Published:Updated:

``என் மகளுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது!"- கரூர் கிருத்திகாவின் தாய் ஆனந்தக் கண்ணீர்

``என் மகளுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது!"- கரூர் கிருத்திகாவின் தாய் ஆனந்தக் கண்ணீர்
``என் மகளுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது!"- கரூர் கிருத்திகாவின் தாய் ஆனந்தக் கண்ணீர்

``கரூரைச் சேர்ந்த சமூக நல அமைப்பாலும், விகடனாலும் இன்னைக்கு என் மகளுக்கு இதய ஆபரேஷன் நல்லமுடியா முடிஞ்சுருக்கு. இல்லைன்னா, என் மகளை இன்னைக்கு உயிரோடவே பார்த்திருக்க முடியாது!" என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் கரூர் கிருத்திகாவின் தாய் ஜெயலட்சுமி.

கரூர் கிருத்திகா... இந்தப் பெயரை எப்போதோ கேட்டதுபோல் உள்ளதா. ஆமாம்... கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற சிறுமி, நமது விகடன் இணையதள வாசகர்களுக்கு பரிச்சையமானவர்தான். மோகன்ராஜ்- ஜெயலட்சுமி தம்பதியின் பதிமூன்று வயது மகள்தான் கிருத்திகா. பிறந்ததில் இருந்தே இதயத்தில் பிரச்னையோடு இருந்திருக்கிறார். 'இரண்டு வயதுக்குள் அவளுக்கு ஆபரேஷன் பண்ணனும்' என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், குடும்பத்தின் வறுமை, 'விதி விட்டது வழி' என்றபடி, ஆபரேஷன் பண்ணாமல் காலத்தைத் தள்ள வைத்தது. ஆனால், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகாவின் நிலைமை கவலைக்கிடமாக மாற, 'உடனே ஆபரேஷன் பண்ணலன்னா, கிருத்திகாவை நீங்க மறந்திட வேண்டியதுதான்' என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதனால், செய்வதறியாது கண்ணீரோடு கையைப் பிசைந்தபடி நிர்க்கதியாக நின்றார்கள் கிருத்திகாவின் பெற்றோர்.

அப்போது, கரூரைச் சேர்ந்த சமூகநல அமைப்பு ஒன்று கிருத்திகாவுக்கு உதவ முன்வந்தது. சமூகவலைதளங்கள் மூலம் ஆபரேஷனுக்கு தேவையான மூன்றரை லட்சத்தை திரட்டி, சென்னையில் கிருத்திகாவுக்கு முதல்கட்ட ஆபரேஷனை செய்தார்கள். 'இன்னும் சரியாக ஒன்றரை வருடத்தில் இன்னொரு மேஜர் ஆபரேஷன் செய்யணும். அப்போதான், கிருத்திகா பூரணமா குணமாவா' என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த ஒன்றரை வருடம் நெருங்க, `இந்தமுறை ஆபரேஷன் செய்ய நான்கு லட்சம் வரை செலவாகும்' என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'முழுதாக பத்தாயிரத்தை கண்ணால பார்க்காத நாங்க அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது' என்று மறுபடியும் கையறு நிலைக்குப் போனது கிருத்திகா குடும்பம். இந்தமுறையும், அந்த சமூகநல அமைப்பே உதவ முன்வந்தது. சமூக வலைதளங்களில் கிருத்திகாவின் நிலைமையைப் பற்றி பதிவு போட்டார்கள்.

அதோடு, நாமும் கடந்த 22.10.2018 அன்று விகடன் இணையதளத்தில், `கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணனும்...உதவுங்க! - கலங்கும் ஏழைப் பெற்றோர்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் படித்து இதயம் கசிந்த விகடன் வாசகர்கள் இரண்டு லட்சம் வரை நிதி அனுப்பி மனிதாபிமானம் காட்டினர். முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் ஒரு லட்சம் கிடைக்க, கூடவே பாரதப் பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 50,000 கிடைத்திருக்கிறது. மீதமுள்ள பணத்தை கரூர் சமூக நல அமைப்பு சமூக வலைதளங்களின் பதிவுகள் மூலம் சேகரித்திருக்கிறது. இப்படி தேவையான நிதி கிடைக்க, இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கிருத்திகாவுக்கு ஆபரேஷன் முடிந்திருக்கிறது. ``கொஞ்சம் சிக்கலான ஆபரேஷன்தான். எதுவும் நடக்கலாம்" என்று மருத்துவர்கள் சொல்ல, ஊர்பட்ட சாமிகளை வேண்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் கிருத்திகாவின் பெற்றோர். சிக்கலான ஆபரேஷன் என்பதால், பேஸ்மேக்கர் வைத்து, ஏழு மணி நேரம் கிருத்திகாவுக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது. ``ஆபரேஷன் வெற்றி" என்று மருத்துவர்கள் சொல்ல, கிருத்திகாவின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீரை வடித்திருக்கிறார்கள். கிருத்திகாவை தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், இப்போது கண்ணை விழித்து அவர் பேச, அவரின் தாய் ஜெயலட்சுமி நெஞ்சம் குளிர்ந்து போயிருக்கிறார்.

நம்மிடம் பேசிய அவர், ``கரூர் சமூக நல அமைப்பும், விகடனும் இல்லைன்னா, இன்னைக்கு என் பொண்ணை உயிரோட பார்த்திருக்க முடியாது. என் பொண்ணுக்கு இதயத்துல கடுமையான பிரச்னை. இந்த ஆபரேஷன் பண்ணினாலும், அவளுக்கு திருமணம்கூட பண்ணக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. திருமணம் கிடக்கட்டும் சார். அவ உயிரோட இருந்தாலே, அது போதும்ய்யா. நாங்க கூலி வேலை பார்க்குறவங்க. மொத்தமா இருபதாயிரத்தை எங்க வாழ்நாள்ல பார்த்ததில்லை. எட்டு லட்சம் வரை இவளுக்கு இரண்டு ஆபரேஷனுக்கும் செலவாகி இருக்கு. எங்களால் ஐம்பதாயிரத்தைகூட திரட்டியிருக்க முடியாது. இவ்வளவு பணத்தைக் கொடுத்து உதவிய அத்தனை பேருக்கும் நாங்களும், என் மகளும் காலம் முழுக்க நன்றியுள்ளவங்களா இருப்போம். பெத்த வயிறு இப்போதான் குளிர்ந்து கிடக்குய்யா. இனிமேல் என் பிள்ளையைக் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்போம்!" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.