Published:Updated:

கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலர்... கம்மங்கூழ் வாங்கி கொடுத்து பாராட்டிய ஆட்சியர்!

கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலர்... கம்மங்கூழ் வாங்கி கொடுத்து பாராட்டிய ஆட்சியர்!
கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலர்... கம்மங்கூழ் வாங்கி கொடுத்து பாராட்டிய ஆட்சியர்!

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றிய பெண் காவலருக்கு சாலையோரக் கடையில் கம்மங்கூழ் வாங்கி கொடுத்து பருக செய்ததோடு, அவரோடு சேர்ந்து தானும் பருகி அந்த காவலரை நெகிழ வைத்திருக்கிறார் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்.

மாவட்ட ஆட்சியர்களில் கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் அன்பழகன் சற்று வித்தியாசமானவர். அரசு பணி நிமித்தமாக மாவட்டம் முழுக்க இவர் பயணிக்கும்போது எளிய மனிதர்களை கண்டால், அவர்களுக்கு உதவுவது, தோளோடு தோள் சாய்த்து அன்பு பாராட்டுவது வழக்கம். ஏற்கனவே, பிள்ளைகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி, மர்ம நபரால் சீரழிக்கப்பட்டு, குழந்தையோடு அனாதரவராக நின்ற மாற்றுத்திறனாளி பெண் என்று பலருக்கு ஸ்பாட்டிலேயே உதவி இருக்கிறார். சமீபத்தில், ஒரு கிராமத்தில் நடைபெற்ற பள்ளிக் கட்டட திறப்பு விழாவிற்கு போனபோது, அந்த ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர், தனது வாகனம் பழுதாகிவிட்டதை சொல்லி குமுறினார். 

உடனே,அன்று இரவே புது வாகனத்தை வாங்கி, அதை தானே தள்ளிக் கொண்டு போய், செந்தில்குமார் வீட்டில் நேரடியாக வழங்கி, அந்த இளைஞரை நெகிழ வைத்தார். இந்நிலையில், தான் போகும் வழியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றிக்கொண்டிருந்த பெண் காவலரை வாகனத்தை விட்டு இறங்கி போய் பாராட்டியதோடு, அவருக்கு அருகில் சாலையோரத்தில் இருந்த கூழ் விற்பனை கடையில் கம்பங்கூழ் வாங்கி பருக செய்ததோடு, தானும் அவரோடு சேர்ந்து பருகி, அந்த காவலரை கண் கலங்க வைத்திருக்கிறார்.


 

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட இராச்சாண்டார் திருமலை ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள்தொடர்பு நிறைவு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கலந்துகொண்டுவிட்டு, கரூர் திரும்பி இருக்கிறார். அப்போது கரூர் வரும் வழியில் தோகைமலை சாலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது,வியர்வை வழிய போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருதார் காவலர் ராதிகா. அதை பார்த்ததும், தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இறங்கி போய் அவரை பாராட்டி இருக்கிறார். அதோடு,அங்கேயே சாலை ஓரத்தில் கம்மங்கூழ் விற்ற தள்ளுவண்டி கடைக்குச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர், அந்தக் காவலருக்கும், அருகில் இருந்த முதியவருக்கும் கம்மங்கூழை வாங்கிக்கொடுத்து பருக சொன்னதோடு, தானும் பருகினார்.

அதோடு, "அருமையான கைப்பக்குவம். நீண்ட நாள் கழித்து நல்ல உணவை சாப்புடுறேன்" என்று கம்பங்கூழ் விற்ற பெண்மணியையும், மனதார பாராட்டினார். அனைவரும் குடித்ததற்கான தொகையை ஆட்சியர் வழங்கியபோது, "இருக்கட்டும். பணம் வேண்டாம் சார்" என்று கம்பங்கூழ் விற்ற பெண்மணி மறுத்தார். உடனே ஆட்சியர், "என்னை கடன்காரன் ஆக்க பார்க்கிறீங்களா?" என்றபடி,உரிய பணத்தை வழங்கினார். பிறகு காவலர் ராதிகா பக்கமாக திரும்பிய ஆட்சித்தலைவர், "தன்னலம் கருதாது, மக்களுக்காக வெயில், மழை, இரவு, பகல் பாராமல் உழைப்பவர்கள் காவல்துறையினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அற்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தங்களை மனதாரப் பாராட்டுகிறேன். பணியில் உயர்ந்து விளங்க மனதார வாழ்த்துகிறேன்" என்று பாராட்டிவிட்டு, வாகனத்தில் ஏறி கரூர் வந்திருக்கிறார். ஆட்சியரின் இந்த பாராட்ட்டை சற்றும் எதிர்பார்க்காத காவலர் ராதிகா, மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்.

இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம்.  "நான் வர்ற வழியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாம, கொஞ்சகூட அந்த கஷ்டத்தை முகத்தில் காட்டாம ராதிகா சிறப்பா போக்குவரத்தை சரிசெஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததும், இறங்கி பாராட்டனும்ன்னு தோணுச்சு. பக்கத்துல கம்பங்கூழ் விற்கும் கடை இருந்ததால், வெயிலுக்கு இதமா அவருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்தேன். பக்கத்துல நின்ன பெரியவரையும் பருக சொல்லிட்டு, நாங்களும் பருகினோம். காவலர்களின் பணி உன்னதமானது. அந்த பணியை சிறப்பாக செய்யும் காவலர்களை பாராட்டுவது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கும். மத்தபடி,இதுல பெருசா நான் ஒண்ணும் செய்யலையே" என்றார்.