Published:Updated:

`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க!'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்

`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க!'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்
`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க!'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்

ஆட்டோவில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு அழைத்து வந்த டிரைவர் திடீரென இறந்துவிட கலங்கிய பள்ளிக் குழந்தைகள், இறுதி நிகழ்ச்சிக்கு வந்து கண்ணீர் மல்க அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது டிரைவரின் உறவினர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் சுங்காந்திடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை என இரு நேரங்களிலும் பள்ளிக் குழந்தைகளைப் பள்ளியில் விடுவது, அழைத்து வருவது என பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், மூன்றாம் வகுப்பு படிக்கும் தேஜாஸ்ரீ, இரண்டாம் வகுப்பு படிக்கும் ரித்திகா ஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கதிர்வேல் எப்போதும் எல்லோருடனும் அன்பாகப் பழகக்கூடியவர். ஆட்டோவில் வரும் குழந்தைகளை தன் சொந்தக் குழந்தைகள் போலவே கவனித்துக்கொள்வார். பள்ளி விஷயம் என்பதால் மாணவர்களை அழைக்க தாமதப்படுத்தாமல் நேரத்துக்கு வந்து விடுவார். தவிரவும் மற்றவர்களைபோல் வருமானத்துக்காக அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்லாமல் குறைந்த அளவிலான குழந்தைகளையே அழைத்துச் செல்வார். சக ஆட்டோ டிரைவர்கள் அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்றாலும், `பிள்ளைகளை குப்பை மாதிரி ஏற்றிகிட்டு போகாதீங்க' என அன்பாக கண்டிப்பார். காலை நேரத்தில் எப்போதும் கைகளில் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்குச் செல்ல யாராவது அடம் பிடித்தால் கூட சாக்லேட்டை கொடுத்து சமாதானம் செய்து அழைத்துச் செல்வார்.

ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு  காய்ச்சல் அடித்தால் சில நிமிடங்கள் நிறுத்தி பெற்றோரிடம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை கவனிச்சு பாருங்க என கூறிவிட்டுதான் செல்வார். இதனால் குழந்தைகள் தொடங்கி அவர்களின் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். `டிரைவர் அங்கிள்' என எப்போதும் பாசத்துடன் அழைத்து அன்பாகப் பழகுவார்கள். அவர் ஆட்டோவில் வரும் அத்தனை குழந்தைகளும். எல்லோராலும் பாராட்டப்பட்ட அன்பு காட்டப்பட்ட கதிரின் வாழ்கையில் விதி விளையாடிவிட்டது.

இந்த நிலையில், கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதுவரை பள்ளிக் குழந்தைகளுக்கு மாற்று டிரைவர் ஏற்பாடு செய்திருந்தார். சிகிச்சை பெற்ற கதிர்வேலின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. திடீரென கடந்த 19-ம் தேதி அவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புச் செய்தி கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள், `எந்த நல்லது கெட்டதுன்னாலும் முன்னாடி வந்து நிற்பியே. இப்படி அசைவற்று கிடக்கும் உன் உடம்புக்கு முன்னாடி எல்லோரையும் வந்து நிற்க வைத்து விட்டீயே'' எனக் கதறினர். உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரின் இறுதி காரியத்துக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

அப்போது கதிர்வேல் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் வீட்டுக்குக் கூட செல்லாமல் பள்ளி உடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீர் விட்டு, `டிரைவர் அங்கிள் நாங்க எல்லோரும் வந்திருக்கோம் கண் திறந்து பாருங்க' எனக் கதறினார். மற்ற குழந்தைகள் கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் அவரின் உடலைப் பார்த்து, `எங்களுக்கு இனிமேல் நீங்க ஆட்டோ ஓட்ட வரமாட்டிங்களா' எனக் கேட்டதும் கதிரின் குடும்பமே கதறி அழுதது. சில குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து  அஞ்சலி செலுத்தினர். `கதிரை நம்பி எத்தனை பிள்ளைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். அக்கறையா கொண்டு போய் விடுவார். சீக்கிரமே உடம்பு சரியாயிடும். நான் வந்துருவேன்னு சொன்னார். இப்படி ஆகும் என யாரும் நினைக்கவில்லை. எல்லா பிள்ளைகளையும் நல்லா பார்த்துகிட்டவரோட இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நிலைமைதான் இனி பெரிய கேள்விக் குறியாக இருக்கு' என்று கலங்கினர்.
 

கதிரின் உறவினர்களோ, ``எல்லா குழந்தைகள் மேலேயும் ரொம்பப் பிரியமாக இருப்பார். அவர் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என யாரும் எதிர்பார்க்கலை. உறவினர்கள் கூட தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வரவில்லை. ஆனால், அவர் ஆட்டோவில் சென்ற மாணவிகள் வந்து அஞ்சலி செலுத்தியது எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. கதிரோட இரண்டு பெண் குழந்தைகளைப் பற்றி நினைச்சாதான் கவலையா இருக்கு'' என்றனர்.