விற்பனைக்கு வந்தது பெலினோ ஃபேஸ்லிஃப்ட் - புதிய மாற்றங்கள் என்னென்ன? | Maruti suzuki Baleno facelift launched in India

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (29/01/2019)

விற்பனைக்கு வந்தது பெலினோ ஃபேஸ்லிஃப்ட் - புதிய மாற்றங்கள் என்னென்ன?

புதிய வேகன் R-ன் விற்பனையைத் தொடர்ந்து பெலினோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது மாருதி சுஸூகி. ரூ.5.45 லட்சம் முதல் ரூ.8.77 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள பெலினோவின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.7000 - 21,000 விலை கூடுதலாகவும், CVT மாடல் ரூ.30,000 முதல் 44,000 கூடுதல் விலையிலும் வந்துள்ளது.

பெலினோ

முரட்டுத்தனமான முன்பக்க பம்ப்பர், அகலமான ஏர்டேம், 3D டிசைனில் க்ரில், பின்பக்கத்தில் புது பம்ப்பர் டிசைன், 16 இன்ச் டூயல்டோன் அலாய் வீல் போன்ற புது அம்சங்களுடன் வந்துள்ளது. விலை உயர்ந்த வேரியன்ட்டுகளில் மட்டுமே இருந்த LED ப்ரொஜக்டர் ஹெட்லைட் இனி டெல்ட்டா வேரியன்ட்டில் இருந்தே கிடைக்கும்.

பெலினோ இன்டீரியர்

உள்பக்கம் கறுப்பு மற்றும் நீல நிற இன்டீரியர், வேகன்-R மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட smart play studio infotainment, 7 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆண்டிராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் கூடுதலாக இணைந்துள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக ஸ்பீடு அலெர்ட் வார்னிங், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் எல்லா வேரியன்ட்டிலும் இனி ஸ்டாண்டர்டாக கிடைக்கும்.

smart play studio infotainment system

83bhp பவர் தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 75bhp பவர் தரும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. CVT கியர்பாக்ஸ் வழக்கம்போல் பெட்ரோல் மடலில் மட்டும்தான் கிடைக்கிறது. 

Baleno RS Facelift

பெலினோ ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து பெலினோ RS ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வரப்போகிறது. பெலினோவில் வந்த எல்லா மாற்றங்களும் RS வேரியன்ட்டிலும் இருக்கும். 3D க்ரில்லுக்குப் பதிலாகத் தேன்கூடு போன்ற டிசைனில் க்ரில் வரப்போகிறது. கூடுதலாக இன்டீரியர் புது நிறத்தில் இருக்கும். மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. 102bhp பவர் தரும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதில் வருகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடல் போல ஒரே வேரியன்ட்டில் மட்டுமே பெலினோ RS விற்பனைக்கு வரப்போகிறது.