அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தமிழகம்... நேற்று இன்று நாளை!

தமிழகம்... நேற்று இன்று நாளை!
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம்... நேற்று இன்று நாளை!

தமிழகம்... நேற்று இன்று நாளை!

பெரியார், ராஜாஜி, காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா... என்று போர்க்குணம் மிக்கத் தலைவர்களைக் கொண்டிருந்த மாநிலம், தமிழ்நாடு. இன்றைக்கு தலைவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

வெற்றிடத்தில் காலூன்றி விடலாம் என்று சிலர் கனவு காணலாம். ஆனால், தமிழ்நாடு எப்போதுமே தடுமாறியதில்லை. தன்மானத்திலும், தன்னம்பிக்கையிலும் தடம் மாறியதும் இல்லை. விதைத்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தேடி வருவோர், இந்த பெருவிருட்சத்தின் கனிகளில் பசியாறுகிறார்கள். உழைத்தால் பிழைக்கலாம் என்று இங்கே நம்பி வந்தாரை எல்லாம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

தமிழகம்... நேற்று இன்று நாளை!

மத்திய அரசு வஞ்சனை செய்திருக்கலாம் அல்லது வாரிக்கொடுத்திருக்கலாம். மாநில அரசு உத்வேகத்தோடு செயல்பட்டிருக்கலாம் அல்லது ஊழலில் திளைத்திருக்கலாம். ஆனால், அரை நுாற்றாண்டில் வளர்பிறையாகவே முன்னேறியிருக்கிறது தமிழ் மண். அணைகளையும், பள்ளிகளையும் கட்டினார் காமராசர். மாநில சுயாட்சியை முன் மொழிந்தார் அண்ணா. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தினார் கருணாநிதி. சத்துணவுத் திட்டத்தால் ஏழைக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவித்தார் எம்.ஜி.ஆர். பெண்கள் முன்னேற்றத்துக்காக பிரமாதமான திட்டங்களைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.

நான்கு லட்சம் கோடி கடனில் அரசு மூழ்கியிருந்தாலும், தனிநபர் வருவாயில் கொடிநாட்டியிருக்கிறது தமிழ்நாடு. வற்றாத ஜீவநதிகள் இல்லை. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டை போடவேண்டியிருக்கிறது. ஆனாலும், உணவு உற்பத்தியில் சாதனை படைத்து ‘கிருஷி கர்மான்’ வாங்கியிருக்கிறது நம் அரசு. ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டி, ஜவுளித்துறையில் முதலிடத்தில் இருக்கிறது நம் அரசு. உயர்கல்வி, மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல்ஸ் என தொழில் புரட்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தனித்துவத்தோடு வளர்ந்திருக்கிறது தமிழ்நாடு.

கல்வி, சமூக நீதி வளர்ச்சிக்கான தொலைநோக்குடன், நேற்று போடப்பட்ட திட்டங்களின் அடித்தளத்தில்தான், இன்றைய தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்கிறது. கலாச்சார மாற்றங்கள் கவலைகொள்ளவைக்கின்றன. சமூக ஊடகங்கள், சந்ததியை ஆட்டுவிக்கின்றன. கலை, பண்பாட்டுத்தடங்கள் களையிழந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகச் சீர்கேடு, ஓயாது நடக்கும் ஊழல், நாற்காலி நகர்வுகள், அர்த்தமற்ற அரசியல் மோதல்கள் என இன்றைய தமிழ்நாடு, தட்டுத்தடுமாறினாலும், முற்றிலுமாய் கெட்டுப்போய்விடவில்லை. சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது.

மறுபடியும் மறுபடியும் இயற்கைப் பேரிடர்கள் தாக்கினாலும், மத்திய அரசு நிதியைத் தராமல் புறக்கணித்தாலும், கரம் கொடுத்துத் துாக்கிவிடுவதற்கு இங்கே கோடிக்கரங்கள் நேசத்துடன் நீள்கின்றன. வீழ்ந்தாலும் வீழ்ந்தே கிடக்காமல், எழுந்து நிற்கிறது தமிழகம். ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்; எல்லாவற்றிலும் மீள்வோம்’ என்ற நம்பிக்கையோடு, நாளைய பொழுதை எதிர்கொள்கிறார்கள் மக்கள். அதுதான் தமிழ்நாடு!