Published:Updated:

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!
பிரீமியம் ஸ்டோரி
News
கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

தன்னம்பிக்கை

நீதிமன்றங்கள் வித்தியாசமான வழக்குகளை மட்டுமல்ல, அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களையும் சந்திக்கும். பாவேந்தன் விஷயத்திலும் அப்படி ஓர் எதிர்பாராத திருப்பம் நேர்ந்தது. கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமேனி - சசிகலா தம்பதி. இவர்களுக்கு பாவனா, சக்தி, பாவேந்தன் என மூன்று பிள்ளைகள். கடைசி மகன் பாவேந்தனைக்  கருணைக்கொலை செய்ய, கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு போட்டனர் தாயும் தந்தையும்.  

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

``சசிகலாவுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டவைதான் அத்தனை பாதிப்புகளும்...” என்கிறார் தந்தை திருமேனி.

பாவேந்தனால் உட்காரவோ, நிற்கவோ முடியாது. ஒரு நாளில், பல முறை வலிப்பு வரும். எப்போது வலிப்பு  வரும், எப்போது தூங்குவான், எப்போது கண்விழிப்பான்... யாருக்கும் தெரியாது. பேசவும் வராது.  பசி, அழுகை, கோபம் போன்ற அவனுடைய உணர்வுகளை, பெற்றோர் அவர்களாகவே புரிந்துகொள்ள வேண்டும். அம்மா சசிகலா, மகனின் பத்து வருடப் போராட்டம் குறித்து நம்மிடம் ஆதங்கத்தோடு பேச ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கருணை காட்டிய கருணைக்கொலை மனு!“பிள்ளை பொறந்து மறுநாளே என்னை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க. ஆயுதம் போட்டுத்தான் பிரசவம் பார்த்திருக்காங்கனு தெரியாம, நானும் வீட்டுக்கு வந்துட்டேன். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பயங்கரமா அழுவான். வீட்டுக்கு வந்த மறுநாள், கையெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. பால்கூட குடிக்காம, தூங்கிட்டே இருந்தான். கண்ணு முழிக்கும்போதெல்லாம், கை நடுக்கம் வந்துட்டே இருக்கும். பயந்துபோய் மறுநாள் பிரசவம் பார்த்த அதே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம்.

‘உங்க மகனுக்கு வலிப்பு வருது, வேற ஏதாச்சும் குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க. எதுவா இருந்தாலும், ஆறு மணி நேரத்துக்குள்ள சிகிச்சை கொடுக்க ஆரம்பிக்கணும். இல்லாட்டி பெரிய பிரச்னை ஆகிடும்’னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ஆரம்பிச்சது... இன்னிக்குவரைக்கும் போகாத ஆஸ்பத்திரியில்லை, பண்ணாத சிகிச்சையில்லை. எதுலயுமே அவனுக்கு சரியாகலை.

இந்தப் பத்து வருஷத்துல, என் வீட்டுக்காரரு சம்பாதிச்ச பணம், நகை, வீடு எல்லாத்தையும் அடமானம்வெச்சாச்சு. மூன்றரை லட்ச ரூபாய்க்கு மேல கடன். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு, அஞ்சு ஆறு தடவையாவது வலிப்பு வந்துடும். வலிப்பு வந்துட்டா, கைகாலோட சேர்த்துப் புடிச்சு இழுக்க ஆரம்பிச்சுடும். புள்ளை சுருண்டுருவான். பயங்கரமா துடிப்பான்.  

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

தெரியாம சுவர் பக்கத்துல படுக்கவெச்சுட்டா, சுவத்துல முட்டிக்கிட்டு, வாய் நிறைய ரத்தம் வந்து கெடப்பான். பெத்த பிள்ளையை எப்படியெல்லாம் பார்க்கக் கூடாதோ, அப்படியெல்லாம் பார்த்துத் தீர்த்துட்டோம். கொஞ்ச நஞ்ச வேதனையில்லை. எம்புள்ளை எந்திரிச்சு உட்கார்ந்தது கிடையாது; என்னை `அம்மா’னு கூப்பிட்டது கிடையாது; எல்லாமே, படுக்கையிலதான். டாக்டருங்க, வலிப்பைக் குறைக்கிறதுக்கு மாத்திரை கொடுப்பாங்க. அது குறைக்குமே தவிர, தடுக்காது. பத்து வருஷப் போராட்டத்துக்குப் பிறகு, இழக்குறதுக்கு ரெண்டே ரெண்டு விஷயம்தான் எங்ககிட்ட இருந்துச்சு. பிள்ளை நல்லபடியா மீண்டு வந்துடுவான்கிற நம்பிக்கையும் அவன் உசுரும்.” பாவேந்தனுக்கு பொறுப்பான இரண்டு அக்காக்கள். தம்பியை பாத்ரூம் கூட்டிப்போவது, குளிப்பாட்டுவது, மருந்து மாத்திரை கொடுப்பது என எல்லாவற்றையும் செய்கின்றனர். பாவேந்தன் அனுபவித்த வலியையும் சுமைகளையும் குடும்பத்தினர் அனைவரும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘பாவேந்தனை எந்தச் சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்த முடியாது’ என எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். மருத்துவத்தின் எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில், செய்வதறியாமல் தவித்த திருமேனியும் சசிகலாவும், மகனுக்கான கருணைக்கொலை மனுவோடு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

“என்ன பண்றதுன்னே தெரியாம, ‘இதுதான் நம்ம விதிபோல’னு நினைச்சப்போதான் என் வீட்டுக்காரர், கலெக்டர் ஆபிஸ்ல போய் கருணைக்கொலை மனு போட்டாரு. நான் சம்மதிக்கவே இல்லை. பத்து வருஷம் அழுத அழுகையும் அன்னிக்குதான் அந்தக் கடவுளுக்குக் கேட்டுச்சுபோல... அதுக்குப் பிறகு, எங்க வாழ்க்கையே மாறிடுச்சு” என்கிறார் சசிகலா.

ஆம்! பாவேந்தனின் வலி மிகுந்த உலகத்துக்குள், அடுத்து நடந்த அனைத்துச் சம்பவங்களுமே ஆச்சர்யங்கள்தாம். வழக்கு குறித்து அறிந்த, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, `அனிருதா மெடிக்கல் ஆர்கனைசேஷன்’ (AMOL) தாமாக முன்வந்து பாவேந்தனுக்கு சிகிச்சை அளிப்பதாகத் தெரிவித்தது. கருணைக்கொலை மனுக்களைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்டவர்களை ஏதாவதொரு வகையில் காப்பாற்ற முடியுமா என்றுதான் பார்ப்பார்கள் நீதியரசர்கள். அதனால் `உயிரைக் காப்பாற்ற இது ஒரு முயற்சியாக இருக்கட்டுமே’ என்று சிகிச்சைக்கு அனுமதி அளித்தார்கள்.

பாவேந்தனின் தந்தை திருமேனி அது குறித்து நம்மிடையே விரிவாகக் கூறினார். “கோர்ட்டுல மனு கொடுத்ததும், என் பையனுக்காக நிறைய உதவிகள், நிதி உதவிகளெல்லாம்கூட வந்துச்சு. அனிருதா நிறுவனம் மட்டும்தான், சிகிச்சைக்காக எங்ககிட்டப் பேசினாங்க. அதனாலதான், இங்கே வர்றதுக்கு சம்மதிச்சோம். எல்லா டாக்டர்கள் மேலயும் நாங்க வைக்கிற அதே நம்பிக்கையை, இவங்க மேலயும் வச்சோம். எப்பவும் எங்களோட நம்பிக்கை பொய்யாகும். இந்தவாட்டிதான் உண்மையாகியிருக்கு. கோர்ட்டுல ஒரு மாசத்துக்குள்ள ஏதாவது முன்னேற்றத்தைக் காண்பிக்கச் சொல்லி ஆர்டர் போட்டிருந்தாங்க.

உடல் சார்ந்த வெறும் 10 சதவிகிதம் முன்னேற்றத்தைத்தான் கோர்ட்டுல சமர்ப்பிச்சாங்க. வழக்கு விசாரணை முடிஞ்சு, மேற்கொண்டு என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப் போறாங்க, இந்த வழக்குல அடுத்தகட்ட நடவடிக்கை என்னனு பேசிட்டுத் திரும்பி வந்தப்போதான் அவன் உட்கார்றதைக் கண்டுபிடிச்சோம்.   

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

ரொம்ப எதார்த்தமான நிமிஷம் அது... எப்பவும்போல அவனைச் சுவத்துல சாய்ச்சு உக்காரவெச்சேன். அவ்ளோதான்... அப்படியே உட்கார்ந்துட்டான். என்னோட இத்தனை வருஷ வேதனையும் மறந்துபோன மாதிரி இருந்துச்சு. நான் அழுத அழுகையைவிட, நூறு சதவிகிதம் அதிகமா சந்தோஷப்பட்ட நொடி அது.

படுத்த படுக்கையா இருந்த புள்ளைம்மா அவன்... இப்போ உட்கார ஆரம்பிச்சுட்டான். பொறந்ததுலருந்து மூலையிலேயே படுத்துக்கிடந்த புள்ளை, இந்த தீபாவளி முழுக்க உட்கார்ந்தே இருந்த  காட்சி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிறைஞ்சிருக்கு.

என் ஆசையெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல என் மகன் முழுசா குணமாகி வந்துடணும்கிறது மட்டும்தான். அவன் அரை மனுசனா கிடைச்சாக்கூட போதும்கிற மனநிலையிலதான் இங்கே வந்தேன். ‘அப்பா பசிக்குது. பாத்ரூம் வருது. இந்த இடத்துல வலிக்குது’னு அவன் பேசினா மட்டும் போதும்னு நினைச்சேன். ஆனா, இப்போ அவன் உட்கார்றதைப் பார்த்த பிறகு, அவன் முழுசா கிடைக்கணும்னு ஏங்குறேன்.

‘நம்ம காலத்துக்குப் பிறகு யாரு இவனைப் பார்த்துக்குவா’னு தோணின ஒரு நொடியிலதான் அந்தக் கருணைக்கொலை மனுவைப் போட  சம்மதிச்சோம். ஆனா, இங்கே சிகிச்சைக்கு வந்த பிறகு, ‘அவனே அவனைப் பார்த்துக்குவான்’னு ஒரு நம்பிக்கை வந்திருச்சு” என்கிறார் கண்கள் விரிய.  பாவேந்தனுக்கு, இப்போதெல்லாம் ஓரிரு முறைதான் வலிப்பு வருகிறதாம். தூக்க மாத்திரை இல்லாமலேயே தூங்கிவிடுகிறான்.

பாவேந்தனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உமாமகேஸ்வரியிடம் பேசினோம்.

“பாவேந்தன் எங்களிடம் வந்தபோது, அவனுடைய உடலை முழுவதுமாக நாங்கள் பரிசோதனை செய்தோம். அவனுக்கு ஏற்பட்டிருந்தது ‘மூளை முடக்குவாதம்’ (Cerebral Palsy). மூளை முடங்கியிருப்பதால், அதிலிருந்து நரம்புகளுக்குக் கிடைக்கவேண்டிய எந்தச் செய்தியும் சரியாகக் கிடைக்கவில்லை. அதனால்தான் அவனின் உடல் உறுப்புகள் இயங்காமல் இருந்தன.

‘ட்ரிக்கர் பாயின்ட் தெரபி’ மூலம் தசைகளில் அழுத்தம் கொடுத்து, அந்தப் பகுதியிலிருக்கும் நரம்புகளைச் செயல்பட வைப்போம். பாவேந்தன், இன்னும் ஒரு வருடத்துக்குள் முழுவதுமாக குணமாகிவிடுவான்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பாவேந்தன் முழுவதுமாக மீண்டு(ம்) வருவான். அப்போது அவனிடமே பேசுவோம்!

ஜெ.நிவேதா - படங்கள்: ப.சரவணக்குமார், எஸ்.தேவராஜன்

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

கூந்தலுக்கு உயிர் கொடுக்க ஆலிவ் ஆயில்

சிலருக்கு கூந்தல் உயிரே இல்லாததுபோலக் காட்சியளிக்கும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் 10 துளிகள் ஆலிவ் ஆயிலை மண்டைப்பகுதியில் படும்படி தேய்த்து மசாஜ் செய்யவும். ஷவர் கேப் அணிந்துகொண்டு தூங்கிவிடவும். மறுநாள் காலை நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்பூவால் தலையை அலசவும். ஆலிவ் ஆயில் கலந்த ஷாம்பூ என்றால் இன்றும் சிறப்பு. இந்தச் சிகிச்சை உங்கள் கூந்தலுக்கு உயிரூட்டும்.