40 மடங்கு அதிகரித்த புதுப்பிக்கத்தக்க மின்சக்தி... அணு ஆற்றல் இன்னும் நமக்குத் தேவைதானா? | It's time to Rethink our Nuclear power policies

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (11/02/2019)

கடைசி தொடர்பு:08:52 (12/02/2019)

40 மடங்கு அதிகரித்த புதுப்பிக்கத்தக்க மின்சக்தி... அணு ஆற்றல் இன்னும் நமக்குத் தேவைதானா?

குறைவான செலவில், குறுகிய காலத்தில் தேவையான அளவு புதுப்பிக்கத்தக்க சக்தி கிடைக்கும் போது, நமக்கு ஏன் ஆபத்தான அணு மின்சாரம்?

40 மடங்கு அதிகரித்த புதுப்பிக்கத்தக்க மின்சக்தி... அணு ஆற்றல் இன்னும் நமக்குத் தேவைதானா?

மிதமிஞ்சி அதிகரித்து வரும் இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தைப் போலவே, இந்தியாவின் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாம் பயன்படுத்தும் கைக்குட்டையில் இருந்து காலணி வரை அனைத்தையுமே உற்பத்தி செய்ய மின்சாரம் மிக அவசியம் என்பதை நாம் உணர்தல் வேண்டும். நாம் பயன்படுத்தும் பொருள்கள் அதிகரித்துக்கொண்டே செல்ல, நம் மின்சாரத் தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

பெருகி வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின்னியல் பொறியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

அவ்வகையில், மின்சார உற்பத்திக்கு மாதம்தோறும் புதிய மின் திட்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இது வாடிக்கையான விடயம்தான். இதில் தற்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், 2018-19 நிதியாண்டில், கடந்த மூன்று காலாண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில், அதாவது ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 உட்பட்ட காலத்தில், நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் 120 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மூலம் பெறக்கூடிய மின்சாரம் 5040 மெகாவாட் அதிகரித்துள்ளது. அதாவது, நிலக்கரி சார்ந்த மின்சாரத்தைவிட, 40 மடங்கு அதிகமாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகரித்துள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. அவை,

1. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் நிலக்கரி சார்ந்த மின்சாரத்தைவிட மிகவும் குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடிகிறது.

2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களின் கட்டுமானம், மிகவும் விரைவாக முடிவடைந்து விடுகிறது.

3. காற்று மாசு, நீர் மாசுபடுதல் போன்ற பிரச்னைகள் இல்லாத திட்டம் என்பதால், நிலம் கையகப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் இல்லை.

மேற்கூறிய காரணங்களால், தனியார் முதலீட்டாளர்களும் வங்கிகளும், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுகின்றன.

அதிகரிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி

மாறாக, நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள், மிக அதிக முதலீடு தேவைப்படுவதாலும், அதிக காலம் எடுப்பதாலும், லாப விகிதம் குறைவாக உள்ளது. அதேவேளை, ஏதேனும் பழுது ஏற்பட்டாலும், உற்பத்தி பாகங்கள், அபிவிருத்தி திட்டங்கள் என அனைத்துமே அதிக செலவு வைப்பது, முதலீட்டாளர்களைச் சற்று பின்வாங்க வைக்கிறது. இதுபோன்ற விடயங்களின் வெளிப்பாடு தான் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி அதிகரிக்கக் காரணம்.

தனியார் முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, நிலக்கரியை ஆஸ்திரேலியாவில் இருந்தோ இந்தோனேசியாவில் இருந்தோ, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள தரகர்கள் மூலம் கொண்டு வருவதற்கும் சிரமம் உள்ளது. அரசு சார்ந்த மின் நிலையங்களே நிலக்கரி தட்டுப்பாடு எனக் கைவிரிக்கின்ற வேளையில், தனியார் முதலாளிகளுக்கு அது ஒரு படி அதிகமான சிரமம்தான். இதுபோன்று பல காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.

உலக வங்கி நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடன் அளிப்பதில்லை என்பதுவும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. மேலும் அலையான்ஸ், ஏஎக்ஸ்ஏ போன்ற மிகப்பெரும் காப்பீட்டு நிறுவனங்கள் சில குறிப்பிட்ட நிலக்கரி சார்ந்த திட்டங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும், கள நிலவரம் இவ்வாறு இருக்க, இந்திய மத்திய அரசோ மீண்டும் ஆயிரமாயிரம் கோடிகள் ரூபாயைக் கொண்டு, மிகவும் ஆபத்தான, முறையான தொழில்நுட்பம் இல்லாத அணு மின்சாரத்தில் முதலீடு செய்கிறது. வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் முதலீடு செய்யத் தயங்கும் அணுமின் திட்டத்தில் மக்கள் பணம், சகட்டு மேனிக்கு இவ்வாறு வாரி இரைக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது.

சூரிய மின்சக்தி

கூடங்குளத்தின் முதல் அணு உலை மட்டுமே, ஆரம்பிக்கப்பட்ட 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை 35 முறைக்கு மேல் செயல் இழந்துள்ளது (ட்ரிப்பிங்) என்னும் வேளையில், இது போதாது என்று, கூடங்குளத்தில், இரண்டு, மூன்று, நான்கு என்று சகட்டு மேனிக்கு மக்களின் பணத்தைக் கொண்டு அங்கே, மேலும் அணு உலையை ஆரம்பிப்பது என்பது எந்த விதத்திலும் சரியாகத் தெரியவில்லை. இது மக்களின் பணம். இந்தப் பணத்தைப் பற்றிய அக்கறையும் உரிமையும் மக்கள் பிரதிநிதிகளாகிய, எம்.எல்.ஏ, எம்.பி-க்களிடம் இருக்க வேண்டும். தலைமுறைகளைப் பாதிக்கும் இதைப் போன்ற திட்டங்கள் நம் கண் முன்னே நடந்துகொண்டு இருக்க, நாம் தேர்ந்து எடுத்த ஆட்சியாளர்களோ வெறும் மௌன சாட்சிகளாக இருந்துகொண்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டம் யாருடைய நலனுக்காக, நம் மீது திணிக்கப்படுகின்றன. குறைவான செலவில், குறுகிய காலத்தில், தேவையான அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க சக்தி கிடைக்கும்போது, நமக்கு ஏன் ஆபத்தான அணு மின்சாரம்?

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து சொல்

பொருள்: ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க. என இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே வள்ளுவர் கூறிவிட்டார். நாம் தேர்ந்து எடுத்த மக்கள் பிரதிநிதிகள், இனியாவது இதை உணர்ந்து செயல்படுவார்களா? 

அணுசக்தி

மக்களுக்காகக் குரல் கொடுக்கும் உண்மையான பிரதிநிதிகளை, தலைவர்களாக உருவாக்கவோ, கண்டெடுக்கவோ தமிழ் மண் என்றுமே தவறியதில்லை. இதைப் புரிந்து கொண்டாவது மக்கள் பிரதிநிதிகள் செயல் ஆற்றுவார்களா? அதே வேளை, நம்முடைய கடமையாக, ஒரு சாதாரணக் குடிமகனாக, இந்தப் பூமியில் வாழும் ஒரு மனிதனாக, நாம் உபயோகிக்கும் பொருள்களைக் குறைத்து, மின்சாரத்தைச் சேமித்து, நம் கடமையை நாமும் செய்வோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கி நாமும் நகர்வோம். மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்.


டிரெண்டிங் @ விகடன்