`சமூக மாற்றத்துக்கு வித்திட்ட அயரா உழைப்பாளிகள்’ - அடையாளம் காட்டிய K-AWARDS! | K-AWARDS function held in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (16/02/2019)

கடைசி தொடர்பு:15:11 (16/02/2019)

`சமூக மாற்றத்துக்கு வித்திட்ட அயரா உழைப்பாளிகள்’ - அடையாளம் காட்டிய K-AWARDS!

அங்கீகாரம் தரும் உத்வேகம் போன்று வேறு எதுவும் உத்வேகம் தருவதில்லை. சமூகத்தில் இதுவரை கண்டறியப்படாத பலரின் சமூகத்தொண்டை, அவர்களின் அயரா உழைப்பை பாராட்டும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிண்டி பொறியியல் கல்லூரியின் K-AWARDS என்னும் நிகழ்வு. குருக்க்ஷேத்ரா என்னும் நிகழ்வின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்ட இந்த K-AWARDS-ன் மைய நோக்கம் “IDENTIFYING UNSUNG LEGENDS”

விருது பெற்றவர்கள் விவரம் :

சௌந்திரராஜன் (மருத்துவர்) :

மருத்துவமும் வியாபாரமாகிப்போன இந்தக் காலகட்டத்தில் தஞ்சையின் ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரியும் சௌந்திரராஜன் தன்னிடம் வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியம் தருவதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருக்கிறார். வளரும் நாடுகளில் பொதுவாகக் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு கர்ப்பிணி சாவுக்கு காரணமாகிறது என்பதை அறிந்து தன்னுடைய மருத்துவமனையிலே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான உணவு அளிக்கும் வகையில் இயற்கை வேளாண்மை செய்து அதை அவர்களுக்கு உணவோடு கொடுக்கவும் செய்கிறார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச உணவு, கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு முதலிய திட்டங்களை அரசு செயற்படுத்தும் முன்னரே இவர் இது போன்ற செயல்களைத் தன்னுடைய லட்சியப்பணியாகச் செய்வது நிச்சயம் பாராட்டுதலுக்குரியதே.

 

ஆகாஷ்வரன் V.M

யார் இந்த ஆகாஷ்வரன் என்றால் இவன் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும் திருத்தணியின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவன். ஆனால், இவனின் கண்டுபிடிப்புகள் பல போட்டிகளை வென்று பல பரிசுகளை வென்றிருக்கிறது.

E-SLIPPER என்று இவன் கண்டறிந்த கண்டுபிடிப்பு நடப்பதனால் உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தி வரும் மின்சாரம் தருகிறது. மேலும், இவன் உருவாகியிருக்கும் MULTI PURPOSE WALKING STICK உடல் குறைபாடு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என்று பலருக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வி எங்கு கற்கப்படுகிறது என்பது முக்கியமல்ல அதை நாம் எப்படிக் கற்றுக்கொள்ளுகிறோம் என்பதில்தான் கல்வியின் முழுபயனே அடங்கியுள்ளது என்பதை இது போன்ற மாணவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

 

வைஷ்ணவி, கிரிஜா மற்றும் ஷர்மிளா

இந்திய சமூகம் பெண்ணுரிமையைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அதை இந்திய சமூகம் முழுவதும் ஏற்றுகொள்ள நாள் பல பிடிக்கும் என்பதன் விளைவே இவர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டிருக்க அதைச் சீர் செய்ய எத்தனையோ சட்டமும் காவல் நிலையமும் இருப்பின் இந்திய சமூகத்தில் ஒரு பெண் காவல் நிலைய வாசலைத் தொடுவது எல்லோராலும் ஒரே போன்று பார்க்கப்படுவதில்லை. இதை உணர்ந்த இந்தப் பெண்கள் மூவரும் தங்களின் முயற்சியின் மூலம் `மதுரை சிட்டி போலீஸ்’ என்பதை உருவாகியுள்ளனர். இதன் மூலம் பெண்கள் காவல் நிலையத்துக்குச் செல்லாமலே புகார் அளிக்கும் வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இந்த 21-ம் நூற்றாண்டுப் பெண்கள்.

போதும் பொண்ணும் கண்ணனும் :

காதலோடு தொடங்கிய இவர்களின் பயணம் இன்று கனவுகளோடும் நம்பிக்கையோடும் சிறகடித்து பறந்துகொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் பலரின் நம்பிக்கையாய் திகழும் இந்த போதும் பொண்ணும் கண்ணனும் மாற்றுத்திறனாளிகள் அடுத்தவர் கையை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்னும் தடையைத் தாங்கள் உடைத்ததோடு கிட்டத்தட்ட ஆயிரம் மாற்றுத்திறனாளிகளைச் சுய தொழில் முனைவோராக மாற்றியுள்ளனர். இருளில் தவித்த பலரின் வாழ்வில் கிடைத்த ஒற்றை மின்மினியாய் விளங்கும் இவர்கள் பலருக்கு முன்மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலரின் வாழ்விலும் எங்களைப்போல மறுமலர்ச்சி வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் இந்த சமூகத்தில் திரும்பி பார்க்கப்பட வேண்டியவர்களே.

கார்த்திகேயன் கணேசன்

சமூகம் சிலரை மிகுந்த வெறுப்போடு தள்ளி வைத்துவிடுவதுண்டு. மூளை வளர்ச்சியால் பாதிக்கபட்டோரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தச் சமூகத்தின் சொல்லுக்குப் பயந்து பல பெற்றோரே தங்களின் பிள்ளைகளே ஓர் அறையில் பூட்டி வைப்பதும், ஏதேனும் காப்பகத்தில் சேர்த்து அடைக்க முயல்வதும் இயல்பாகிப்போன காலத்தில், அந்தப் பெற்றோரும் சமூகமும் புரிந்துகொள்ள வேண்டியது அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே இல்லை இல்லை... நம்மைப் போன்ற உணர்வுள்ள மனிதர்களே என்பதாகும். இப்படிப்பட்ட மூளை வளர்ச்சி குன்றியவர்களுகாக சிருஷ்டி என்னும் வேளாண் பண்ணையை உருவாக்கி அவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழுபவர்தான் கார்த்திகேயன் கணேசன். இன்று இவரின் கண்காணிப்பில் எத்தனையோ மூளை வளர்ச்சி குன்றியவர்கள் இயற்கை விவசாயிகளாக உருவாகியிருப்பது இந்த சமூகத்துக்கும் இயற்கைக்கும் நல்லதொரு தொடக்கமே.

 சாந்தா மோகன் :

பெண்கள் யோசித்துப் பார்க்கவே முடியாது (கூடாது) என்று இருந்த உயர் கல்வியில் எத்தனையோ பெண்கள் எவ்வளவோ சிரமத்துக்குப் பிறகே, தங்களின் பெயருக்குப் பின்னால் பட்டதாரி என்று போட்டுக்கொள்ள முடிந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவியான சாந்தா மோகன் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல் 25 பரன் பட்டதாரிகளின் கதையை ROOTS AND BOOKS என்று புத்தகத்தின் மூலம் சொல்லியதன் மூலம் இன்றைய பெண் சமுகத்துக்கு கல்வியின் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எங்கு எங்கோ, ஏதோ ஒரு மூலையில் தங்களின் சமூகப் பொறுப்பைஉணர்ந்து பணியாற்றிய இவர்களைத் தேடி விருது வழங்கிய கிண்டி பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்களே.

இந்த நிகழ்வில் நீயா நானா கோபிநாத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்தினார்.
 


[X] Close

[X] Close