நிறம் மாறும் கடல்கள்... நிஜமாகிறதா ஆறாவது பேரழிவு! | Oceans are changing their colors... a sign for sixth mass extinction?

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (10/02/2019)

கடைசி தொடர்பு:17:53 (10/02/2019)

நிறம் மாறும் கடல்கள்... நிஜமாகிறதா ஆறாவது பேரழிவு!

உலக வெப்பமயமாதல் பைட்டோ ப்ளாங்டன் எனும் கடல் வாழ் தாவர உயிரினத்தில் ஏற்படுத்தும் இந்தத் தாக்கம் அதோடு மட்டும் நின்று விடாது. கடலின் உணவுச் சங்கிலியையே மிகவும் கடுமையாக பாதிக்கும்.

நிறம் மாறும் கடல்கள்... நிஜமாகிறதா ஆறாவது பேரழிவு!

காலநிலை மாற்றம் கடலைப் பெருமளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது. கடலில் நடக்கும் மாறுதல்கள் மற்றும் நடக்கப்போகும் மாறுதல்கள் குறித்துப் பல ஆய்வுகளை ஆய்வாளர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையதொரு ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்தது. இருபத்தோறாம் நூற்றாண்டின் முடிவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெருங்கடல்கள் நிறமாற்றம் அடையுமாம். அமெரிக்காவின் எம்.ஐ.டி (MIT) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு முடிவில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. 

பைட்டோ பிளாங்டன் என்ற மிதவை உயிரினம் கடலின் மேற்பரப்பில் வாழும். காலநிலை மாற்றம் வருங்காலத்தில் பெருங்கடல்களில் வாழும் அந்த பைட்டோ ப்ளாங்டன் எனும் தாவர மிதவை உயிரிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பைட்டோ பிளாங்டன் போன்ற மிதவை உயிரிகள் பெருங்கடல்களின் மேற்பரப்பில் மிதந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும். அவற்றின் இருப்பில் ஏற்படும் பாதிப்புகள் கடல் நிறத்தில் மட்டுமின்றி கடல்வாழ் உயிர்களின் உணவுச் சங்கிலியிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். பைட்டோ ப்ளாங்டன்தான் கடலில் வாழும் பல உயிரினங்களுக்கு உணவாகின்றன. அவை கடலில் வாழும் இறால், கடல் நத்தைகள், ஜெல்லி மீன்கள், திமிங்கிலம் உள்ளிட்ட பல உயிரினங்களுக்கு உணவுப்பொருளாகும். உலக வெப்பமயமாதல் பைட்டோ ப்ளாங்டன் எனும் கடல் வாழ் தாவர உயிரினத்தில் ஏற்படுத்தும் இந்தத் தாக்கம் அதோடு மட்டும் நின்று விடாது. கடலின் உணவுச் சங்கிலியையே மிகவும் கடுமையாக பாதிக்கும் என்று இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கவலை அடைகின்றனர். 

நிறம் மாறும் கடல்கள்

அதன் விளைவாகப் பெருங்கடல்களில் நீலம் மற்றும் பச்சை போன்ற நிறங்கள் மேலும் அடர்த்தியாகும். 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' எனும் இதழில் அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி பல்கலைக்கழகம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்கள் உதவியோடு பெருங்கடல்களில் ஏற்படும் இந்த நிறமாற்றத்தை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பைட்டோ ப்ளாங்டன் எனும் கடல் வாழ் தாவர உயிரிகள் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலுக்கு எந்த மாதிரியான எதிர்வினை ஆற்றுகின்றன என்பது குறித்துத் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர் எம்.ஐ.டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள். பைட்டோ ப்ளாங்டன் சூரிய ஒளியை எவ்வாறு பெற்றுக் கொண்டு பிரதிபலிக்கின்றன என்பது குறித்தும் நிறமாற்றத்திற்கு எவ்வாறு வழிவகுக்கின்றன என்பன போன்ற ஆய்வுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். அந்த ஆய்வுகள் பல தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளன.

பைட்டோ பிளாங்டன்

பொதுவாகப் பார்க்கையில் தண்ணீர் நிறமற்றதுதான். ஆனால் பெருங்கடலைப் பொருத்தவரை அப்படியில்லை. அதன் மீது பட்டு எதிரொளிக்கும் சூரிய ஒளியைப் பொறுத்தே அதன் நிறம் அமைகிறது. கடல் நீர் சூரிய ஒளியின் எல்லா நிறங்களையும் பெற்றுக்கொண்டு நீல நிறத்தைத் தவிர மற்ற எல்லா நிறங்களையும் பிரதிபலித்துவிடும். அதனால்தான் அது நீல நிறமாகவே நம் கண்களுக்குத் தெரிகிறது. வெப்பமயமாதல் காரணமாக துருவ மற்றும் பூமத்திய ரேகைப் பகுதிகளில் பைட்டோ ப்ளாங்டன் வளர்ச்சி வழக்கத்தை விட அதிகமாகும். பைட்டோ ப்ளாங்டன் ஆனது சூரிய ஒளியின் நீலநிற ஒளியைத் தவிர்த்துப் பச்சை ஒளியைப் பிரதிபலிப்பதால் கடல் நீர் அந்தப் பகுதிகளில் மட்டும் பச்சை நிறமாகவே தெரியும். ஆகவே பச்சை நிறமாகக் காட்சியளிக்கும் கடல் பைட்டோ பிளாங்டன் நிறைந்தது என்பதை நாம் ஓரளவு புரிந்துகொள்ளலாம்.

ஆய்வின் முடிவில் இருபத்தோறாம் நூற்றாண்டில் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெருங்கடல்கள் நிறமாற்றத்திற்கு உள்ளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நிறமாற்றம் என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து சென்றுவிட முடியாது. அந்த நிறங்கள்தான் கடலில் வாழும் பைட்டோ பிளாங்டனின் இருப்பை எடுத்துரைக்கின்றன. “வெறும் கண்ணுக்குத் தெரியும் அளவுக்குப் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால் வெப்பமண்டலப் பகுதிகளில் பைட்டோ ப்ளாங்டன் வளர்ச்சி குறையும். அதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கடல்நீரின் நிறம் அடர்ந்த நீலத்துக்கு மாறும். துருவ மற்றும் பூமத்தியரேகைப் பகுதிகளில் பைட்டோ ப்ளாங்டன் வளர்ச்சி அதிகமாகும். அதன் காரணமாக அடர் பச்சை நிறமாகவும் மாறும். பைட்டோ ப்ளாங்டன் அதிகளவு இருக்கும் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் நிகழும்” எனத் தெரிவித்தார் எம்.ஐ.டி பல்கலைக்கழகத் தலைமை ஆராய்ச்சியாளர் ஸ்டீபனீ  டட்கிவிக்ஸ் (Stephanie Dutkiewicz). 

பெருங்கடல்கள்

ஏற்கனவே உலக வெப்பமயமாதலும் காலநிலை மாற்றங்களும் பல்வேறு பேரிடர்களுக்கு வழி செய்தவாறு வீரியமடைந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியிருக்க இப்போது வெளிப்பட்டுள்ள இந்தத் தகவல்கள் கடலியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த இரண்டும் இன்னும் என்ன விளைவுகளை எல்லாம் ஏற்படுத்த உள்ளதோ என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் எழத் துவங்கியுள்ளது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். இதுதான் இயற்கை, நீங்கள் அதற்குச் செய்வதையே உங்களுக்குத் திருப்பிச் செய்யும். இப்போது அது வட்டியும் முதலுமாகத் திருப்பித் தந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு 5 முறை இந்தப் பூமி அழிந்த போதெல்லாம் இயற்கையான பேரிடர்களால் அழிந்துள்ளது. ஆனால், இந்த முறை அப்படி இருக்காது!


டிரெண்டிங் @ விகடன்