கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள்... கப்பல்களில் இருக்கும் சோனார் கருவி காரணமா? | Naval sonar is behind the reason of whales death

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (03/02/2019)

கடைசி தொடர்பு:13:52 (03/02/2019)

கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள்... கப்பல்களில் இருக்கும் சோனார் கருவி காரணமா?

கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள்... கப்பல்களில் இருக்கும் சோனார் கருவி காரணமா?

திமிங்கிலங்கள் ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை. அவை பெரும்பாலும் நீரின் மேற்பகுதிக்கு வர விரும்புவதில்லை. ஆகவேதான் கடலில் பயணம் செய்பவர்கள் கூடத் திமிங்கிலங்களை அவ்வளவாகப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி வாழும் திமிங்கிலங்கள்  திடீரென கடற்கரைகளில் இறந்து போய் கிடக்கும். சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கூட வரிசையாகத் திமிங்கிலங்கள் இறந்து போய் கரை ஒதுங்கும்.

திமிங்கிலங்கள்

தமிழக கடற்கரைகளில் கூடப் பல சமயங்களில் இது போல நிகழ்ந்திருக்கின்றன. இப்படி கரை ஒதுங்கும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதால் கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து விடுவார்கள். ஒரே ஒரு திமிங்கிலம் என்றால் அது கடலில் பயணிக்கும் கப்பல்கள் மோதுவதால் காயமடைந்து இறந்ததால் கரை ஒதுங்கியிருக்கும். ஆனால் சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கூட திமிங்கிலங்கள் எப்படி இறப்பைச் சந்திக்கின்றன. ஆழ்கடலில் வசிக்கும் அவை கரையில் வந்து இறப்பதற்கான காரணம் என்ன ? அதுவும் அவ்வளவு எண்ணிக்கையில் எதற்காக இறக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கான பதில் கப்பல்கள் பயன்படுத்தும் சோனார் கருவியாக இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

திமிங்கிலங்களின் நுண்ணுணர்வுகளைப் பாதிக்கும் 'சோனார் ' 

கப்பல்

திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் உள்ள பல கடற்கரைகளில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்பதால் அவற்றைத் தடுக்கவும் முடிவதில்லை. கடலில் மாசு அதிகமாகக் காணப்படுவது, வேட்டை, காலநிலை மாற்றம் எனப் பல காரணங்கள் இவற்றின் இறப்புக்குப் பின்னால் கூறப்படுகின்றன. இவற்றோடு சேர்த்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் சோனார் கருவியும் கூட அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது ஒரு ஆய்வறிக்கை. தி ராயல் சொஸைட்டியின் அறிவியல் பத்திரிகைக்கு 21 நிபுணர்கள் இது தொடர்பான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். அதில் சோனார் ஒரு கடல்வாழ் உயிரினத்தில் எந்த வித பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

திமிங்கிலங்கள்

கடலில் எதிரில் இருக்கும் பொருள்களின் தொலைவைக் கண்டறிய சோனார் மிக நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒலியைப் பரப்பி அது எதிரில் இருக்கும் பொருளில் பட்டுத் திரும்பும் நேரம் போன்ற காரணிகளை வைத்து இது இயங்குகிறது. இவை இயங்கும் போது சிறிய அளவிலான ஒலி அந்தக் கருவியில் இருந்து வெளிப்படுகிறது. இதுதான் திமிங்கிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக ஆழ்கடல் வீரர்களுக்கு ஏற்படும் சீர்குலைவு நோய் (decompression sickness) போன்ற நிலை திமிங்கிலங்களுக்கும் ஏற்படுகிறது.

திமிங்கிலங்கள்

இது நிகழும் போது ரத்த நாளங்களில் நைட்ரஜன் வாயு குமிழ்கள் நிரம்புகின்றன. மூளையின் இயக்கங்களில் குழப்பம் ஏற்படுகிறது. அதன் காரணமாக மற்ற உறுப்புகளும் பாதிப்படைகின்றன. இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் இறுதியாக இறக்கும் நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன. இப்படி கூட்டம் கூட்டமாக இறக்கும் திமிங்கிலங்கள்தான் இறுதியாகக் கரையில் வந்து ஒதுங்குகின்றன. திமிங்கிலங்கள் மட்டுமல்ல கடலில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே அதன் பரிமாணத்தில் அவற்றுக்குரிய சிறப்பான நுண்ணுணர்வுகளைப் பெற்றுள்ளன. இப்படி திடீரென ஓரிடத்தில் இருந்து தொடர்ந்து வெளிப்படும் ஒலியால் திமிங்கிலங்கள் குழப்பமடைகின்றன. எனவே அதைத் தவிர்க்க நினைத்து அதை விட்டு வேகமாக விலகிச் செல்ல முற்படுகின்றன. இப்படி இயல்பாக இல்லாமல் வேகமாக ,வெவ்வேறு திசைகளில் நீந்த முயற்சி செய்வதால் திமிங்கிலங்களுக்குக் கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்