``ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் கிடைக்கும்!’’ - சத்தியன் உறுதி | Table tennis player Sathiyan Gnanasekaran Says India will get a medal in Olympic

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (15/02/2019)

கடைசி தொடர்பு:13:15 (15/02/2019)

``ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் கிடைக்கும்!’’ - சத்தியன் உறுதி

``டேபிள் டென்னிஸ் தரவரிசையில் உள்ள டாப் 10 இடங்களில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால்..."

2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில், 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றனர் இந்திய டேபிஸ் டென்னிஸ் அணியினர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் அணி, ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. இந்திய ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள், சர்வதேச அளவிலும் முன்னேறிவருகின்றனர்.

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 28-வது இடத்தில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரன், இதுவரை எந்த இந்திய வீரரும் எட்டாத இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

``ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பேட்மின்டனில் பதக்கம் வெல்லும்போது, டேபிள் டென்னிஸிலும் நிச்சயமாக பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. தரவரிசையில் முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால்,  டாப் 30-ல் இருந்து டாப் 3-வது இடத்துக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது, கடினமானது. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் உள்ள டாப் 10 இடங்களில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முன்னிலையில் உள்ள சிறந்த போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகிவருகிறேன். சூப்பர் லீக் தொடர், திறமையான டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு, ஒரு நல்ல பயிற்சி மேடை. முதல் சீசனைப்போல இரண்டாவது சீசனுக்குப் பிறகும், டேபிள் டென்னிஸ் குறித்த மக்களின் ஆர்வம் அதிகரிக்கும்" என்றார் சத்தியன் ஞானசேகரன்.  

கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளும் மக்களிடம் பிரபலமடைய காரணம், லீக் தொடர்கள். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பேட்மின்டன், வாலிபால், கபடி வரிசையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டும் இதில் இணைந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் முதல் சீசன் நடைபெற்றது. தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், இன்டர்ஸ்போர்ட்ஸ் லீக் சார்பில் நடத்தப்படும் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் இரண்டாவது சீசன், பிப்ரவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிமுக விழாவில், லீக் தொடரில் விளையாடும் அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இரண்டாவது சீசனுக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.

8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அணியும் அதே பிரிவில் இடம்பிடித்துள்ள மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அரை இறுதிக்குத் தகுதிபெறும்.

திறமையான இளம் டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏலத்தில், மொத்தம் 60 வீரர்-வீராங்கனைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராஜேஷ் 60,000 ரூபாய்க்கும், நிதின் திருவேங்கடம் 58,000 ரூபாய்க்கும் எடுக்கப்பட்டனர். மூன்று நாள் நடைபெறும் போட்டிகள், சென்னை அண்ணாநகர் வி.ஆர் மாலில் நடைபெற உள்ளன.


[X] Close

[X] Close