ஜெஸ்ஸி ஓவன்ஸ் முதல் சச்சின் வரை... ஸ்போர்ட்ஸ் உலகைக் கவர்ந்த `அடிடாஸ்’ உருவான கதை! | The Origin and focus of the world's most inspired brand Adidas

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (30/01/2019)

கடைசி தொடர்பு:19:11 (30/01/2019)

ஜெஸ்ஸி ஓவன்ஸ் முதல் சச்சின் வரை... ஸ்போர்ட்ஸ் உலகைக் கவர்ந்த `அடிடாஸ்’ உருவான கதை!

ஜெஸ்ஸி ஓவன்ஸ் முதல் சச்சின் வரை... ஸ்போர்ட்ஸ் உலகைக் கவர்ந்த `அடிடாஸ்’ உருவான கதை!

ரம், விலை, பயன்பாடு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பார்த்து பொருள்களை வாங்கும் காலம், என்றோ மலையேறிவிட்டது. ஒவ்வொரு சமுதாய நிலையை வெளிப்படுத்தும் `பிராண்டிங் பேசும் 21-ம் நூற்றாண்டில்' நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரே சட்டைதான். ஆனால், பிராண்டுக்கு என்ற தனிப்பட்ட மதிப்பை தாறுமாறாக நிர்ணயிக்கிறது. லட்சக்கணக்கான பிராண்டுகளில், மனதில் பதிவது என்னவோ ஒருசில பிராண்டுகள் மட்டுமே. அதிலும், ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் என்றால் சட்டென நினைவுக்கு வருபவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றுள் என்றைக்குமே நீங்கா இடம் பிடித்திருப்பது `அடிடாஸ்'. எத்தனையோ பிராண்டுகள் வந்தாலும் இன்றைக்கும் பலரின் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் அடிடாஸ் எப்படி உருவானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அடிடாஸ்

வரலாறு:

1920-ம் ஆண்டு ஜெர்மனியில், விளையாட்டின் மீதான காதலால் விளையாட்டு வீரர்களுக்கு எனப் பிரத்யேக Spiked ஷூக்களை தங்களின் வீட்டில் இருந்தபடியே வடிவமைத்தனர், சகோதரர்களான அடால்ஃப் டாஸ்லர் மற்றும் ருடோல்ஃப் டாஸ்லர். தங்கள் வீட்டின் சமையலறையில் வைத்து கைகளால் ஷூக்களை வடிவமைத்துத் தைத்து வந்தவர்கள், நாளடைவில் `Gebrüder Dassler' என்ற தனியார் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு முன்னேறினர். 1925-ம் ஆண்டுதான் லெதர் மற்றும் டிராக் ஷூக்களில் `spikes-யை முதன்முதலில் பொருத்தினர். 1936-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்ற ஜெஸ்ஸி ஓவன்ஸ், நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தார். அப்போது அவர் அணிந்திருந்தது, டாஸ்லர் தயாரித்த ஷூக்கள்தான். இதுவே, உலகளவில் டாஸ்லர் ஷூக்கள் பிரபலமானதுக்கு முக்கியக் காரணம்.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

ஆரம்பத்தில், டாஸ்லர் சகோதரர்கள் இணைந்து ஷூக்களைத் தயாரித்துவந்தாலும், குடும்பப் பிரச்னையால் நாளடைவில் ருடோல்ஃப் பிரிந்து சென்றார். 1947-ம் ஆண்டு, தன் புனைபெயரான `அடி' மற்றும் பின்பாதி பெயரிலுள்ள `டாஸ்'ஸை இணைத்து `அடிடாஸ்' என்று நிறுவனத்தின் பெயரை மாற்றினார் அடோல்ஃப். இதன் லேசான எடையும் தரமான spikes-ம், கால்பந்து வீரர்களால் அதிகம் விரும்பப்பட்டன. இதனால், 1963-ம் ஆண்டு அடிடாஸ், கால்பந்துகளையும் தயாரித்து வெளியிட்டது. நான்கு வருடத்துக்குப் பிறகு, விளையாட்டு ஆடைகளையும் தயாரிக்கத் தொடங்கியது.

விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பில் நீண்டகால ராஜாவாக இருந்த அடிடாஸ், `நைகீ' போன்ற பல பிராண்டுகளின் எழுச்சியால் மெள்ள மெள்ள சரிந்தது. 1978-ம் ஆண்டு, அடி டாஸ்லர் மரணமடைந்த பிறகு, அடிடாஸ் நிறுவனம், பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 1990-ம் ஆண்டு, பிரெஞ்சு வணிக நிர்வாகியான பெர்னார்டு டாப்பியின் தலைமையில் நிர்வாகம் நடைபெற்றது. ஆனால், போதுமான அளவு வருவாய் பெற முடியாததால், 1993-ம் ஆண்டு பிரெஞ்சு முதலீட்டாளரான Robert Louis-Dreyfus-யிடம் கைமாறியது. அவரின் தலைமையில் அடிடாஸ் நிறுவனம், `சாலமன்' எனும் குழுமத்தோடு இணைந்து, `அடிடாஸ்-சாலமன் AG' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. பிறகு, 2005-ம் ஆண்டு மீண்டும் அடிடாஸ், `சாலமன்' பிராண்டை விற்று, `அடிடாஸ் AG'-யாக மாறியது. 2006-ம் ஆண்டு, அடிடாஸின் போட்டியாளரான ரீபோக்கைக் கைப்பற்றியது.

லோகோ:

அடிடாஸ் பிராண்டு உலகமறியச் செய்ததுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, அதன் எளிமையான `லோகோ'. இதன் அசல் உரிமை, `Karhu Sports' என்ற நிறுவனத்தையே சேரும். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் Karhu நிறுவனம் முற்றிலும் சரிந்ததால், இவர்களிடமிருந்து 1,600 யூரோவுக்கும் இரண்டு பாட்டில் விஸ்கிக்கும் அடிடாஸ் நிறுவனம் வாங்கியது. இதற்கு முன்பே, அடிடாஸ் நிறுவனம் மூன்று கோடுகளால்தான் அடையாளம் காணப்பட்டது. 

Logo

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இடங்களில் தங்களின் பிராண்டு பரவி இருக்கிறது என்பதை குறிக்கவே இந்த மூன்று கண்டங்களை தங்களின் லோகோவாக உபயோகப்படுத்தினர். முன்பு, மூன்று இலைகளில் மூன்று கோடுகள் இருப்பதுபோன்ற லோகோ இருக்கும். பின்னாளில், `மலை' வடிவில் மூன்று கோடுகளை இணைத்திருப்பார்கள். இது, வரும் தடைகளைத் தாண்டி முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான குறியீடு. மேலும், இவர்களின் லோகோ வண்ணங்கள் ஏதுமின்றி, வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில்  இருக்கும். இது, எந்த நிறச் சீருடைக்கும் பொருந்தும்விதமாக அமைகிறது. அதேபோன்று, adidas-லிலுள்ள அத்தனை எழுத்துகளும் சிறிய எழுத்துகளிலேயே இருக்கும். இது அவர்களின் எளிமையைக் குறிக்கிறது.

இந்தியாவில்...

Sachin

1989-ம் ஆண்டு, பாட்டாவின் ஒப்பந்த உரிமத்தோடு அடிடாஸ் இந்தியாவுக்குள் நுழைந்தது. 1998-ம் ஆண்டு இதன் பிராண்டு அம்பாஸடராக சச்சின் டெண்டுல்கர் தேர்வானார். லியாண்டர் பயஸ் மற்றும் சச்சின் நடித்த விளம்பரம்தான், முதன்முதலில் அடிடாஸுக்காக இந்தியாவில் வெளியான விளம்பரப் படம். இந்தியாவில் நடந்த இவர்களின் பிரசாரம், 30 சதவிகித வளர்ச்சியை இந்த நிறுவனத்துக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இவர்களின் முக்கியப் போட்டியாளர்களுள் ஒன்றான `பூமா', அடால்ஃப் டாஸ்லரின் சகோதரரான ருடோல்ஃப் டாஸ்லருடையதுதான்.


டிரெண்டிங் @ விகடன்