நட்சத்திரங்களின் திசையைக் கண்டறிந்தவர்... வில்லியம் ஹக்கின்ஸ் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு | Birthday special article about William Huggins and his contribution to science

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (07/02/2019)

கடைசி தொடர்பு:08:42 (07/02/2019)

நட்சத்திரங்களின் திசையைக் கண்டறிந்தவர்... வில்லியம் ஹக்கின்ஸ் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

ஹக்கின்ஸின் காலத்துக்குப் பிறகு, அவருடைய நோட்டுப் புத்தகங்கள் ஆராயப்பட்டபோது, அவரது அசுர உழைப்பு புலப்பட்டது.

நட்சத்திரங்களின் திசையைக் கண்டறிந்தவர்... வில்லியம் ஹக்கின்ஸ் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

ரலாற்றில் பல நூற்றாண்டுகளாக, நாம் வாழும் பூமியைத் தட்டையான வடிவம் கொண்டதாகவே மனிதர்கள் கருதி வந்தார்கள். அது போலவேதான் வானமும் தட்டையாக இருப்பதாகவும், நட்சத்திரங்கள் அதன் மீது ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை கருதப்பட்டது. இந்த நிலை மாறியது 1800-களில்தான். மாற்றிக் காட்டியவர் சர் வில்லியம் ஹக்கின்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளரான இவர், 1824-ம் ஆண்டு இதே நாளில் (பிப்ரவரி 7) பிறந்தார். இன்றளவும் வானியல் துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெட்ரிக் பெசல் போன்ற அறிவியலாளர்களுக்கு நட்சத்திரங்கள் குறித்த தெளிவு பிறக்கத் தொடங்கியது. வானத்தில் இரவில் தெரியும் நட்சத்திரங்கள் யாவும் சூரியனைப் போன்றவையே எனவும், அவை வானத்தில் உள்ள சிறு புள்ளிகள் அல்ல எனவும் அவர்கள் ஊகிக்கத் தொடங்கி இருந்தார்கள். ஆனால், அவை வெறும் அனுமானங்களாகவே இருந்தன. தங்கள் அனுமானம் உண்மையானதுதான் என நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் அன்றைய அறிவியலாளர்களிடம் இல்லை. உதாரணமாக, சூரியன் ஒரு நட்சத்திரம்தான் என்பதை எப்படி நிரூபிப்பது? சூரியன் எந்தத் தனிமம் மூலம் உருவாகி உள்ளதோ, அதே தனிமம்தான் நட்சத்திரங்களிலும் இருப்பதாகக் காட்ட வேண்டும். நட்சத்திரங்கள் வானத்தில் உள்ள சிறு புள்ளிகள் அல்ல என்பதை எப்படி நிரூபிப்பது? நட்சத்திரங்கள் வானத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால்தான் மிகவும் சிறியதாகத் தெரிகின்றன. அதற்கு, பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலான தூரத்தைக் கணக்கிட வேண்டும். இவற்றுக்கான வழிமுறைகள் குறித்து அன்றைய அறிவியலாளர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தனர்.

வில்லியம் ஹக்கின்ஸ்

வானியல் துறையில் அளவுகடந்த ஆர்வமும் பற்றும் கொண்டிருந்த வில்லியம் ஹக்கின்ஸ், அன்று அத்துறையில் நிலவிவந்த கேள்விகளுக்கு விடைகாணும் உந்துதலைப் பெற்றார். இந்தத் தேடலுக்காக, லண்டன் நகரத்தில் அவரது பூர்வீக சொத்தாக இருந்த ஒரு ஜவுளிக்கடையை விற்றுவிட்டு ஓர் ஆய்வகத்தை உருவாக்கினார். ஹக்கின்ஸின் இந்தச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த அவரின் மனைவி மார்கரெட், பிற்காலத்தில் அவரது ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க பங்கையும் ஆற்றியிருக்கிறார்.

வில்லியம் ஹக்கின்ஸ், சூரியனிலும் நட்சத்திரங்களிலும் ஒரே தனிமம் இருப்பதைத் தன் ஆய்வு மூலம் உறுதிசெய்தார். இதற்காக, தொலைநோக்கியையும் (Telescope) நிறமாலை காட்டியையும் (Spectroscope) அவர் பயன்படுத்தினார். தொலைநோக்கியைக் கொண்டு நட்சத்திரத்தின் ஒளியைப் பதிவு செய்து, நிறமாலைகாட்டியைக் கொண்டு அந்த ஒளியில் உள்ள நிறங்களை அடையாளப்படுத்தினார். நிறமாலையில் காட்டப்படும் நிறத்தை வைத்து தனிமம், சேர்மம் போன்ற வேதியியல் உட்பொருள்களைக் கண்டுபிடித்துவிட முடியும். அப்படித்தான், ஹக்கின்ஸ் சூரியனும் வானத்தில் உள்ள பிற நட்சத்திரங்களும் ஒரே தனிமத்தால் ஆனவை; அது ஹைட்ரஜன்தான் என நிரூபித்தார். எனவே, சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என உறுதி செய்யப்பட்டது.

இன்று நம்மிடம் இருக்கும் புகைப்பட தொழில்நுட்பங்கள் மூலமும், துல்லியமான அளவீட்டுக் கருவிகள் மூலமும் வானியல் ஆராய்ச்சிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வில்லியம் ஹக்கின்ஸ், தன் காலத்தில் வெறும் கண்களையும், எளிமையான தொலைநோக்கியையும் மட்டுமே நம்பி அளவீடுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹக்கின்ஸின் காலத்துக்குப் பிறகு அவருடைய நோட்டுப் புத்தகங்கள் ஆராயப்பட்டப்போது, அவரது அசுர உழைப்பு புலப்பட்டது. இன்று நாம் பள்ளிக்கூடத்தில் இயற்பியல் பரிசோதனைகள் செய்யும்போது ஒரே ஓர் அளவீட்டுடன் முடித்துவிட மாட்டோம் அல்லவா? குறைந்தது நான்கைந்து அளவீடுகளையாவது எடுத்து, அதன் சராசரி மதிப்பு என்னவோ, அதைத்தான் முடிவாக எழுதுவோம். அத்தகைய உழைப்பை ஹக்கின்ஸ் தான் எடுத்த எண்ணற்ற அளவீடுகள் ஒவ்வொன்றிலும் செலுத்தி இருக்கிறார்.

நட்சத்திரங்கள்

அந்த உழைப்பைத் தொடர்ந்து செய்து வந்த வில்லியம் ஹக்கின்ஸ், 1868-ம் ஆண்டு மற்றுமொரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். பல்வேறு நட்சத்திரங்களை ஆண்டுக்கணக்கில் கண்காணித்ததில், அவற்றின் நிறமாலை வரிகள் (spectral lines) இடம் மாறுவதை அறிந்து கொண்டார். அதை ஒரு தொடக்கமாகக் கருதி மேலும் ஆழமான ஆராய்ச்சிகளை நடத்தினார். முடிவில் சில நட்சத்திரங்கள் பூமியை நோக்கி நகர்வதையும், சில நட்சத்திரங்கள் அதற்கு எதிர்த் திசையில் நகர்வதையும் கண்டுபிடித்தார். வானியல் துறையில் இக்கண்டுபிடிப்பு மாபெரும் புரட்சியாகும்.

இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் பிரபஞ்சம் எனும் கோட்பாடே அந்தக் கண்டுபிடிப்பிலிருந்துதான் தொடங்குகிறது. அதைக் கண்டுபிடித்தவரின் பெயரைத்தான் உலகம் மறந்துவிட்டது. நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள் அளவுக்கு வில்லியம் ஹக்கின்ஸ் இப்போது பிரபலமாக இல்லை. அவரது பிறந்தநாளான இன்று, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரது நினைவைப் போற்றுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்