இன்ஸ்டாவின் மோஸ்ட் லைக்டு பிக்சர்! - `யூஜின் முட்டை’ புகைப்படத்தின் பின்னணி இதுதான்...  | mystery behind instagrams most liked egg cracked

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (05/02/2019)

இன்ஸ்டாவின் மோஸ்ட் லைக்டு பிக்சர்! - `யூஜின் முட்டை’ புகைப்படத்தின் பின்னணி இதுதான்... 

இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் பெற்ற பிரபலம் என்ற கைல் ஜென்னரின் சாதனையை முறியடித்த `யூஜின் எக்’ உருவான பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

கைல் ஜென்னர்

புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர உதவும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கடந்த ஜனவரி 4-ம் தேதி பகிரப்பட்ட `யூஜின் எக்’ புகைப்படத்தை இதுவரை 52 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன்பாக அமெரிக்க ரியாலிட்டி நட்சத்திரமும் புகழ்பெற்ற டிவி நட்சத்திரமான கிம் காதர்ஷியனின் தங்கையுமான கைல் ஜென்னர், தன் மகனான டிராவிஸ் ஸ்காட்டின் பிறந்ததை அறிவித்த புகைப்படம் 18 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. 

கைல் ஜென்னர் டிராவிஸ்

இன்ஸ்டாவில் ஜென்னரை 125 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பேர் பின்தொடரும் நிலையில், வேர்ல்டு ரெக்கார்டு எக் (world_record_egg) என்ற பெயரில் தொடங்கப்பட்ட கணக்கில் இருந்து அந்த முட்டையின் புகைப்படம் பகிரப்பட்டது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அந்தக் கணக்கினைத் தற்போது, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். ஆனால், அந்த  முட்டையின் புகைப்படம் எதற்காகப் பகிரப்பட்டது என்ற மில்லியன் டாலர் கேள்வி நெட்டிசன்களிடையே எழுந்தது. 

தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூலு தொலைக்காட்சியுடன் இணைந்து 30 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை யூஜின் முட்டையை வடிவமைத்தவர்கள் வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விளம்பர நிறுவன அதிகாரிகள் 3 பேர் மனநலன் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அந்த முட்டையை வடிவமைத்திருக்கிறார். 

யூஜின் முட்டை

யூஜின் முட்டை பேசுவதுபோல் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில்,``சமீபத்தில் நான் உடைந்து விழத் தொடங்கியிருக்கிறேன். சமூக வலைதளங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தம் என் மீது விழத் தொடங்கியிருக்கிறது’’ என்று கூறுவதுபோல் இருக்கிறது. அதேபோல், அதன் இன்ஸ்டா பதிவில், `நீங்களும் அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?. யாரிடமாவது பேசுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், லண்டனைச் சேர்ந்த விளம்பர நிறுவன அதிகாரியான கிறிஸ் காட்ஃப்ரே யூஜின் முட்டையின் வடிவத்தை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையால் சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்றுதான் ஆச்சர்யமடைந்ததாகவும் காட்ஃப்ரே குறிப்பிட்டிருக்கிறார். அந்த இன்ஸ்டா கணக்கை, சி.ஜே. பிரவுன் மற்றும் அலீஸா கான் ஆகியோருடன் இணைந்து காட்ஃப்ரே நிர்வகித்து வருகிறார்.