Published:Updated:

"மருதநாயகம்ல நடிச்சேன் தம்பி!" - கதைகள் பல சொல்லும் பானைக்காரத் தாத்தா

"திருநீர்மலையில ஷூட்டிங் நடந்துச்சு. கமல் எங்ககிட்ட வந்து இப்படியெல்லாம் நடிக்கணும்னு சொல்லிக்குடுத்தாரு. காதுல வளையம், உடம்புல திருநீருனு வேற மாதிரி கமல் இருந்தாரு."

"மருதநாயகம்ல நடிச்சேன் தம்பி!" - கதைகள் பல சொல்லும் பானைக்காரத் தாத்தா
"மருதநாயகம்ல நடிச்சேன் தம்பி!" - கதைகள் பல சொல்லும் பானைக்காரத் தாத்தா

ழைப்புக்குரிய ஊதியம் கிடைக்காதபோதும், பாரம்பர்யமாகச் செய்துவந்த தொழில் அழியும்நிலையில் உள்ளபோதும், வாழ்வின் மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் வைக்காமல் வாழும் பல எளிய மனிதர்கள் இன்னும் உளர். அவர்தம் வாழ்வும் எளிய கதைகளால் நிரம்பியது. அப்படிப் பல கதைகளோடு உ(ழைத்து)ழன்றுக்கொண்டிருப்பவர்தான் அருணாச்சலம் தாத்தா.

திருவேற்காடு அருகில் இருக்கும் வடநூம்பல், குயவர்கள் நிரம்பிய சிறிய ஊர். வெயில்காலத்திலும் மண்வாசனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் கூடாரம். சின்னஞ்சிறிய தெருக்களில் எதில் நுழைந்தாலும் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பானைக் குவியல் நம்மை வரவேற்கும். களிமண், பெரும்மலையைப்போல் குவிந்துகிடக்கும். வீடுகளின் முற்றத்தில் இரும்புச் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கும். சக்கரத்தின் மேல் இருக்கும் சாதாரண களிமண்ணுக்கு, கைகளால் வடிவம் கொடுத்துக்கொண்டிருந்த அருணாச்சலம் தாத்தா, மனம்விட்டுப் பேசத் தொடங்கினார்.

``சொந்த ஊர் காஞ்சிபுரம். என் அப்பாவும் இதே வேலைதான் செஞ்சாரு. குடும்பக் கஷ்டத்தால படிக்க முடியல. அண்ணே, அக்கானு பெரிய குடும்பம். ஆனா, இப்போ யாரும் இல்லை... நான் மட்டும்தான். என் புள்ளைங்களை இந்த வேலை செஞ்சுதான் படிக்கவெச்சேன். 20 வயசுல ஆரம்பிச்சேன். இப்போ 60-ஐ தாண்டியாச்சு" என்று நகைத்த வாயில் புகைத்தபடி கதைப்பதைத் தொடர்ந்தார்.

``சின்ன வயசுலயிருந்தே ஆந்திரா, கர்நாடகா, கேரளானு சுத்திக்கிட்டே இருப்பேன். எல்லாமே சீஸன் வேலைங்கதான். நிரந்தரமா ஒரு வேலை வேணும்னு பானை செய்றதைக் கத்துக்கிட்டேன். பானை செய்றது எப்படினு மனசுல பதியணும். அப்பதான் பானை செய்ய முடியும். ஆரம்பத்துல உடைஞ்சு உடைஞ்சி போகும். அப்பா வேலை செய்யும்போது பார்த்துக்கிட்டே இருப்பேன். அஞ்சு, ஆறு வருஷத்துல நானும் நல்லா செய்ய ஆரம்பிச்சுட்டேன். கண்ணுதான் கணக்கு, கைதான் அளவு. அப்படியே செய்ய ஆரம்பிச்சிருவேன். களிமண்ணை மிதிக்கணும், வெயில்ல காயவெச்சு, தட்டி, சாயம் பூசணும் அவ்ளோ வேலை இருக்கு. இந்தத் தெருவுலேயே 40, 50 குடும்பம் பானை செய்துட்டு இருந்தாங்க. எல்லாரும் வேலைக்குப் போயிட்டாங்க. ஒருசில குடும்பம்தான் வேற வழியில்லாம இப்பவும் பானை செய்துட்டு இருக்குது.

எனக்கு படம்னா ரொம்பப் பிடிக்கும். எம்.ஜி.ஆரோட பெரிய ரசிகன் நான். மூணு மைல்... முப்பது மைல்னு... சைக்கிள்லயும் நடந்தும் தியேட்டருக்குப் போய் எப்படியாவது படம் பார்த்திருவேன். படத்துல நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. கமல்ஹாசனோட `மருதநாயகம்' படத்துல நடிச்சிருக்கேன். கமல்தான் கேமராவுல படம்பிடிச்சாரு. பானை செய்யக்கூடிய கேரக்டர். `மகாராணி வருவாங்க, கையெடுத்துக் கும்பிடணும்' என்று சொல்லிக்கொண்டு, ஒரு வணக்கத்தையும் போட்டுச் சிரித்தார். திருநீர்மலையில ஷூட்டிங் நடந்துச்சு. கமல் எங்ககிட்ட வந்து எப்படியெல்லாம் நடிக்கணும்னு சொல்லிக்குடுத்தாரு. காதுல வளையம், உடம்புல திருநீருனு வேற மாதிரி கமல் இருந்தாரு. 10 மணியில இருந்து 6 மணி வரைக்கும் ஷூட்டிங் நடந்துச்சு. கமலால படத்துல நடிக்கணும்கிற ஆசை நிறைவேறிருச்சு. ஆனா, படம் வெளிவரலைங்கிறது வருத்தமாயிருக்கு" என்றார் வருத்தம் கலந்த முகத்துடன்.

``60 வயசாச்சு. இன்னும் எப்படி இவ்வளவு வேலைசெய்றீங்க?'' 

``இப்ப செய்யலைனா எப்ப செய்றது? அதான் செய்றேன்'' என்று வேடிக்கையாகச் சொல்லி, ``இதுதான் நம்ம பொழப்பு. இதைச் செஞ்சாதான் சாப்பிட முடியும். நம்மல நம்பி நாம வாழ்ந்தாதான் வாழ்க்கை இன்னும் நல்லாயிருக்கும்" என்று வயதான எனர்ஜியுடன் வேலையைத் தொடர்கிறார். கலைக்காகவே உருவான கை, துடிப்பான நடை, துல்லியமான பார்வையுடைய இவர், சாந்தமான தோற்றமுடையவர். 40 வருடமாக மண்பானைகளைச் செய்துவருகிறார். தன்னுடைய 60 வயதிலும் ஒரு நாளைக்கு 100 பானைகளைச் செய்கிறார்!

வடநூம்பல் பகுதியில் அதிகம் குயவர்கள் இருப்பதால், விழாக்காலங்களில் புகைப்படங்கள் எடுக்க புகைப்படக்காரர்கள் அதிகம் செல்வதுண்டு. பலர், புகைப்படங்களை எடுக்க அனுமதிப்பதில்லை. மண்பானைகளை புகைப்படம் எடுத்தால், சரியாக வியாபாரம் நடைபெறாது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆச்சர்யத்துடன் நாம் பார்க்க, வாஞ்சையாக மண்ணை மிதித்தபடியே `டாட்டா' சொன்னார் அருணாச்சலம் தாத்தா. அவரது கைகள் பானையை வடிவமைக்க, வாகாக களிமண் சுழன்று பானையாகக் குவிந்து நின்றது.