க்ளைபோஸேட் பூச்சிக்கொல்லிக்கு இனிமேல் தடை - கேரளா அரசு அதிரடி! | Kerala bans glyphosphate and its products...

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (06/02/2019)

கடைசி தொடர்பு:21:10 (06/02/2019)

க்ளைபோஸேட் பூச்சிக்கொல்லிக்கு இனிமேல் தடை - கேரளா அரசு அதிரடி!

க்ளைபோஸேட். சட்டப்படி இந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி, காபி விவசாயத்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த வேதிமம் மற்ற விவசாய நிலங்களிலும் அதிக விளைச்சலுக்காகப் பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது, அன்னாசி பழம் மற்றும் வாழைத் தோப்புகளில் வரும் பூச்சிகளை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிமம் பயன்படுத்தினால் வீட்டைச் சுற்றியும் தோட்டத்தைச் சுற்றியும் வளரும் புற்கள்கூட முளைப்பதில்லை. மண் வளம் அந்த அளவுக்குப் பாதித்துவிடுகிறது. 

பூச்சிக்கொல்லிக்குத் தடை

இந்த வேதிமத்தின் பயன்பாடு மற்றும் அதன் தாக்கம் குறித்த ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கேரளப் பல்கலைக்கழகத்திடம் கேட்கப்பட்டது. அதன்படி மேற்குறிப்பிட்ட தகவல்களோடு அதன் பயன்பாடு குறித்த தகவலும் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்ற பூச்சிக்கொல்லிகளை விடவும் அதிகமாக இந்த க்ளைபோஸேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேரள விவசாயத்தில் மற்ற ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை விடவும் இவை 71 சதவிகிதம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் அதிகமாக இருப்பதாலும் இதன் பயன்பாடு விகிதம் மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் தற்போது கேரள அரசு இந்தப் பூச்சிக்கொல்லிக்குத் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து இதன் விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு கேரளாவில் தடை செய்யப்படுகிறது. க்ளைபோஸேட் கலந்துள்ள பொருள்கள் அனைத்துக்குமே இந்த உத்தரவின் அடிப்படையில் தடை விதித்துள்ளது கேரள அரசு. இந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி அமெரிக்க கம்பெனியான மொன்சாண்டோ என்ற நிறுவனத்துடையது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிறுவனத்தின் மற்றுமொரு பொருளான க்ளைசெல் என்ற இன்னொரு க்ளைபோஸேட் கலந்த பூச்சிக்கொல்லியும் தடை செய்யப்பட்டுள்ளது. இதோடு கேரளாவில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

அரசாணை

இந்த உத்தரவைத் தொடர்ந்து இது சார்ந்த பொருள்களை விற்பனை செய்யவும் அதைப் பற்றிய விளம்பரங்களைச் செய்யவும், விவசாயிகளிடம் அதைச் செயல் விளக்கமளிக்க யாரையும் அனுப்பக் கூடாது என்றும் விற்பனையாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது கேரள அரசு. இதனால் ஏற்படும் சூழலியல் மற்றும் உடல் ரீதியான பிரச்னைகள் குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.