Published:Updated:

இரண்டாம் உலகப்போரின் வைரல் புகைப்படத்தில் இருந்த மாலுமி மறைவு!

இரண்டாம் உலகப்போரின் வைரல் புகைப்படத்தில் இருந்த மாலுமி மறைவு!
இரண்டாம் உலகப்போரின் வைரல் புகைப்படத்தில் இருந்த மாலுமி மறைவு!

சென்ற நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்று, 'Life' இதழில் வெளிவந்த 'V-J Day in Times Square' என்னும் புகைப்படம்தான். அல்ஃப்ரெட் ஐசென்ஸ்டாத்ட் என்னும் புகைப்படக்கலைஞர் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார். 1945-ல் இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற மகிழ்ச்சியில், கப்பற்படை மாலுமி ஒருவர் மகிழ்ச்சியின் மிகுதியில் அருகில் இருக்கும் பெண் ஒருவரை முத்தமிடுவார். நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் இந்த காட்சியை சரியான நேரத்தில் தனது கேமராவில் பிடித்திருப்பார் அல்ஃப்ரெட்.

"In New York's Times Square a white-clad girl clutches her purse and skirt as an uninhibited sailor plants his lips squarely on hers"

ஆகஸ்ட் 14, 1945 'Life' இதழில் இந்தக் குறிப்புடன்தான் இந்தப் புகைப்படம் வெளிவந்திருந்தது. முகம் முழுதாகத் தெரியவராததால், கப்பற்படை மாலுமிகள் பலரும் 'முத்தமிட்டவர் நான்தான்' என்று கூறிவந்தனர். ஆனால், உண்மையில் இந்தப் புகைப்படத்தில் இருந்தவர் ஜார்ஜ் மென்டோன்சா என்பவர்தான். சமீபத்திய 'Facial recognition' தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது நிரூபணமும் ஆகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது,  தான் விடுப்பில் இருந்ததாகவும் காதலி ஒருவருடன் வெளியே வந்திருந்ததாகவும், போர் முடிவுற்றதைக் கேட்ட மகிழ்ச்சி தாளாமல் அந்தப் பெண்ணை முத்தமிட்டதாகவும் ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அவருடன் வந்த காதலியை அந்தப் புகைப்படத்தில் இவர்களுக்குப் பின்னால் பார்க்கமுடியும் என்றும் கூறினார். அப்போதைய வைரல் புகைப்படத்தில் இருந்த இந்த ஜார்ஜ் மென்டோன்சா, தற்போது தனது 95-வது வயதில் மரணமடைந்தார். இந்தச் செய்தியால், மீண்டும் இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது. முத்தமிடப்பட்ட க்ரெட்டா சிம்மர் ஃப்ரைடுமேன் 2016-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.