இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடுகளை விட்டு இயல்பாக வெளியே வர முடியாத சூழலில் இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியைச் சார்ந்த மக்கள் இன்னும் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மத்திய மேற்குப் பகுதி மாகாணங்களில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவின் அரசியலில் அப்படி என்ன நெருக்கடி நிலை என நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனென்றால் இது அரசியல் நெருக்கடி அல்ல இயற்கையின் நெருக்கடி. அதே நேரத்தில் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளும் நிகழவில்லை. குளிரும், பனியும், பனிப்புயல்களுமே அமெரிக்காவை இந்த நிலைக்குத் தாக்கியுள்ளன. இதுவரை பத்து, பதினைந்து நாள்களுக்குப் பனி மட்டுமே பெய்துகொண்டிருந்த நிலையில் தற்போதுதான் வெப்பநிலை குறையத் தொடங்கியிருக்கிறது. ஜீரோ டிகிரி செல்சியஸையும் கடந்து மைனஸுக்கும் கீழே செல்லும் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். வெப்பநிலை மைனஸில் சென்றால் என்ன பிரச்னை? குளிர் வழக்கம்தானே இது எனக் குடிமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தக் குளிர் மனித உயிர்களையே காவு வாங்கும் அபாயம் நிறைந்தது என எச்சரித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது.
அமெரிக்காவின் 75% மக்கள் ஏறக்குறைய 220 மில்லியன் மக்கள் இந்தக் குளிரை பொறுத்துக்கொள்ள வேண்டி வரும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்குக் குளிர் நிலவி வருகிறது. ஒரு தலைமுறையின் குளிர் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த சில நாள்களைவிட இந்த வாரம் போகப் போக நிலைமை இன்னும் மோசமாகும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். முக்கியமாக இந்த வாரத்தின் செவ்வாய்க்கிழமை (அதாவது அமெரிக்காவில் இன்று), புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் குளிரின் அளவு அதீதமாக ஏறக்குறைய -30 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவித வரலாற்றுப் பதிவுகளையும் உடைத்து வருகிறது இந்தக் குளிர். இதற்கு முன்பு சிகாகோவில் ஜனவரி 18, 1994-ல் -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கும் முன்னதாக ஜனவரி 20, 1985 லும் ஜனவரி 10, 1982 லும் சிகாகோ, ராக்போர்டு (Rockford), இல்லினோய்ஸ் (Illinois) போன்ற இடங்களில் -27 டிகிரி செல்சியஸ் வரை சென்றன. இதுதான் வரலாற்றின் அதிகபட்ச குளிராகப் பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் குளிர் காற்றானது -60 டிகிரி செல்சியஸ் வரை செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை நிலைமையை இன்னும் மோசமாக்கக் கூடியவை.
It’s currently -5° F and feels like -27° F right now with the wind chill! In Science, we found out that hot water will freeze and turn into snow in mid-air when it’s this cold! #Teach4Me pic.twitter.com/F6OOEVKy5r
— Andy Reiche (@MrAReiche) January 29, 2019
அதீத குளிரின் காரணமாக சிகாகோவில் திங்கள் கிழமை 1000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அருகில் இருக்கும் பகுதிகளையும் சேர்த்து இதுவரை 3480 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தபால் சேவைகளும் சில இடங்களில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. சாதாரண சாலைப் பயணங்கள் கூடச் சாத்தியமற்ற நிலையில்தான் இருக்கின்றன. மேலும் பனிப்புயல்களும் அதீத குளிரும் இருக்கும் நிலையில் அவ்வாறு பயணம் செய்வது ஆபத்தானதும்கூட என எச்சரித்து வருகின்றனர்.அப்படியே அவசரமாக வெளியில் செல்ல நேர்ந்தாலும் உயிர் காக்கும் குளிரைத் தாங்கும் கருவிகளோடு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை முழுக்கப் பனியைத் தவிர ஒன்றுமில்லை. ஆறுகளும் உறைந்து காணப்படுகின்றன. மினசோட்டா (Minnesota), இல்லினோய்ஸ் (Illinois) ஆகிய மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. அனைத்துக் கடைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சிகாகோவில் உள்ள அரசு அருங்காட்சியகங்களும் புதன்கிழமை மூடப்பட்டன. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளிலேயே ப்ரூக்ஃபீல்ட் மிருகக்காட்சி சாலை (Brookfield Zoo) மற்றும் லிங்கன் பூங்கா மிருகக்காட்சி சாலை (Lincoln Park Zoo) ஆகியவை மூடப்பட்டுவிட்டன. அனைத்து விலங்குகளும் கதகதப்பான சூழலில் வைக்கப்பட்டுள்ளன. போலார் கரடிகள் மட்டும் வெளியில் இருக்குமாறு விடப்பட்டுள்ளன. சிகாகோவிலிருந்து தொலைவில் இருக்கும் வாஷிங்டனில் கூடக் குளிரின் காரணமாக மத்திய அலுவலக ஊழியர்களைப் பணி நேரம் முடிவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே வீட்டிற்குக் கிளம்ப உத்தரவிட்டுள்ளனர்.
அதீத குளிரின் காரணமாக இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். மினசோட்டா மாகாணத்தின் ரோசெஸ்டர் (Rochester) நகரில் வசிக்கும் 22 வயது இளைஞனான அலி ஆல்ஃபிரட் கோம்பா (Ali Alfred Gombo) ஞாயிற்றுக்கிழமை இரவு சாவி தவறவிட்டதால் வீட்டுக்குள் செல்ல முடியாமல் வெளியிலேயே இருந்து குளிரின் காரணமாக இறந்துள்ளார். இதேபோன்று 13 வயதான பையன் லோவாவும் (Iowa) குளிரின் காரணமாக இறந்துள்ளான். செவ்வாய்க்கிழமை காலையில் விஸ்கொன்சின்(Wisconsin) மாகாணத்தின் Milwaukee (மில்வாக்கே) நகரில் 55 வயது முதியவர் உறைந்த நிலையில் இறந்து காணப்பட்டுள்ளார். இல்லினோய்ஸ் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் (JB Pritzker), ``இந்த வரலாறு காணாத குளிரைச் சமாளிக்க அவசரக் கால நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. நிலைமை மோசமாகும் பட்சத்தில் நாம் அதை இணைந்து எதிர்கொள்ள வேண்டும். குடிமக்களுக்காக வெப்பமூட்டும் நிலையங்கள் (warming Centres) ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார். கம்பளி கோட்டுகள் இல்லாமல் வெளியில் வந்தால் 10 நிமிடங்களில் நமது தோல் உறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
செவ்வாய் இரவிலிருந்து வியாழக்கிழமை வரை அதிகபட்சக் குளிர் நிலவும்போது அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதி தெற்கு துருவப்பகுதியான அன்டார்டிகாவை விடக் குளிராக இருக்கும் என தேசிய வானிலை சேவை (National Weather Service ) கூறுகிறது. தற்போதே விஸ்கொன்சின்(Wisconsin) மாகாணத்தில் குளிர் அதிகமாகவே உள்ளது. சுடுநீரை வெளியில் ஊற்றினால் அவை பனித்துகள்களாக மாறிவிடுகின்றன. குளிரைத் தாங்குவதற்காக மக்களின் கம்பளி கோட்டுகளைத் திருடுவதும் அதிகமாகியுள்ளதாக இல்லினோய்ஸ் காவல் துறை கூறியுள்ளது. முக்கியமாக கனட வாத்து இறகுகளால் செய்யப்படும் விலையுயர்ந்த கோட்டுகளைத்தான் அதிகம் திருடுகிறார்கள் என்கிறது காவல்துறை. அதன் விலை ஏறக்குறைய 1100 டாலர்கள்.
குளிருக்கான காரணம்
துருவச் சுழல் காற்றுதான் இந்தக் குளிருக்கான காரணம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். துருவச் சுழல் காற்று (polar vortex) என்பது இயல்பாகப் பூமியின் இரு துருவங்களிலும் காணப்படுவது. துருவங்களைச் சுற்றிக் காணப்படும் குறைவான அழுத்தமும் குளிர் காற்றும் நிறைந்த பெரிய பகுதியே துருவச் சுழல் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் நிலையானதாகவே காணப்படும். ஆனால் சில நேரங்களில் வட துருவங்களில் குளிர் காலம் நிலவும்போது இவை கீழிறங்கி தெற்கு நோக்கி நகரும் இதனால் குளிர் காற்றும் குளிரும் அதிகரிக்கும். இந்த முறை மிக அதிகமாகக் கீழிறங்கியுள்ளதால் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
துருவச் சுழலுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பு உள்ளதா?
துருவச் சுழல் காற்று கீழிறங்குவது இயற்கையான விசயமாக இருந்தாலும் இப்போது நிகழ்ந்திருப்பதை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள் காலநிலை மாற்ற ஆய்வாளர்கள். ஏனென்றால் பூமியில் நிகழும் இயற்கையின் அதீத நிலைக்கும் காலநிலை மாற்றத்துக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பு உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. புவி வெப்பமாதல் நிகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் வட துருவமான ஆர்டிக்கில் புவி வெப்பமாதல் இரண்டு மடங்கு வேகமாக நிகழ்ந்து வருகிறது. 1,15,000 ஆண்டுகளில் இப்போதுதான் ஆர்டிக்கில் அதிகமான வெப்பம் நிலவுகிறது. வழக்கமான காலநிலையின் படி பார்த்தால் ஆர்டிக்கில் இப்போது குளிர்காலம் நிலவ வேண்டும். ஆர்டிக்கில் நிலவும் இந்த அதீத வெப்பநிலைதான் துருவச் சுழலைத் தெற்கு நோக்கி நகர்த்தியிருக்கும் எனக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்கன் மேட்டெரோலலாஜிக் சொசைட்டி( American Meteorological Society) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று இதைப் பற்றி ஆதாரத்துடன் கூறுகிறது. காலநிலை மாற்றமானது மிகத் தீவிரமான இயற்கை மாறுபாட்டுக்கும், அதீத அலையான காற்றுக்கும், திடீர் குளிர் காற்று வெடிப்புக்கும் காரணமாக இருக்கலாம் என அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
இயற்கையில் நடக்கும் அதீத மாற்றங்களுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அந்த நோக்கில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால்தான் இயற்கை திடீர் மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியும். கடந்த வருடம் முழுக்க திடீர் திடீரென ஏற்பட்ட சூறாவளிகளும், புயல்களும் இன்னும் பல்வேறு இயற்கைப் பேரிடர்கள் இதை நமக்குச் சொன்னாலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நிகழ்வு நமது ஐயங்களை இன்னும் வலுவாக்குகிறது. காலநிலை மாற்றத்தையும் இயற்கையையும் புரிந்துகொள்ள முயற்சி எடுப்பது இனிவரும் காலங்களில் அவசியம்.
