தமிழகத்தில் முதல்முறை - மதுரை மாநகராட்சிப் பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம்! | Robotics Laboratory at Madurai Corporation School

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (30/01/2019)

தமிழகத்தில் முதல்முறை - மதுரை மாநகராட்சிப் பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம்!

கற்றல் மற்றும் செயல்படுத்துதல் மூலம் விளங்கிக்கொள்ளச் செய்தல், ஸ்டெம் கல்விமுறை (STEM Education - Science Technology Engineering and Mathematics Education). இக்கல்வி முறையின் ஒருபகுதியாக, சர்வதேச நிறுவனமான அமெரிக்கன் இந்தியா ஃபவுண்டேஷன் (American India Foundation - AIF) மதுரை மாநகராட்சியுடன் இணைந்து முதல்முறையாக மாநகரப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்களை நிறுவ உள்ளது.

மதுரை மாநகராட்சியில் 35 பள்ளிகளில் ஆய்வகங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் முதற்படியாகத் தத்தனேரி திரு.வி.க மாநகராட்சிப் பள்ளியில் உருவாக்கப்பட்ட ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகர் திறந்து வைத்தார். மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஏஐஎஃப் நிறுவனத்தின் மாநில நிர்வாகி பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வகத்தில், ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்ப முறைகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத்தர உள்ளனர். அதற்கான பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளிக்கின்றது, ஏ.ஐ.எஃப் நிறுவனம். மேலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு வசதியாக மொழிப்பாடங்களற்ற பிற பாடங்களை ஆடியோ மற்றும் வீடியோவாக நவீன டிஜிட்டல் முறையில் இந்த நிறுவனம் வழங்குகிறது. 

``மாணவர்களின் கற்றலைத் துரிதப்படுத்துவும் விரிவுபடுத்தவும் இந்த ஆய்வகம் நன்கு உதவும். வரைகலை, ஊடகம் போன்ற திறன்சார்ந்த பல துறைகளில் மாணவர்கள் இயங்குவதற்கு இந்த ஆய்வகக் காலங்கள் எதிர்காலங்களில் பக்கபலமாய் ஊக்கம் தரும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற பகுதி பள்ளி மாணவர்களும் சிறப்பு வகுப்புகளாக வந்து இந்த ஆய்வகத்தில் கலந்துகொள்ளலாம். தமிழகத்திலேயே முதல்முறையாக இங்குதான் பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது’’ என்றனர் அதிகாரிகளும் நிறுவனத்தினரும்.