`இது நம் மலை; இது நம் வாழ்வு!’ - மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் திருவிழா 2019 | Western Ghats Ecology Festival kick starts in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (02/02/2019)

கடைசி தொடர்பு:12:58 (05/02/2019)

`இது நம் மலை; இது நம் வாழ்வு!’ - மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் திருவிழா 2019

மேற்குத்தொடர்ச்சி மலையே தென்னிந்தியாவில்  வாழும் அனைவருக்கும் வாழ்வாதாரம். நமக்கும் தலைமுறைக்கும் அன்னை, இந்த மலைதான். இந்த மலையை காக்கத் தவறினால், நம் சந்ததிகளைப் பாலைவனத்தில் விட்டதுக்கு சமம். இதைக் காக்கும்பொருட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது, `மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் திருவிழா’. இந்த ஆண்டு, கலை மற்றும்  பாரம்பர்யத்துடன் கோவை ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய மாநாடு 2019 தொடங்கியது . மூன்று நாள்கள் நடக்கும் இத்திருவிழாவில், 8  நாடுகள்,17 மாநிலங்களில் இருந்து இயற்கை ஆர்வலர்கள், பல்வேறு இயற்கை அமைப்புகள், உயிரியலாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் என இயற்கைமீது பாசமும் பேரன்பும் கொண்டவர்கள் கலந்துகொண்டனர். அடையாள அட்டைகூட இயற்கை வழியில் உருவாக்குதல் எனத் தொடங்கி,  துணிப்பையில் கொடுக்கும் வரை அனைத்தும் இயற்கை சார்ந்துதான் இத்திருவிழா நடைபெற்றது. 40-க்கும் மேற்பட்ட இயற்கை ஆறுகளின் பிறப்பிடமாக இருக்கும் நமது மேற்குத்தொடர்ச்சி மலையைக் காக்க பல்வேறு அமைப்புகள் பெரிதும் முயற்சிசெய்துவருகின்றன.

பறையிசை மற்றும் மேள தாளத்துடன் நேற்று தொடங்கியது மாநாடு. இருளர் மக்களின் பாரம்பர்ய இசை பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தது. நமது மூத்த குடிகளான நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களின் பிரதிநிதியாக அர்ஜுனன், மாரி (இருளர் )மற்றும் வீணா சென்,சந்தியா சென் (தோடர்) ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரம்பர்ய செடிகளை விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கினர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்குத்தொடர்ச்சி மலை இயக்க  நிறுவனர் பேராசிரியர் மல்ஹோத்ரா பேசுகையில், ``நம் நாட்டில், நான்கு சதவிகிதம் பசுமை வனப்பகுதிக்கு வெளியில் அமைந்துள்ளது. இதை நம்பி, வன விலங்குகள் உயிர்  வாழ்ந்துவருகின்றன. எனவே, விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக இதைக் காக்கவேண்டியது அவசியமாகும். மக்கள் நினைத்தால், இயற்கையைப் பாதுகாக்க முடியும். அவற்றுக்கு நாம் எதுவும் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே நல்லது. மழை மற்றும் இயற்கைச் சமநிலை பாதியளவு மேற்குத்தொடர்ச்சி மலையினால் மட்டுமே நிறைவேறுகிறது. இது நமது மலை; நமது வாழ்வு’’ என்றார்.

வனவிலங்கு புகைப்படக் காட்சி, பழங்குடியினர் கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கிவைத்தனர். மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கும் இயற்கை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், இயற்கை கொடுத்த வரமான நமது தென்மலையைப் பாதுகாக்க  என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்பட்டு, தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.