தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்! | 6 things to notice while buying watermelon

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (14/02/2019)

கடைசி தொடர்பு:13:56 (14/02/2019)

தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

இதோ...வந்துவிட்டது தர்பூசணி சீசன். ஒரு நல்ல பழத்தை எப்படிப் பார்த்து வாங்கலாம்?

தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

குளிர் முடிந்து வெப்பம் அதிகமாகத் தொடங்கிவிட்டதால் சாலைகளிலும், சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியத் தொடங்கிவிட்டன. வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழமும் தர்பூசணிதான். இதுதவிர, விலை குறைவாகவும் கிடைப்பதால் மக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான பழங்களில் குறைகளோ அல்லது செயற்கையான வண்ணமோ இருந்தால் கடைக்காரர்களிடம் சுட்டிக் காட்டும்போது, ``எங்களுக்கு என்ன தெரியும்" எனக் கையை விரிப்பார்கள். அதனால் முழுமையாகக் குறைகளை கண்டறிந்து வாங்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தன்மை இருக்கிறது, அதை வைத்து தரமான நல்ல பழங்களாக வாங்கிக் கொள்ளலாம். 

தர்பூசணி

1. தர்பூசணியை முழுமையான பழமாக வாங்கும்போது சில நேரங்களில் வாங்கும் பழங்கள் காயாக இருக்க வாய்ப்பு உண்டு. காயை அறுத்த பின்னர் அது வீணாகிவிடும். அதனால் வாங்கும்போதே பழமாக வாங்குவதற்கு எளிய வழிகள் இருக்கின்றன. பொதுவாக மண்ணில் கொடியாகப் படரும் காய்கள் (சுரைக்காய், பூசணிக்காய்) தரைப் பகுதியில் இருக்கும். அந்தக் காய்களில் தரையில் உள்ள பாகம் மஞ்சள் வண்ணத்திற்கு மாறும். அதைப்போன்று தர்பூசணி பழமானது, நல்ல மஞ்சள் நிறத்தில் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றே பிசுபிசுப்புடன் இருக்கும். மாறாகத் தரையில் இருக்கும் பகுதி வெண்மை நிறத்தில் இருந்தால் அது முழுமையாகப் பழுக்காத பழம் எனத் தெரிந்து கொள்ளலாம். 

2. தர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், அந்தப் பழம் அடிபட்டதாக நினைத்து பெரும்பாலானோர் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தர்பூசணி பூவாக இருக்கும்போது அதிக தேன் எடுக்கும்பொருட்டு பல பூச்சிகளும், தேனீகளும் பலமுறை அணுகுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதனால், பூவின் இதழ்களில் தழும்புகள் ஏற்பட்டுவிடும். பூ, காயாகி கனியானாலும் கூட அந்தத் தழும்புகள் வலைப்பின்னலாக மாறி பழத்தில் இருக்கும். இதைக் கொண்ட தர்பூசணி பழங்கள் அதிகமான சுவையுடன் இருக்கும். தர்பூசணி பழங்கள் ஆண், பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படும். 

தண்ணீர் பழம்

3. ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடனும் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். இது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களை வாங்குகிறார்கள். நாம் வாங்கும் தர்பூசணிப் பழம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல் சராசரியான எடை கொண்ட பழமாகப் பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பழம் அளவுக்கேற்ற எடையுடன் இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். இத்தகைய பழங்களே அதிக இனிப்புடன் இருக்கும். 

4. தர்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகப் பழுப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது. 

5. விவசாயிகளில் பெரும்பாலானோர் ரசாயன உரங்களை உபயோகித்தாலும், தர்பூசணி விவசாயிகள் கொஞ்சம் அதிகமாகவே ரசாயன புழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் நைட்ரேட் உரங்களை உபயோகிப்பதால், சுமார் 3 வாரங்களிலேயே பழங்கள் பெரிதாகிவிடுகின்றன. இத்தகைய பழங்களை வாங்கி உண்பதால் நைட்ரேட் நச்சுகள் உடலில் கலந்துவிடுகின்றன. அதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. பழத்தை இரண்டாக வெட்டும்போது நடுப்பகுதி வெள்ளையாகவும், பழத்தின் தோல் பகுதிக்கும், பழத்திற்கும் இடையில் மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் அது நைட்ரேட் தாக்கம் அதிகமாக உள்ள தர்பூசணிப் பழம் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுதவிர பழங்களின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்தப் பழங்களில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம். 

தர்பூசணி

6. பழத்தை இரண்டாக வெட்டிப் பார்க்கும்போது நடுப்பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் இருத்தால், அது வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட பழமாக இருக்கலாம். அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாகப் பழுத்த தர்பூசணி பழங்கள் கொஞ்சம் கசப்பு சுவையுடன் இருக்கும். வளர்ச்சி ஹார்மோன் செலுத்தப்பட்டதாக இருந்தால் அது உடலுக்கு தீமையைக் கொடுக்கும். அதேபோல தர்பூசணிப் பழத்தின் ஒரு துண்டை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு வைக்கலாம். சிறிதுநேரம் கழித்து தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது அதிக ரசாயனம் ஏற்றப்பட்ட பழமாக இருக்கலாம். இது உடலுக்கு அதிக தீங்கை விளைவிப்பதாகும். 

கலப்படமில்லாத உணவுப் பொருட்களும், ரசாயனம் கலக்காத காய்களும், பழங்களும் கிடைப்பது அரிதாகி விட்ட காலத்தில் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தர்பூசணிப் பழங்கள் உடலுக்கு அதிகமான பலனைக் கொடுப்பதால்தான் கோடைக்காலங்களில் அதிகமாக மக்கள் வாங்குகின்றனர். அதிகமாக கிராக்கி உள்ள பழங்களில் தர்பூசணிக்கும் முக்கிய இடம் உண்டு. அதிகமாகப் புழங்கும் பொருட்களில்தானே கலப்படமும் இருக்கும். 


டிரெண்டிங் @ விகடன்