அழிவிலிருந்து மீண்டுவந்த வல்லாஸ் வகை தேனீக்கள்! - இனி பாதுகாக்கப்படுமா? | Will the Giant Bee came back from extinction be protected hereafter!

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (22/02/2019)

அழிவிலிருந்து மீண்டுவந்த வல்லாஸ் வகை தேனீக்கள்! - இனி பாதுகாக்கப்படுமா?

வல்லாஸ் ஜெயன்ட் (Wallace Giant Bee) என்ற வகைத் தேனீ, உலகிலேயே அளவில் மிகப்பெரியது. கடைசியாக, 1981-ம் ஆண்டு பார்க்கப்பட்டது. அதன்பின், இதுவரை அந்த இனமே அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் நினைத்திருந்தனர்.

தற்போது அந்த இனத்தைச் சேர்ந்த பெண் தேனீ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஒரு தீவில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு கண்டுபிடித்தது. ஜனவரி மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை முழுமையாகப் பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி, நேற்று அது வல்லாஸ் ஜெயன்ட் வகையைச் சேர்ந்த தேனீ தான் என்பதை உறுதி செய்துள்ளார்கள். இரண்டரை இன்ச் அகலமான சிறகுகளைக் கொண்டவை இந்த தேனீக்கள். பெண் தேனீக்கள், கரையான் புற்றுகளுக்கு உள்ளே தங்களுக்கான கூடுகளைக் கட்டிக்கொள்ளும். ஆய்வுக்குழு கண்டுபிடித்த தேனீயும் நிலத்திலிருந்து 8 அடி உயரத்திலிருந்த அப்படியொரு கூட்டில் இருந்ததுதான்.

தேனீ

Photo Courtesy: Clay Bolt/PA

வல்லாஸ் ஜெயன்ட் தேனீயுடன் ஆய்வாளர் சிம்சன் ராபின்சன்

ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வல்லாஸ் (Alfred Russel Wallace) என்ற பிரிட்டிஷ் இயற்கை ஆய்வாளர் இதை முதலில் கண்டுபிடித்தார். அதனால்தான், அவரின் நினைவாக இதற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் எல்லைக்கு உட்பட்ட வடக்கு மொலுக்காஸ் என்ற தீவில் இதைக் கண்டுபிடித்த சர்வதேச ஆய்வாளர்களும், சிட்னி மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அடங்கிய குழு, அதன் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. சூழலியல் சமநிலையில் பூச்சிகளின் பங்கு, மற்ற எந்த உயிரினத்தை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றிலும் தேனீக்களின் பங்கு முதன்மையானது. அத்தகைய தேனீ இனங்களிலேயே பெரிய வகையான இவை, அழிந்துவிட்டதாக இதுவரை கருதப்பட்டுவந்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது. இந்தப் பூச்சி சூழ் உலகில், மனிதர்களின் இடைஞ்சல்களால் அவை மீண்டும் அத்தகைய நிலைக்குத் தள்ளப்படாமல் பாதுகாக்கவேண்டிய கடமையை உணர்ந்து செயல்பட்டால், அவற்றின் அழிவைத் தடுத்து காப்பாற்றலாம்.


[X] Close

[X] Close