தொழில்நுட்ப விழாவான குருக்ஷேத்ராவில் படைப்புகளைக் காட்சிப்படுத்திய மாணவர்கள்! | Students display their technological inventions in kurukshetra

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (16/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (16/02/2019)

தொழில்நுட்ப விழாவான குருக்ஷேத்ராவில் படைப்புகளைக் காட்சிப்படுத்திய மாணவர்கள்!

கிண்டி பொறியியல் கல்லூரியில் 13-வது பதிப்பாக நடைபெறும், UNESCOவின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப விழாவான குருக்ஷேத்ராவில், மாணவர்கள் 2-வது நாளாகத் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியவண்ணம் உள்ளனர். 

 எதிர்காலம், தொழில்நுட்பத்தின் பிடியிலே என்பதை மறுக்க முடியாவண்ணம் இவர்களின் படைப்புகள் அத்தனையும் வருங்காலத்தை நோக்கியே அமைந்துள்ளன.

அணைகளின் பிரச்னைகளுக்கான புதுத் தீர்வு

அணைகள் கட்டுவதில் இருக்கும் முக்கிய சிக்கல், அதன் ஆயுட்காலம். நாளாக நாளாகப் படியும் மண் படிவம், அதன் முழுக் கொள்ளளவைக் குறைத்துவிடுவதால், அந்த அணை எதற்கும் பயன்படுத்த இயலாவண்ணம் பயனற்றுப்போகிறது. இதைக் குறைக்கும் வகையில் இவர்கள், அணைக்கு புது வடிவமைப்பைக் கொடுத்துள்ளனர். இதன்மூலம், அணையின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யலாம் என்கிற இம்மாணவர்கள், இந்த வடிவமைப்பை அரசிடமும் முன்னெடுத்துச் செல்ல உள்ளனர்.

தானியங்கி வாழை நடவு இயந்திரம்

இது, வாழை மரம் நடுவதெற்கென்று தயாரிக்கப்பட்ட புதுவகைக் கருவியாகும். இக்கருவி, இந்தியாவின் குறுநில விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்தக் கருவியே நிலத்தைத் துளைத்து குழியை ஏற்படுத்தி, அதில் வாழைக் குருத்தை வைப்பதுடன் இருபுறமும் மண்ணை நிரப்பி, வாழைகுருத்தை முழுவதுமாக மூடாமல் வெறும் அணைவை ஏற்படுத்தித் தருவதால் இக்கருவி முக்கியத்துவம் பெறுகிறது.

ECG உங்களின் விரல்நுனியில்

ஒருவரின் ரத்த ஓட்டத்தைக் கண்டறியும் ECG, இவர்களின் கண்டுபிடிப்பினால் வேறு பெரிய உபகரணம் எதுவும் இல்லாமல் விரல்நுனியின் உதவியுடனே ECG அலைவடிவத்தினைப் பெறலாம். ஒருவரின் கைபேசியின் பின்பகுதியில் கைவிரல் எங்கு படுமோ அங்கு, ஒரு சென்சாரைப் பொருத்த வேண்டும். அங்கு விரல் நுனி படும்போது பெறப்படும் தகவல்கள், தொலைபேசிக்குக் கடத்தப்பட்டு, அவரின் ECG குறித்த தகவல்கள் பெறப்படும்.

புத்தக விரும்பிகளுக்கான ஒரு கண்டுபிடிப்பு 

 நூலகம் செல்லும் எல்லோருக்கும் அந்தப் புத்தகம் எங்கு இருக்கிறது என்று தேடி கண்டுபிடிப்பதற்குள்  வெறுத்து போவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இக்கருவியில், அந்தப் புத்தகத்தின் எண்ணைப் பதிவிட்டு, அந்தப் புத்தகத்தின் அருகில் சென்றாலே இந்தக் கருவி எழுப்பும் ஒலியின் மூலம் புத்தகத்தை எளிதில் கண்டுபித்துவிடலாம்.

ஸ்மார்ட் டைபர்

அடிக்கடி குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் அபாயம் இருப்பதால், குழந்தைகளுக்கு டைபர் அணிவது வழக்கமான ஒரு செயல். ஆனால், அது சில சமயங்களில் அந்தக் குழந்தைகளுக்கு பலவித தொற்றுநோய்களை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்பு, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த பாதிப்புகளைக் கண்டறியும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ள இக்கருவி, ஏற்படும் தொற்றுகளைக் கண்டறிவதுடன், அந்த தொற்றுகுறித்த முன்னெச்சரிக்கைத் தகவலையும் தொலைபேசி வாயிலாகத் தருகிறது.

மடக்கக்கூடிய கட்டமைப்புகள்    

 எல்லோரும், வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு இருப்போம். ஆனால் இயற்கைப் பேரிடர், எல்லாவற்றையும் சுக்குநூறாக மாற்றிவிடும்போது, எந்த வகையான இருப்பிடமும் இல்லாத மக்களுக்காக வடிவமைக்கப்படிருக்கும் இந்த மடக்ககூடிய வீட்டை, மடக்கி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.  

பல்வேறு புதுக் கண்டுபிடிப்புகள், கிண்டி பொறியியல் கல்லூரியில் காண்போரை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.


[X] Close

[X] Close