Published:Updated:

இதுவும் வெற்றிதான்!

இதுவும் வெற்றிதான்!
பிரீமியம் ஸ்டோரி
இதுவும் வெற்றிதான்!

பாலு சத்யா

இதுவும் வெற்றிதான்!

பாலு சத்யா

Published:Updated:
இதுவும் வெற்றிதான்!
பிரீமியம் ஸ்டோரி
இதுவும் வெற்றிதான்!

போட்டி, பந்தயம்... எதுவாகவும் இருக்கட்டும். வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? `கடுமையான பயிற்சி வேண்டும்’, `எந்த இடர் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும்’, `மன உறுதியை விடக் கூடாது’... இப்படியெல்லாம் எளிதாக பதில் சொல்லிவிடலாம். ஆனால், உயிரைக் கொடுத்து யாராவது வெற்றிக் கனியை எட்டிப் பிடித்திருக்கிறார்களா? அப்படியும் நடந்திருக்கிறது என்கிறது வரலாறு.

இதுவும் வெற்றிதான்!

1923, ஜூன் 4. அமெரிக்காவின் நியூ யார்க்கிலிருக்கும் பெல்மான்ட் பார்க் குதிரைப் பந்தய மைதானம். 20 குதிரைகள் பந்தயத்துக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தன. அவற்றில் ஒன்று, `ஸ்வீட் கிஸ்’ (Sweet Kiss). அது, ஏ.எம்.ஃப்ரேய்லிங் (A.M.Frayling) என்ற பெண்மணிக்குச் சொந்தமானது. அன்றைக்கு அதை ஓட்டுவதற்குத் தயாராக அதன் மேல் அமர்ந்திருந்தவர் ஃபிராங்க் ஹேயஸ் (Frank Hayes). 35 வயதேயான துடிப்பான இளைஞர். பல வருடங்களாக குதிரைப் பயிற்சியாளராக இருந்தவர். என்ன ஒன்று... அதுவரை ஜாக்கியாகக் கலந்துகொண்ட எந்தப் பந்தயத்திலும் அவர் வெற்றி பெற்றதில்லை.

பந்தயம் தொடங்கியது. எல்லோருடைய கவனமும் வெற்றி பெரும் என்று கருதிய வேறொரு குதிரையின் மேல் இருந்தது. அன்றைக்கு நடந்தது அதிசயம். அதுவரை `தொத்தல்’ என்று கருதப்பட்ட ஸ்வீட் கிஸ், மற்ற குதிரைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு முன்னால் பாய்ந்துகொண்டிருந்தது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, அது வெற்றி எல்லையைத் தாண்டி, மூச்சிரைக்க நின்றது.

ஆனால், ஃபிராங்க் குதிரையிலிருந்து இறங்காமல், அதன் மேலேயே கவிழ்ந்து படுத்திருந்தார். குதிரையின் உரிமையாளர் ஃப்ரேய்லிங் வாழ்த்துச் சொல்ல நெருங்கியபோதுதான் அவர் இறந்திருந்தது தெரிந்தது. பந்தயத்தின்போது நடுவழியில் மாரடைப்பால் இறந்திருந்தார் ஃபிராங்க். ஆனால், குதிரையிலிருந்து விழுந்துவிடாமல், அதன் மேலேயே படுத்திருந்தார். அவருடைய கைகள் கடிவாளத்தைப் பற்றியிருந்தன. எல்லைக் கோட்டைக் கடந்த பிறகும் அந்தப் பிடி அப்படியே இருந்தது.
 
ஃபிராங்க்கின் மரணத்துக்கு என்னென்னவோ காரணம் சொன்னார்கள். `வெற்றிபெறப் போகிறோம்’ என்கிற பரவசத்தில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம்’ அல்லது `பந்தயத்துக்குத் தான் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையைக் குறைக்க முயன்றிருந்தார் ஃபிராங்க். அதனால் மாரடைப்பு வந்திருக்கலாம்’ என்றெல்லாம் சொன்னார்கள். அவை இருக்கட்டும்... ஃபிராங்க் வெற்றியைத் தழுவப் பரிசாகப் பெற்றது மரணம் என்கிறது வரலாறு.

அந்தப் போட்டியில் குதிரை ஸ்வீட் கிஸ் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பிறகு அது எந்தப் பந்தயத்திலும் கலந்துகொள்ளவில்லை. குதிரைப் பந்தய ரசிகர்கள் அதற்கு ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தார்கள்... `மரணத்தின் இனிப்பு முத்தம்’ (Sweet Kiss of Death).

ஒரு துளி சிந்தனை:

`நீங்கள் தோற்கும்போது குறைவாகப் பேசுங்கள்; வெற்றி பெறும்போது அதையும் பேசாதீர்கள்!’

- அமெரிக்க கால்பந்து பயிற்சியாளர் பால் பிரவுன்.