நயாகரா நீர்வீழ்ச்சியை இப்படிப் பார்த்ததுண்டா?! #WeekInScience | This week in science news roundup 4 Feb 2019

வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (04/02/2019)

கடைசி தொடர்பு:17:49 (04/02/2019)

நயாகரா நீர்வீழ்ச்சியை இப்படிப் பார்த்ததுண்டா?! #WeekInScience

கடந்த வாரம் உலகம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான அறிவியல் செய்திகளின் தொகுப்பு. #WeekInScience

நயாகரா நீர்வீழ்ச்சியை இப்படிப் பார்த்ததுண்டா?! #WeekInScience

மனிதனுக்கு ஏற்படும் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய புதிய பரிமாணங்களை எட்டியுள்ளது. அப்படி கேன்சர் நோய் பரப்பும் புரோட்டீன்களை நிரந்தரத் தூக்கத்துக்கு கொண்டு செல்லும் மருந்து முதல், திரவத்தில் உருவாக்கப்படும் 3டி வடிவம் வரை கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன. இந்த வார #WeekInScience பகுதியில் அவற்றைத் தொகுத்து இங்கு அளிக்கிறோம்.

1. தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விண்வெளி மண்டலம்

விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக நாசாவின் `ஹப்புள் தொலைநோக்கி' விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 13,000 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள என்.ஜி.சி. 6752 நட்சத்திரக் கூட்டத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், தற்செயலாக மிகப் பழைமையான ஒரு மண்டலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 

விண்வெளி - Week In Science

பூமியிலிருந்து 3 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இந்தப் பழைமையான மண்டலம், நமது பால்வெளி மண்டலத்தின் சுற்றளவில் 30-ல் ஒரு பகுதியே கொண்டதாகும். 1300 ஆண்டுகள் பழைமையான இந்த மண்டலம் ஒளி குறைந்ததாகக் காணப்படுகிறது. பிரபஞ்சத்தின் தொன்மையான நட்சத்திர மண்டலங்களுள் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த எல்.பெடின் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளதால், பெடினின் பெயரே இந்தப் பழைமையான விண்வெளி மண்டலத்துக்கும் சூட்டப்பட்டுள்ளது.

2. கேன்சர் செல்களைச் செயலிழக்கச் செய்யும் மருந்து

கேன்சர் நோய் பரவலை உந்துப்படுத்தும் இரண்டு புரோட்டீன் செல்களை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்வதன் மூலம், கேன்சர் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

கேன்சர்

கேஏடி6ஏ, கேஏடி6பி என்னும் இரண்டு புரோட்டீன்கள்தான் கேன்சர் நோய் செல்கள் வளர்ச்சியடைவதற்கு அடிப்படையாக இருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரைச் சேர்ந்த டிம் தாமஸ், அன்னி வோஸ், ஜொனாதன் பேல், ப்ரென்டன் மோனகன் ஆகியோர் நடத்திய ஆய்வில் கேஏடி6ஏ, கேஏடி6பி புரோட்டீன்களை நிரந்தரமாகத் தூங்க வைப்பதன் மூலம் கேன்சர் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். புதிய கேன்சர் நோய் தடுப்பு மருந்தால் மனிதர்களின் டி.என்.ஏ.வில் எந்த மாற்றமும் நிகழாது என்றும் இந்தக் குழு கூறியுள்ளது. சோதனைக் கட்டத்திலுள்ள இந்தப் புதிய கேன்சர் நோய் தடுப்பு மருந்து, விரைவில் சந்தையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட சீனாவின் நிலவு ரோபோ

மனிதர்கள் அதிகம் ஆராய்ச்சி செய்யாத நிலவின் மறுபக்கத்துக்கு, சாங்கே 4 விண்கலத்தையும், அதில் ஜேட் ராபிட் என்றழைக்கப்படும் 6 சக்கரங்கள் கொண்ட யூடூ 2 என்கிற ரோபோவையும் சீனா அனுப்பியது. கடந்த ஜனவரி 2ம் தேதி நிலவின் `வோன் கார்மேன்' பள்ளத்தில் தரையிறங்கிய இவ்விரண்டும், நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்கின்றன. பூமியின் நாள் கணக்குப்படி, நிலவில் 14 நாள்கள் பகலும், 14 நாள்கள் இரவும் ஏற்படுகிறது. இரவில் வீசும் கடுமையான குளிரால், சாங்கே 4 விண்கலமும், யூடூ 2 ரோபோவும் தற்காலிகத் தூக்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. 

சீனா விண்கலம் - Week In Science

குளிர் ஓய்ந்த நிலையில், விண்கலமும், ரோபோவும் கடந்த ஜனவரி 29ம் தேதி தூக்கத்திலிருந்து தாமாகவே விழித்துக்கொண்டன. நிலவு ஆராய்ச்சிக்காக அடுத்தடுத்து விண்கலங்களை சீனா அனுப்பவுள்ள நிலையில், நிலவின் சீதோஷணத்தை அதன் விண்கலங்கள் தாங்கியுள்ளது விண்வெளி ஆராய்ச்சியில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் மைனஸ் 190 டிகிரி குளிர் வீசியதாகச் சாங்கே 4 விண்கலம் செய்தி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

துருவச் சுழற்சியால் ஏற்பட்டுள்ள கடுங்குளிர் அமெரிக்காவை வாட்டி வதைக்கிறது. குளிர் தாங்க முடியாமல், இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மத்திய மேற்குப் பகுதி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 9 கோடி மக்கள், மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் கடுமையான குளிரால் அவதிப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எங்குப் பார்த்தாலும் வெண்ணிற ஆடையைப் போர்த்தியது போலப் பனி படர்ந்துள்ளது. முதல்முறையாக சிகாகோ நகரில் மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் சீதோஷனம் பதிவாகியுள்ளது.

நயாகரா

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்துக்கும், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் நடுவே உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்துவிட்டது. பனி போர்த்திய நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

5. திரவத்தில் 3டி வடிவம்!

இதுவரை, திடப் பொருள்களிலிருந்து 3டி வடிவங்களை நகல் எடுக்கும் தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. முதல்முறையாக, திரவத்திலிருந்து 3டி வடிவங்களை உருவாக்கிட முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

3d

ஒளியை உறிஞ்சும் மஞ்சள் நிற ஜெல் திரவத்தில் லேசர் ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம், விரும்பிய 3டி திட வடிவங்களைப் பெற முடியும் என்பதை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்கேலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. சில நிமிடங்களில், ஜெல் திரவத்தைச் சூடேற்றி விரும்பிய வடிவங்களை வடிவமைத்துவிட முடியும். இந்தத் தொழில்நுட்பத்தால் மருத்துவம் மற்றும் தொழில்துறைகளில் உபகரணங்கள் தயாரிக்கலாம். 3டி நகல் தொழில்நுட்பத்தில், இந்தத் திரவ 3டி தொழில்நுட்பத்தை ஒரு மைல் கல் என்கிறார்கள்.

இந்த வார அறிவியல் போட்டோ...

விண்வெளி - Week In Science

சூரிய கிரகணம் பூமியில் விழும் புகைப்படம். சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள விஞ்ஞானிகள், இப்புகைப்படத்தை எடுத்துள்ளனர். 


டிரெண்டிங் @ விகடன்