கோவையில் 29 சதவிகிதம் குறைந்த வெளிநாட்டு பறவைகளின் வரத்து... ஏன்? | Foreign birds migration reduced by 29 per cent in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (20/02/2019)

கடைசி தொடர்பு:08:32 (20/02/2019)

கோவையில் 29 சதவிகிதம் குறைந்த வெளிநாட்டு பறவைகளின் வரத்து... ஏன்?

கோவையில் உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே சமயம் வெளிநாட்டுப் பறவைகளின் வரத்தும் குறைந்துவருகிறது. காரணம் என்ன?

கோவையில் 29 சதவிகிதம் குறைந்த வெளிநாட்டு பறவைகளின் வரத்து... ஏன்?

ர்வதேச நீர்ப்பறவை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஆசிய நீர்ப்பறவை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்றது. ஆறாம் ஆண்டு தொடர்ச்சியாக கோயம்புத்தூர் நேச்சுரல் சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த பி.ஆர் செல்வராஜ், ஜி.பிரகாஷ், பி.பி பாலாஜி, டி.கஜா மோகன் ராஜ், சாஹித்யா செல்வராஜ், கே.சதீஸ், என்.வி திருமூர்த்தி, காந்திகுமார், ஸ்ரீநிவாஸ் ராவ், செட்டன் ஹெச் ஜோஷி, ஏ.பாவேந்தன் ஆகியோர் அடங்கிய 8 குழுக்கள், கோவையில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

இவர்கள் உக்கடம், வெள்ளானைப்பட்டி, அச்சங்குளம், புட்டுவிக்கி குளம், சுண்டக்காமுத்தூர், கிருஷ்ணாம்பதி, அச்சங்குளம், சிங்காநல்லூர், செங்குளம், செல்வம்பதி ஏரி, முத்தண்குளம், பேரூர், வாலாங்குளம், குறிச்சி மற்றும் குமாரசாமி ஏரி போன்ற 27 இடங்களில் நீர்ப்பறவைகளைக் கணக்கெடுத்து ஆய்வுபடுத்தினர். இதன் மூலமாக கோவைக் குளங்களில் 134 இனங்களைச் சார்ந்த 6276 பறவைகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. இதில் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை 29 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தெரிந்துகொள்ள கோயம்புத்தூர் நேச்சுரல் சொசைட்டியைச் சேர்ந்த பி.ஆர்.செல்வராஜ் அவர்களிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், ``உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகமாக இருந்தது. வெள்ளலூர் குளத்தில் மட்டும் 76 வகையான பறவை இனங்களையும் 641 பறவைகளையும் பதிவு செய்துள்ளோம். இதில் பார்ன் ஸ்வாலோ, லிட்டில் கார்மோரென்ட், ஹவுஸ் க்ரோ, கேட்டில் எக்ரெட், இண்டியன் பாண்ட் ஹீரோன், இண்டியன் ஸ்பாட் பில்ட் டக், மைனா, லிட்டில் ஏக்ரெட், ரோஸ் ரிங்டு பாராகீட், போன்ற உள்நாட்டுப் பறவைகளைப் பதிவு செய்தோம். 2017-ல் 92 பறவையினங்களைச் சேர்ந்த 4,487 பறவைகளும், 2018-ல் 92 உள்நாட்டுப் பறவையினங்களைச் சேர்ந்த 4,493 பறவைகளையும் பதிவு செய்தோம். வருடா வருடம் உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் அதிகரிக்க கோவையில் உள்ள நீர்நிலைகள் நன்கு சுத்தப்படுத்தி பாதுகாக்கப்பட்டால் பறவைகளின் எண்ணிக்கையும், பல்லுயிரினத்தையும் அதிகரிக்கலாம்" என்கிறார்.

Yellow bittern

இந்த வருடம் வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து 29 சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள  கோயம்புத்தூர் நேச்சுரல் சொசைட்டியைச் சேர்ந்த பாலாஜி அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``ரோஸி ஸ்டார்லிங், வெஸ்டர்ன் யெல்லோ வாக்டைல், புளூ டெய்ல் பீ ஈட்டர், வுட் சேன்ட் பைப்பர், லிட்டில் ரிங்டு புளோவர் போன்ற வலசைப் பறவைகளை பதிவு செய்துள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டுப் பறவைகளின் வரத்து அதிகரித்தும் வெளிநாட்டுப் பறவைகளின் வரத்துகளின் எண்ணிக்கை குறைந்தும் இருக்கிறது. கருவால் வாத்து (gadwell) பட்டைத் தலை வாத்து (bar headed goose), இந்தியன் சாம்பல் இருவாச்சி (indian grey hornbill), ஸ்டோக் பைல் கிங்பிஷர் (stork billed king fisher), gull billed tern, orientel turtle dove போன்றவை கோவைக்கு புதுவரவாக வந்தவை. 2017 கணக்கெடுப்பின்படி 35 வெளிநாட்டுப் பறவையினங்களைச் சார்ந்த 2,592 பறவைகளும், 2018-ல் 35 வெளிநாட்டு இனங்களைச் சார்ந்த 2,127 பறவைகளும் 2019-ல் 35 வகைகளில்1846 பறவைகளையும் பதிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டை விட வெளிநாட்டு இனங்களின் வரத்து குறைவாக இருப்பது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது.

Stork billed kinfisher - குறைந்துபோன வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை

அதற்கு மிக முக்கியக் காரணம் வெப்பமயமாதல் மற்றும் கழிவு நீர்நிலைகளில் கலப்பது மட்டுமே. சாக்கடை தண்ணீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே குளத்தில் விடுவதாலும், குளங்களின் ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுவதாலும் வலசை பறவையினங்களும், உள்நாட்டுப் பறவைகளும் குறைவாக வருகின்றன. பெரிய நீர்நிலைகளைக் கொண்டுள்ள நொய்யலின் மேற்பகுதி சுத்தமாகவும், பறவையின் வருகைக்கு ஏற்ற சூழ்நிலை, உணவு மற்றும் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் கீழ்ப்பகுதியில் உள்ள குளங்களில் சுகாதாரமற்ற நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளலூர், சூலூர், அச்சங்குளம், கிருஷ்ணாம்பதி, கோலரம்பதி நீர்நிலைகளுக்குச் சிறந்த பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்துவிட்டால் வலசைப் பறவைகளுக்குச் சிறந்த இடமாக இருக்க நேரிடும்" என்கிறார்.

தொடர்புடைய நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருப்பது இந்தப் பறவைகளுக்கு மட்டுமல்ல; அந்தப் பகுதி மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடியது. மாவட்ட நிர்வாகம் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close