Published:Updated:

`வில்லனான டைம் சோன்; சண்டையால் கிடைத்த பாயிண்ட்ஸ்'- பப்ஜியால் காதலை மீட்டெடுத்த ஜோடிகள்!

`வில்லனான டைம் சோன்; சண்டையால் கிடைத்த பாயிண்ட்ஸ்'- பப்ஜியால் காதலை மீட்டெடுத்த ஜோடிகள்!
`வில்லனான டைம் சோன்; சண்டையால் கிடைத்த பாயிண்ட்ஸ்'- பப்ஜியால் காதலை மீட்டெடுத்த ஜோடிகள்!

`Player’s Unknown Battle Ground' என்பதைச் சுருக்கமாக, `PUBG' என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இதுதான், அந்த விளையாட்டின் விதி. அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள இந்த PUBG விளையாட்டை இன்றைய சூழலில் விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும். ஸ்மார்ட் போன்களில் பிரபலமாகியுள்ள இதற்கு அடிமையாகி, பல இளைஞர்கள் தங்களின் நேரத்தை வீணடித்துவருகின்றனர். இதைத் தடை செய்ய வேண்டும் எனக் குரல்கள் வலுத்துவரும் அதேவேளையில் சில மாநிலங்களில் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. 

நிலைமை இப்படி இருக்க பப்ஜி விளையாட்டால் இரண்டு காதல் ஜோடிகள் கல்யாணம் முடித்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எகிப்தைச் சேர்ந்த நூர்கான்-அல்-ஹாஷிஸ் என்பவர் தான் பப்ஜி விளையாட்டு மூலம் தனது எதிர்கால துணையைக் கண்டுபிடித்துள்ளார். மற்ற வீரர்களுக்கு எதிராகத் தனது அணியுடன் விளையாடும் வேளையில் தனது துணையைக் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டதுடன் கூடவே, ``பப்ஜியில் தொடங்கியது திருமணத்தில் நிற்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகியது. எகிப்தில்தான் இப்படி என்றால் இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு முன்பே பப்ஜி விளையாட்டால் காதல் ஜோடி ஒன்று இணைந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் முகமது ரஷின். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சல்வா அகமது என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். நான்கு வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சல்வா காலேஜ் பைனல் இயர் படித்துக்கொண்டிருக்கும்போது ரஷின் வேலை நிமித்தமாக அரபு நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதனால் இவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரிந்திருந்த சமயத்தில் தான் இருவரும் பப்ஜி விளையாட ஆரம்பித்துள்ளனர். பப்ஜி விளையாட்டில் கூட்டணி போட்டு இருவரும் தினமும் எதிரிகளை வீழ்த்திய அதேவேளையில் தங்கள் காதலையும் மீண்டும் துளிர்விட செய்துள்ளனர். இருவரும் பப்ஜி மூலமாக நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்துள்ளனர். இதை விவரிக்கும் சல்வா, ``நீண்ட தூரமே இருவரும் எங்களுக்கு ஒரு பிரச்னையாக மாறியது. டைம் சோன்கள் எங்கள் வாழ்வில் வில்லனாய் வந்தது.

இருப்பினும் பப்ஜியில் நாங்கள் போட்ட சண்டையே எங்களது திருமணத்துக்கான பாயிண்டாக கிடைத்தது" என `PUBG' டோனிலேயே பேசும் இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமண வரவேற்பின்போது பப்ஜி விளையாடுவதுபோல் புகைப்படம் எடுத்த இருவரும், ``கடைசியில் என்னுடைய பப்ஜி இணையுடனே கல்யாணம் முடிந்துவிட்டது" எனப் பதிவும் இட்டுள்ளனர். `பப்ஜி'க்கு அடிமை, மனநிலை பாதிப்பு, உயிரிழப்பு என எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் இப்படி சுவாரஸ்ய காதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.