்டுசேர்க்கவும் அவனுக்கு முழு உரிமை உண்டு. அனுமதி வாங்கிய ஒரு நிகழ்ச்சியை, இடையில் நிறுத்துவது என்பது அநாகரிகச் செயல் என்பது அந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? ஒரு படைப்பு என்ன சொல்கிறது என்பது தெரியாது அதைத் தடுத்து நிறுத்துவதெல்லாம், `நாம் எந்த ஒரு சமூக உண்மையும் உடைத்துப் பேச முடியாதோ!' என்ற அச்சம் எல்லோருக்குள்ளும் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்