Published:Updated:

மினரல் வாட்டர் 2 ரூபாய்!: வேளாங்கண்ணி அதிசயம்

மினரல் வாட்டர் 2 ரூபாய்!: வேளாங்கண்ணி அதிசயம்
மினரல் வாட்டர் 2 ரூபாய்!: வேளாங்கண்ணி அதிசயம்

ஜூனியர் விகடனிலிருந்து...

- கரு.முத்து

ந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குப் போய், இந்தக் கோடையில் குடிநீருக்குக் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வேளாங்கண்ணி மக்கள் மட்டும் சுத்திகரிக்கப்​பட்ட குடிநீரைப் பயன்​படுத்து​கிறார்கள் என்பது ஆச்சர்​யமான விஷயம்​​தானே? 

அது எப்படி சாத்தியம்? இந்தக் கேள்வியோடு வேளாங்கண்ணிக்குச் சென்றால், ஒவ்வொரு வார்டிலும் ஒரு சுத்திகரிப்பு எந்திரம் உள்ள சிறிய கட்டடம் நம்மை வரவேற்கிறது. பேரூராட்சி அமைத்துள்ள அந்த சுத்திகரிப்பு நிலையத்​தைப் பராமரிப்பது அந்தப் பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்கள்.

கடந்த வாரம், புதிதாக நான்கு சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்துவைத்தார் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால். அடுத்த வாரம், எட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றன.

மினரல் வாட்டர் 2 ரூபாய்!: வேளாங்கண்ணி அதிசயம்

சுனாமி நகர் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சென்று குடிநீரைக் குடித்துப்​பார்த்தோம். கடைகளில் கிடைக்கும் தரமான கம்பெனிகளின் குடிநீருக்கு சற்றும் குறைவில்லாத சுவையில் இருந்தது. அதைப் பராமரித்துவரும் ஏஞ்சல் மகளிர் குழுவின் தலைவி ஜமுனா, ''இது ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு. ஒரு குடம் அல்லது ஒரு கேன் தண்ணிக்கு ரெண்டு ரூபாய் வசூலிக்கிறோம். அதை வெச்சுத்தான் இங்கே கரன்ட் பில் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளை செய்றோம். கடற்கரை ஓரம் இருக்கிற எங்களுக்கு, எங்கே பார்த்தாலும் உப்புத் தண்ணிதான். அதனால, எல்லோருமே கேன் தண்ணிதான் வாங்கிட்டிருந்தோம். இது வந்ததில் இருந்து யாரும் 30 ரூபா கொடுத்து கேன் தண்ணி வாங்குவது இல்லை. ரெண்டு ரூபா கொடுத்து, இங்கே வந்து பிடிச்சுட்டுப் போயிடறாங்க'' என்றார் பூரிப்புடன்.

மினரல் வாட்டர் 2 ரூபாய்!: வேளாங்கண்ணி அதிசயம்

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பல தரப்பிலும் பாராட்டு பெற்ற வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசனிடம் பேசினோம். ''மக்கள் நல்ல குடிநீருக்காக அலைவதைப் பார்த்ததும், எல்லோருக்கும் தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் பொது நிதியில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் செலவழித்து, சுனாமி நகரில் ஏற்கெனவே இருந்த ஒரு கட்டடத்தில் ஒரு சுத்திகரிப்பு எந்திரத்தைப் பொறுத்தினோம். அது ஒரு மணி நேரத்துக்கு 500 லிட்டர் வரை சுத்திகரித்துக் கொடுத்தது. அதைப் பார்த்துத்தான் மற்ற வார்டுகளுக்கும் அமைக்க வேண்டும் என்று முடிவுசெய்து பேரூராட்சிகள் இயக்ககத்துக்குக் கடிதம் எழுதினோம். அவர்களும் இதில் உள்ள நன்மையைப் புரிந்துகொண்டு 12 லட்சம் ரூபாய் அனுமதித்தனர். அதற்காக பேரூராட்சி சார்பில் செலுத்த வேண்டிய மூன்று லட்ச ரூபாயையும் ஆரியநாட்டுத் தெரு மக்களே கொடுத்தனர். இதோடு சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ஒன்பது லட்சம் ரூபாய் கிடைத்தது. இவற்றைக்கொண்டுதான் அமைச்சர் இப்போது திறந்து வைத்திருக்கும் அந்த நான்கு சுத்திகரிப்பு எந்திரங்களையும் அமைத்தோம்.

மினரல் வாட்டர் 2 ரூபாய்!: வேளாங்கண்ணி அதிசயம்

வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 40 லட்ச ரூபாயைக்கொண்டு மேலும் எட்டு சுத்திகரிப்பு எந்திரங்கள் தயார். அது அடுத்த வாரம் முதல் செயல்படத் தொடங்கும். சுத்திகரிப்பு எந்திரத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும், கட்டடம், ஆழ்துளைக் கிணறு, மின் மோட்டார், தொட்டி ஆகியவற்றுக்கு மூன்று லட்ச ரூபாயுமாக ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஐந்து லட்ச ரூபாய் செலவாகிறது. எங்கள் மக்கள் சுத்தமான, சுவையான, தரமான குடிநீரைக் குடிக்கிறார்கள் என்பதில் எங்களுக்குப் பெருமை'' என்கிறார் எடிசன்.

பூக்காரத் தெரு சுத்திகரிப்பு எந்திரத்தைப் பராமரித்துவரும் சீதா, ''இங்கே ஒரு நாளைக்கு குறைஞ்சது 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருவாங்க. அவ்வளவு பேருக்கும் எவ்வளவு நல்ல தண்ணி வேணும். இப்படி அதிகப் பயன்பாட்டால், தண்ணிக்கு ரொம்ப கிராக்கி இருந்த நேரத்தில் இது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக் கிடைச்சிருக்கு. இனி, எங்க குழந்தை குட்டிகள் நல்ல தண்ணி குடிச்சு ஆரோக்கியமா வளருவாங்க. நாங்க தண்ணி பிடிக்க ரெண்டு ரூபாய் காசு வாங்கினாலும், சுற்றுலாப் பயணிகள் வந்து பாட்டில்ல பிடிச்சா, அவங்ககிட்ட காசு வாங்குறது இல்லை'' என்றார் பெருந்தன்மையாக.

மாநில அளவில் முன்னுதாரணமான இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்டு வந்து ஆய்வுசெய்த நாகை மாவட்டத் திட்ட அலுவலர், இதை மற்ற பேரூராட்சிகளுக்கும் நடைமுறைக்குக் கொண்டுவருவதாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கிற மற்ற பேரூராட்சிகளும் ஊராட்சிகளும் இந்தத் திட்டத்தை உடனே செயல்படுத்தலாமே!