குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா... யாருக்கு சந்தோஷம்? ஆய்வு முடிவு! | Who is having more happiness in raising children? This research answers.

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:32 (06/02/2019)

குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா... யாருக்கு சந்தோஷம்? ஆய்வு முடிவு!

"குழந்தை வளர்ப்பின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.  அப்பாக்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், குழந்தை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தால், அம்மாக்களின் பளு குறையும்."

குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா... யாருக்கு சந்தோஷம்? ஆய்வு முடிவு!

குட்டீஸ்களுடன் இருக்கும்போது அம்மாக்களைவிட அப்பாக்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள். கலிஃபோர்னியா பல்கலைக்கழத்தின் சமீபத்திய ஆராய்ச்சி இதைச் சொல்லியிருக்கிறது. அப்பா என்றாலே கண்டிப்பு, தண்டிப்பு என்றிருந்த காலம் தற்போது இல்லைதான். பெருவாரியான வீடுகளில் ஒரு குழந்தைதான் என்பதால், அப்பாக்களின் ரோலே இன்றைக்கு கண்டிப்பில் இருந்து ஃப்ரெண்ட்லிக்கு மாறி விட்டது. சரி, அந்த ஆராய்ச்சியின் முழு விவரம் என்ன, அம்மாக்களைவிட அப்பாக்கள் அதிகம் ஆனந்தப்படுவதன் பின்னணி  என்ன என்று தெரிந்துகொள்ள சைக்யாட்ரிஸ்ட் கண்ணனிடம் பேசினோம். 

அப்பா

''யெஸ், நானும் அந்த ஆராய்ச்சிகுறித்து படித்தேன். அந்த ஆராய்ச்சியை மூன்று கட்டமாகப் பிரித்து செய்திருக்கிறார்கள். முதல் பிரிவில் குழந்தை இருக்கிற அப்பாக்கள், குழந்தையில்லாத அப்பாக்கள் என்று இரு பிரிவினரிடம் ஆராய்ச்சிசெய்ததில், குழந்தை இருக்கிற அப்பாக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டாம் பிரிவில் ஸ்ட்ரெஸ் அதிகமான, படபடப்பான, பிரச்னைகள் அதிகம் கொண்ட அப்பாக்கள் குழந்தைகளுடன் இருக்கும்போது, அவற்றையெல்லாம் மறந்து ஆனந்தமாக இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூன்றாவதில், குழந்தைகளுடனான தங்கள் பொறுப்பு அதிகமாக அதிகமாக, அப்பாக்களின் சந்தோஷமும் அதிகமாகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி'' என்றவர், நம் ஊரைப் பொறுத்தவரை பணம் செலவழித்து ஆராய்ச்சி செய்தெல்லாம், அம்மாக்களைவிட அப்பாக்கள் குழந்தை வளர்ப்பில் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவேண்டிய அவசியமே இல்லை என்கிறார். அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். 

சைக்காட்ரிஸ்ட் கண்ணன்''நம் நாட்டைப் பொறுத்தவரை, அந்தக் காலத்து அம்மாக்கள் வீட்டைப் பார்த்துக்கொள்வதையும் குழந்தை வளர்ப்பையுமே முக்கியமான பணியாகச் செய்துவந்தார்கள். அப்பாக்கள் வேலைக்குப் போய் வந்து பொருளாதாரத் தேவைகளைப் பார்த்துக்கொண்டார்கள்.  இந்தக் கால அம்மாக்கள், வீட்டு வேலை, அலுவலக வேலை என இரட்டைப் பளுவை சுமந்துகொண்டிருக்கிறார்கள். வேலைக்குப்போகிற காரணத்தால், வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ய வேண்டாம் என்ற நியாயம், ஏனோ பெண்களுக்கு இன்று வரை வழங்கப்படவில்லை.  இந்த நிலையில், குழந்தைகளுடன் அம்மாக்கள் இணைந்து செய்கிற வேலைகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காலையில் அவர்களை எழுப்புவது, குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்கு தயார்படுத்துவது, சாப்பாடு ஊட்டுவது, ஹோம்வொர்க் சொல்லித்தருவது போன்ற பணிகளை எல்லாம் அம்மாக்கள்தான் செய்கிறார்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்வது, கேட்கிற விளையாட்டு சாமான்களை வாங்கித் தருவது, விதவிதமாக சாப்பிட வாங்கித் தருவது, உடன் விளையாடுவது என்று குழந்தைகளின் ஃபன் ஏரியாக்கள் எல்லாம் அப்பாக்களின் கைவசம் இருக்கின்றன.

விதிவிலக்குகளும்  இருக்கலாம். இப்படியிருக்கும்போது, அந்த ஆராய்ச்சியை நம் நாட்டில் செய்தாலும் தற்சமயம் அம்மாக்களைவிட அப்பாக்கள்தான் குழந்தை வளர்ப்பில் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதுதான் என் தனிப்பட்டக் கருத்து. ஏனென்றால்,  நம் ஊரில் பெண்களுக்குத்தான் குழந்தை வளர்ப்பில் அதிக ஸ்ட்ரெஸ் இருக்கிறது என்பது கண்கூடான ஒன்று. ஆனாலும், சிலரைத் தவிர பெரும்பான்மையான ஆண்கள் இதைக் கண்டுகொள்வதுமில்லை, உதவி செய்வதுமில்லை.  

ஆனந்தம்

குழந்தை வளர்ப்பின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.  அப்பாக்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், குழந்தை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தால், அம்மாக்களின் பளு குறையும். அப்போது, அப்பாக்களைப் போலவே அம்மாக்களும் குழந்தை வளர்ப்பில் ஆனந்தமாகவே இருப்பார்கள். அந்த ஆராய்ச்சியின் இந்திய வெர்ஷனாக நான் இதைத்தான் சொல்லுவேன்'' என்று முடித்தார், சைக்யாட்ரிஸ்ட் கண்ணன். 


டிரெண்டிங் @ விகடன்