``எங்களின் நிலம் கேட்பது, உங்கள் தேவையல்ல; பேராசை!" - ஒரு யானையின் கருணை மனு | A clemency petition as told by an elephant

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:14:41 (07/02/2019)

``எங்களின் நிலம் கேட்பது, உங்கள் தேவையல்ல; பேராசை!" - ஒரு யானையின் கருணை மனு

உங்களைப் போலத்தானே எனக்கும் குடும்பம் இருக்கிறது. அதை ஏன் மறந்து விடுகிறீர்கள் மனிதர்களே?!

``எங்களின் நிலம் கேட்பது, உங்கள் தேவையல்ல; பேராசை!

நான் ஒரு யானை. ஆம், ரொம்பப் பெரிய உருவம்தான். ஆனால், நீங்கள் பார்த்து பயந்து செல்லும் அளவுக்கா நான் நடந்து கொள்கிறேன். என்னை வைத்து பூஜை செய்கிறீர்கள். நீங்களே என்னை விரட்டியும் அடிக்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை. என் வீட்டில் உங்களுக்கு இடமளித்தேனே. அதுற்கு நீங்கள் கொடுத்த பரிசு என்ன. என் வீட்டிலிருந்து என்னைப் போன்ற எத்தனையோ யானைகளைத் துரத்தி விட்டீர்கள். இன்று என்னையும் துரத்துகிறீர்கள். சரி பரவாயில்லை, அதைக் கூட நான் சகித்துக் கொள்வேன். ஆனால் நான் உங்களை துன்புறுத்துவதாகச் சொல்லுகிறீர்கள். 

நீங்களே சொல்லுங்கள், உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்? உணவுதேடி வந்தது ஒரு தவறா! வந்து சாப்பிட்டால், `அட்டகாசம்' என்கிறீர்கள். எத்தனையோ ஊசிகளைப் போடுகிறீர்கள், தந்தத்தை உடைக்கிறீர்கள், என் நண்பர்களாக இருக்கவேண்டிய யானைகளை அடிமையாக்கி அவர்களை வைத்தே என்னை வெளியேறச் செய்கிறீர்கள். உங்களுக்குள் நீங்கள் சண்டை போட்டுக் கொள்வது போலவே எங்களையும் சண்டை போட்டுக்கொள்ள வைக்கிறீர்கள். அது போதாதென என் சகோதரர்களை அடியாட்களாக்கி என்மீது திருப்பி விடுகிறீர்கள். 

யானை

உங்களைப் போலத்தானே எனக்கும் குடும்பம் இருக்கிறது. அதை ஏன் மறந்து விடுகிறீர்கள் மனிதர்களே..!? என்னைப் போன்ற யானைகளால்தான் ஒரு காட்டையே உருவாக்க முடியும், உங்களால் முடியமா? ஒவ்வொரு நாளும் எத்தனை கிலோ மீட்டர் நடக்கிறேன் தெரியுமா! எல்லாம் உணவுக்காகத்தான். உங்களைப் போல் அடுத்தவர் இடத்தை அபகரிக்க வேண்டுமென்ற பேராசைக்காக அல்ல. போகின்ற வழியில் இலைகளை, கிளைகளை, பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறேன். யானை வயிற்றில் செரித்தது உரமாகும், செரிக்காதவை மரமாகும். என் மூலமாகப் பல விதமான விதைகள் பரவக் காரணமாக இருக்கிறேன். காட்டை உருவாக்கும் நான் எந்த விதத்தில் குறைந்தவன்? காட்டை அழித்து ஆசிரமங்களையும், அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்டும் மனிதர்களை விடவா நான் கேவலமாகி விட்டேன்? இந்த மனிதர்களா என்னைக் காப்பாற்ற போகிறார்கள்? 

என்னை எப்படியோ குடும்பத்திலிருந்து பிரித்து விட்டீர்கள். என் குடும்ப உறுப்பினர்கள் எத்தனையோ பேர் இன்று உங்கள் அடிமைகள். உங்களுக்காகப் பிச்சை எடுக்கிறார்கள். அடியாள் வேலை செய்கிறார்கள். என்னால் அவர்களை விட்டு வாழ முடியவில்லை. இருந்தும் உங்களைத் துன்புறுத்தவில்லை. நான் என்ன மலையிலிருந்து வேண்டுமென்றா கீழே இறங்குகிறேன்! குடலை அரிக்கும் பசி என்னை `போ.. போ...' என்று தள்ளுகிறது. அதனால் மலையிலிருந்து கீழே வருகிறேன். நான் வரும்போது எந்தவிதமான அட்டகாசமும் பண்ணவில்லை என்றாலும் என்னை நீங்கள் கல்லால் எறிவது, பட்டாசுகளைக் கொளுத்திப் போடுவது, தடியால் அடிப்பது, பொக்லைன் கொண்டு விரட்டுவதுமாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் என்னைப் பற்றி உங்கள் ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

மனித அடக்குமுறைகள்

சில நேரங்களில் என்னைப் பற்றிய தவறான வதந்திகளையும் பரப்புகிறீர்கள். எனக்காக உங்களில் சிலர் குரல் கொடுக்கிறார்கள் (#save_chinnathambi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது). எனக்காகப் போராடும் இயற்கை ஆர்வலர்கள் சிலர் உண்டு. எனக்கெதிராகச் செயல்படும் முதலாளிகளும் அவர்களை ஆதரிக்கும் அதிகாரிகளும் பலர் உண்டு. என்னை 20 அடி கூண்டினுள் அடைத்து வைக்கவே ஆசைப்படுகிறீர்கள். நானோ சுதந்திரமாக இருந்துவிட்டேன். என் சுதந்திரத்தைக் கெடுத்து அடக்கியாளப் பார்க்கிறீர்கள். எனக்குப் பழக்கம் இல்லாத உணவுகளைத் தரப்போகிறீர்கள். என் சுதந்திரம் இனி இன்னொருவர் கையில், அவர் என்னைக் கட்டுப்படுத்தப் போகிறார் என்று நினைத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

 

 

எதற்கெடுத்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலை நம் தாய் என்று சொல்லுவீர்களே! அந்தத் தாய் வயிற்றுப் பிள்ளையை அவளின் தலைமகனான யானையை அவளிடமிருந்து அடித்துத் துரத்துகிறீர்கள். ``தாய்க்குத் தலைமகன்" என்பார்கள். என்னைப் பிரித்துவிட்டால் என் தாய் மட்டும் நன்றாக இருப்பாளா! வேதனையிலேயே நொந்து நோய்வாய்ப்பட்டு விடுவாளே! இதுதானா உங்கள் நியாயம் மனிதர்களே? என்னைப் பிரித்து என் தாயை அழிப்பதுதான் உங்கள் தர்மமா மனிதர்களே! ஓ...! இதுதான் மனிதாபிமானமோ? உங்களில் ஒருவரான `காந்தி' சொன்னார் ``பூமி எல்லா உயிர்களுக்கும் போதுமானதைத் தருகிறது. ஆனால், தனி மனிதனின் பேராசைக்கு அது போதுமானதாக இருக்காது" 

என்னை விரட்டியடிக்கும் அடிமைப்படுத்த துடிக்கும் மனிதர்களே! உங்கள் பேராசைக்காக எங்களை அழிக்காதீர்கள். அதுவே என் கருணை மனு.


டிரெண்டிங் @ விகடன்