Published:Updated:

நினைவுச்சின்னமாக வடிவம் பெறும் 150 வருட பழைமையான மரம்... கல் மரமாகும் `ஆலமரம்'

மரம்
மரம்

சூளை பகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த அந்த மரத்தின் இழப்பை தாங்காத, அப்பகுதி மக்கள் மரத்தை மீட்க முயன்றனர்.

2016-ம் ஆண்டினை சென்னைவாசிகளால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆம், வர்தா புயல் சென்னையை உலுக்கி போட்ட நேரம் அது. வர்தா புயலின் கோர பிடியில் சிக்கி சாய்ந்த மரங்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் அதிகமாகும். அதிலும் புயலில் சாய்ந்த மரங்களில் மிக பழைமையான மரங்களே அதிகம்.

பல புயல்களை எதிர்கொண்டு சமாளித்து நின்ற 100 வயது மரங்கள் இந்த வர்தா புயலைச் சமாளிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தன.

அந்த இழப்பை ஈடுகட்ட இந்த நான்கு ஆண்டுகளில் பல கோடி மரங்கள் நடப்பட்டிருந்தாலும், அவற்றின் பலன் நமக்குக் கிடைக்க இன்னும் பல ஆண்டுகளாகும்.

நினைவுச்சின்னமாக வடிவம் பெறும் 150 வருட பழைமையான மரம்... கல் மரமாகும் `ஆலமரம்'

அந்த வகையில் சென்னை சூளை பகுதியில் அமைந்துள்ள ராகவேந்திரா பூங்காவில் இருந்த 150 வருட பழைமையான ஆலமரம் ஒன்று வர்தா புயலில் வேரோடு சாய்ந்தது. இதற்கு முன் பல புயல்களை எதிர்கொண்டு நின்ற அந்த மரம் வர்தா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சாய்ந்தது.

சூளை பகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த அந்த மரத்தின் இழப்பைத் தாங்காத, அப்பகுதி மக்கள் மரத்தை மீட்க முயன்றனர். நான்கு திசைகளிலும் விரிந்து பரந்திருந்த அந்த மரம் சாய்ந்ததில் பூங்காவின் மதில் சுவர்கள் முற்றிலும் சேதமடைந்தது. விழுந்த மரத்தை பல நாள்கள் போராடி மீட்டு பூங்காவில் மீண்டும் நட்ட பகுதி மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மரத்தின் வேர்கள் பட்டுப்போனதால் மரம் அதோடு மீண்டும் துளிர்க்கவில்லை.

மரம் பட்டுப்போய் 3 வருடங்கள் முடிந்த நிலையில் மரத்தை அப்புறப்படுத்த நினைத்த வேளையில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிசந்திரனுக்கு மரத்தை அப்புறப்படுத்த மனமில்லை. பட்டுப்போய் செல்லரித்த அந்த மரத்தைப் புதுப்பித்து புதுமையைப் புகுத்தி அந்தப் பூங்காவின் நினைவுச் சின்னமாக மாற்ற முடிவெடுத்தார்.

பட்டுப்போன அந்த 150 வருட பழைமையான மரத்தை சுத்தம்செய்து செல்லரிப்புக்கு மருந்து பூசி, ஆழமாகப் பள்ளம் தோண்டி, அதில் மரத்தை நட்டு சிமென்ட் கலவை கொண்டு மூடி அந்த மரத்தைச் சுற்றி இருக்கைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த மரத்துக்கு வார்னிஷ் செய்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு `கல்' மரமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நினைவுச்சின்னமாக வடிவம் பெறும் 150 வருட பழைமையான மரம்... கல் மரமாகும் `ஆலமரம்'

மேலும், இந்த மரம் அமைந்துள்ள சூளை ராகவேந்திரா பூங்காவில் இதர புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்காவில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு பூங்காவை சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான 27 நட்சத்திர மரங்கள் மற்றும் 108 வகையான மூலிகைச் செடி கொடிகள் அமைக்கப்பட்டு பராமரிக்க பட்டு வருகின்றன. அந்த 108 வகை மூலிகை வகைகளும் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பூங்காவில் இளைஞர்களுக்காக பிரத்யேகமான உள் விளையாட்டு அரங்கம் மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள் முடிந்து, வரும் ஏப்ரல் மாதம் பூங்கா மீண்டும் புதுப் பொலிவுடன் திறக்கப்படவுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு