66 வயதில் தினமும் 75 கி.மீ சைக்கிள் பயணம்! - பால் வியாபாரியின் நெகிழ்ச்சிக் கதை | A 66 Year Old Man Travel 75 Kilometers daily By Bicycle

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (05/02/2019)

கடைசி தொடர்பு:18:17 (05/02/2019)

66 வயதில் தினமும் 75 கி.மீ சைக்கிள் பயணம்! - பால் வியாபாரியின் நெகிழ்ச்சிக் கதை

100 அடி தொலைவில் உள்ள கடைக்குச் செல்லவே நமக்கு `ஸ்கூட்டி' தேவைப்படுகிறது. திண்டிவனம் அருகே பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் காசி, தினமும் 75 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று பால் வியாபாரம் செய்துவருகிறார். அதிகாலை குளிரில் பால் கேன்களை மிதிவண்டியில் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்.

பால் வியாபாரி காசி

அவருடன் உரையாடியதிலிருந்து, ``நான் என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவே உழைக்கிறேன். அதில் என்ன சாதனை இருக்கு. எனக்கு இப்ப 66 வயசு. 1973-ல இருந்து பால் வியாபாரம் செஞ்சுட்டு வர்றேன். 45 வருஷமாயிருச்சு. காலை 6 மணிக்கு திண்டிவனத்தைச் சுத்தியுள்ள கிராமத்துக்கு பால் வியாபாரம் செஞ்சுட்டு காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்துருவேன். திரும்பவும் சாயங்காலம் 6 மணிக்குப் போய் பால் ஊத்திட்டு ராத்திரி 9, 10 மணிக்கு வந்துருவேன். 25 ரூபாய்க்கு பால் வாங்கி 30 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். 1 லிட்டர் பாலை விற்பனை செய்தால் 5 ரூபாய் கிடைக்கும்.

பால் விற்பனைக்காக சைக்கிளில் செல்லும் காசி

சராசரியாக ஒரு வேளைக்கு 50 லிருந்து 60 லிட்டர் வரை மக்களிடமிருந்து பாலைச் சேகரிப்பேன். சில நாள் அதிகமாகவும் கிடைக்கும், சில நாள் குறைவாகவும் கிடைக்கும். எனக்கு இந்தப் பால் வியாபாரம் செய்வதுதான் பிடிச்சிருக்கு. மனசு சந்தோஷமாகவும் இருக்கு'' என மகிழ்ச்சியாகச் சொல்கிறார்.

பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் கிராமங்களிலும் பால் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வயது முதிர்ந்தும் பல கிலோ மீட்டர்கள் மிதிவண்டி மிதித்து பால் விநியோகம் செய்யும் காசி பாராட்டுக்குரியவர் .