கார்புரேட்டருக்கு பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - BS-VI குறித்து ஹோண்டா முடிவு! | Honda to Ditch Carburetors and Go Ahead with Fuel Injection System for BS-VI Norms

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (10/02/2019)

கடைசி தொடர்பு:08:30 (10/02/2019)

கார்புரேட்டருக்கு பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - BS-VI குறித்து ஹோண்டா முடிவு!

தலைப்பில் இருக்கும் விஷயம் வருத்தத்தை அளித்தாலும், அதுவே காலத்தின் கட்டாயம்! சில நாள்களுக்கு முன்பு அறிமுகமான CB300R பைக்கின் அறிமுக விழாவில், BS-VI மாசு விதிகள் பற்றி ஹோண்டா நிறுவனத்தாரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு 'நாங்கள் விற்பனை செய்யும் அனைத்து மாடல்களிலும், கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைச் சேர்ப்போம்' எனப் பதிலளித்தனர்.

ஹோண்டா

தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவில் மொத்தம் 24 மாடல்களை ஹோண்டா விற்பனை செய்கிறது. இதில் 16 பைக்ஸ் மற்றும் 8 ஸ்கூட்டர்கள் அடக்கம். ஸ்கூட்டர்களில் 110சிசி அல்லது 125சிசி இன்ஜின் ஆப்ஷன் இருந்தால், பைக்குகளில் 110சிசி - 125சிசி - 150சிசி - 160சிசி - 250சிசி - 300சிசி இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. இதில் 250சிசி மற்றும் 300சிசி பைக் இன்ஜின்களைத் தவிர்த்து, மீதமிருக்கும் அனைத்துமே கார்புரேட்டரைக் கொண்டிருக்கின்றன. எனவே BS-VI மாசு விதிகளுக்கு உடன்படும் விதமாக,  அனைத்து மாடல்களுமே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

Scooter

கடந்த 2016-ம் ஆண்டில், வாகனத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஃப்யூல் சிஸ்டம் உற்பத்தியாளர் -களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், BS-V மாசு விதிகளைத் தவிர்த்துவிட்டு ஏப்ரல் 1 - 2020 முதலாக BS-VI மாசு விதிகளை இந்தியா பின்பற்றத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. எனவே அந்த தேதிக்குப் பிறகு, BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டிருக்கும் கார்கள் அல்லது டூ-வீலர்களை இந்தியாவில் தயாரிக்கவோ விற்பனை செய்யவோ முடியாது! டூ-வீலர்களில் எதிர்பார்த்தபடியே, கார்புரேட்டர் கொண்ட மாடல்களுடன் ஒப்பிடும் போது, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்ட மாடலின் விலை அதிகமாகவே இருக்கும். 125சிசி பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்யும் கிளாமர் SVE பைக்கை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இதில் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 64,100 ரூபாய் என்றால், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 69,100 ரூபாய். அதாவது 5,000 ரூபாய் வித்தியாசம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க