லே-லடாக் போவதற்கு முன் இந்த 7 மலைகளைச் சுற்றிவிடுங்கள்! | Don't miss to visit these places before visiting Leh Ladakh

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (24/02/2019)

கடைசி தொடர்பு:21:29 (25/02/2019)

லே-லடாக் போவதற்கு முன் இந்த 7 மலைகளைச் சுற்றிவிடுங்கள்!

லே-லடாக் போவதற்கு முன் இந்த 7 மலைகளைச் சுற்றிவிடுங்கள்!

'அலாஸ்காவிலே ஐஸ்கிரீம் செய்வதில்லை; அண்டார்டிகாவில் பெங்குயின்களைப் பழக்கி வீட்டு வேலைக்கு வைத்திருக்கிறார்கள்; நண்டின் அருகே ஒரு மீனைக் கொண்டு செல்வார்கள், நண்டு மீனைத் தன் கால்களால்  பிடித்ததும் இரண்டையும் அப்படியே ஒன்றாகச் சேர்த்து பொரித்துவிடுகிறார்கள். இந்த நண்டுமீன் டிஷ் சிங்கப்பூரின் பிரபல உணவு; படுகாப்பூரில் யானையின் எலும்பை தெருக்களில் காணலாம்; தமிழ்நாட்டின் உயரமான மலை ஊட்டி. ஆனால், உயரம் குறைவான கொடைக்கானலில்தான் குளிர் அதிகம்... இப்படி செய்தித்தாள்கள் சொல்லாத பல விஷயங்களைப் பயணம் நமக்குச் சொல்கின்றன.

மலைகள்

பயணம் என்று வந்துவிட்டால் கார்/பைக்கில் லே-லடாக் போவதுதான் என்ற எண்ணம் பரவலாகிவிட்டது. இமயமலைக்குப் போவதற்கு முன் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஏழு மலைகளை முதலில் சுற்றிவிடுங்கள். நகரங்களில் இருப்பவர்கள் ஒரு நாளில் சென்றுவரக்கூடிய சுலபமான இடங்கள் இவை. 

ஏலகிரி

1410.6 மீட்டர் உயரம் கொண்ட மலை. மொத்தமே 14 கொண்டை ஊசி வளைவுகள்தான். கிருஷ்ணகிரி, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு வார விடுமுறையைக் கழிக்க அருமையான இடம்.  தஞ்சாவூர் சுவாமிமலை சித்தர்களுக்கு ஃபேமஸ் எனில் ஏலகிரியில் இருக்கும் சுவாமிமலை ட்ரெக்கிங்குக்கு பிரபலம். புங்கணூர் ஏரி, ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி, வைணு பாப்பு வான்வெளி ஆராய்ச்சி நிலையம் போன்றவை ஏலகிரிக்கு வருபவர்கள் பார்க்க தவறக்கூடாத இடங்கள். கோடை காலத்தில் சென்றால் பாராகிளைடிங் மற்றும் ராக் கிளைம்பிங் போன்ற விஷயங்களில் கலந்துகொள்ளலாம்.

Hills

 

ஏற்காடு

ஏலகிரியை விட உயரமான மலை. 1,623 மீட்டர் உயரம். ஏற்காடு அதிக ஈரப்பதம் கொண்ட மலை. இந்தியாவிலேயே ஷார்ட்டிஸ் எனும் பாம்பு வகை ஏற்காடு மலையில் மட்டும்தான் வாழ்கிறது. இந்த பாம்பு மண்ணுக்குள் மறைந்து வாழும். அதனால், ஏற்காடு மலையில் ஏதாவது பாம்பை பார்த்தால் பயப்படாதீர்கள், அடித்துக் கொன்றுவிடாதீர்கள். அது அரியவகை ஷார்ட்டிஸாக கூட இருக்கலாம். பொதுவாக, மலைப் பிரதேசங்கள் என்றால், விலங்குகள் பயம் இருக்கும். ஆனால், ஏற்காட்டில் வெறுமனே குரங்குகளும், சில நேரங்களில் காட்டுப் பன்றிகளையும் மட்டுமே பார்க்கமுடியும். இரவில் காட்டெருமைகளுக்கு ஹாய் சொல்லலாம். ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்பார்கள். இதற்குக் காரணம், இங்கு இட்லிக் கடை முதல் இன்டர்நெட் சென்டர் வரை எல்லாமே ஊட்டி-கொடைக்கானலை விட மலிவு. இங்கு தட்பவெட்பம் எப்போதுமே 30 டிகிரியை தாண்டாது. 13 டிகிரிக்குக் கீழேயும் போகாது. அதனால், மிதமான குளிரும், சில்லென்ற வெயிலுக்கும் உத்தரவாதம் உண்டு. அண்ணா பூங்கா, எமரால்டு ஏரி போட்டிங், மான் பூங்கா, கிளியூர் அருவி, லேடீஸ் சீட் போன்றவை ஏற்காட்டில் ரசிக்க வேண்டிய இடங்கள்.

Tourist Spot

கோத்தகிரி

ஊட்டி போல சமதளமாக இல்லாமல் செங்குத்தாக ஏறக்கூடியது மலை. சிறிய மலை. ஆனால் இதில் ஆர்ப்பரிக்கும் அருவிகள் அதிகம். மேட்டுப் பாளையத்தில் இருந்து இரண்டு பாதைகள் பிரியும். நேராகப் போனால் குன்னூர்-ஊட்டி. வலதுபுறம் திரும்பினால் கோத்தகிரி-ஊட்டி. கோத்தகிரி ஊட்டி சாலை செல்ஃபி ரசிகர்களுக்கு ஏற்ற இடம். ஏகப்பட்ட செல்ஃபி பாயின்ட்கள் உண்டு. 17 கொண்டை ஊசி வளைவுகள்தான் கோத்தகிரிக்கு செல்ல. ஊட்டிபோல தங்கும் விடுதிகள் அதிகமாக இருக்காது. சுற்றிலும் பச்சைப் பசேலென டீ எஸ்டேட்டுகள், வயல்வெளிகள் இருக்கும். புகைப்பட ஆர்வலர்கள் கவனத்துக்கு... எஸ்டேட்டில் புள்ளைகுட்டிகளுடன் புல் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமைகளுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், ப்ளீஸ். ஆஃப் சீசனில் சென்றால் மழைத்தூறலுடன் பாதை போதை ஏற்றும். கோத்தகிரியில் டிரெக்கிங் என்ற பெயரில் தனியாகப் பயணிப்பது ஆபத்தானது. கரடிகள் அவ்வப்போது லன்ச் சாப்பிட வந்துபோகும். கேத்தரின் அருவி கோத்தகிரியின் முக்கியமான சுற்றுலா பகுதி. 1.5 கி.மீ டிரெக்கிங் சென்றால்தான் அருவியை அடையமுடியும். உயிலட்டி அருவி, கொடநாடு வியூ பாயின்ட், ஜான் சல்லீவன் நினைவகம், லேம்ப்ஸ் பாறை, டால்பின் நோஸ் என பார்க்க இன்னும் பல இடங்கள் இருக்கிறது கோத்தகிரியில்.

Sight seeing

ஊட்டி

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு டூர் என்றாலே முதலில் ஊட்டிதான் நினைவுக்கு வரும். 2240 மீட்டர் உயரம் கொண்டது ஊட்டி. கோவை-ஊட்டி வழியில் சரியாக 13-வது கொண்டை ஊசி வளைவை தாண்டியவுடன் குன்னூர் வந்துவிடும். ஊட்டி-குன்னூர் பாதையில் மண் சரிவைத் தடுப்பதற்கான வேலைகள் நடப்பதால் பாதை தூசியாக உள்ளது. சாலைகளில் பல இடங்களில் மண் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. பைக் பயணிகள் இந்த இடத்தில் கவனம் தேவை. இந்த சாலை அகலமானது என்பதால் ரொம்பவே பாதுகாப்பானது. தொட்டபெட்டா சிகரம், முதுமலை மிருகங்கள் சரணாலயம், பைக்காரா அருவி, கல்லட்டி அருவி, அரசு தாவரவியல் பூங்கா போன்றவை முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள். 

கோடைக்குப் பயந்து கொடைக்கானலில் தஞ்சம் புகுவதுதான் நகரத் தமிழர்களின் வழக்கம். ஊட்டியை விடச் சிறிய மலையாக இருந்தாலும் குளுகுளு குளிர்தான் கொடைக்கானலில் ஸ்பெஷல். கொடைக்கானல் ஏரி, சோலார் ஆய்வகம், தூண் பாறை, குனா குகை போன்ற இடங்களில் கொடைக்கானலில் பிரபலமான டூர் ஸ்பாட்.

Tourist spot

வால்பாறை

பட்டியலில் இருப்பதிலேயே வால்பாறைதான் சின்ன மலை. உயரம் 1,193 மீட்டர் மட்டுமே. ஆனால், 40 கொண்டை ஊசி வளைவுகள். அதிக செலவில்லாமல் போகச் சிறந்த இடம். வால்பாறையில் மட்டும்தான் ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடுகள் உங்களை வரவேற்கும்.  வால்பாறையை சுற்றி சின்னக் கல்லாறு, அப்பர், காடாம்பாறை, ஆழியாறு, சோலையாறு என பார்க்க இத்தனை அணைகள் உண்டு. டாப் ஸ்லிப் அருகிலேயே உள்ளது. யானை மீது ஏறி அடர்ந்த காட்டுக்குள் சஃபாரி செல்லாம். 2 மணிநேர பயணத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது. கொடைக்கானலை அடுத்து வரையாடுகள் அதிகம் காணப்படும் இடம் வால்பாறை. இந்த வரையாடுகளைத் தமிழ்நாட்டை தவிர வேறு எங்கேயும் பார்க்கமுடியாது.

மேகமலை

இன்னும் கமர்ஷியல் ஆக்கப்பட்டாக இடம். ஊட்டியில் ஒரு கேரட் 20 ரூபாய் என்றால். மேகமலையில் 20 ரூபாய்க்கு இட்லி-கோழிகுழம்பு வைத்து காலை உணவை முடித்துவிடலாம். மேகமலைக்கு இப்போதுதான் அரசு சாலை அமைத்திருக்கிறது. மேகங்களும் நம்மைப்போல் பயணித்துக்கொண்டே இருப்பதை இங்குப் பார்க்கலாம். வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. 12 முதல் 15 டிகிரி செல்சியஸை தாண்டாது பகல் நேர வெப்பநிலை. எப்போதும் இதமான குளிர் மட்டுமில்லை எல்லா பருவநிலையிலும் தண்ணீர் கொட்டும் குட்டி குட்டி அருவிகள் இங்கு ஏராளம். ஆள் அரவமற்ற ஏரிக் கரையில் உட்கார்ந்து  தனிமையை ரசிக்க மேகமலையை விட்டால் தமிழ்நாட்டில் இடம் ஏது! தங்கும் வசதிகள் அதிகம் இல்லை. உணவு விடுதிகளும் அதிகம் கிடையாது. வெறும் ரிசார்ட்டுகள் மட்டும்தான்.

Natural Sceneries

கொல்லிமலை

நாம் எப்படி லே-லடாக் போகிறோமோ, அப்படித்தான் வடமாநில பயணிகள் கொல்லிமலைக்கு வருகிறார்கள். இது அழகான பாதை மட்டுமில்லை ஆபத்தான பாதையும் கூட. மொத்தம் 70 கொண்டைஊசி வளைவுகள் இருக்கின்றன. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசில்லா அருவி, சிற்றருவி என அருவிகள் கூட்டமா இருக்கும் இடம். பச்சை பசேலென உங்கள் இச்சையைத் தூண்டும் இடம் இது. கொல்லிமலைக்கு சீஸன் டைம் என்ற ஒன்று இல்லவே இல்லை.  140 அடி உயரத்தில் இருந்து கொட்டும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்ப்பட்டி போட்டிங் சவாரி, தாவரவியல் பூங்கா என கொல்லிமலை மனதைக் கொள்ளைகொள்ளும் மலை. 

கன்னியாகுமரியில் ஆரம்பித்து இமயமலையில் முடிப்பதுதான் பயணம் என்றில்லை. கனவுகளில் ஆரம்பித்து நினைவுகளில் முடிப்பதெல்லாமே சிறந்த பயணம்.

ஊர் சுத்தலாம் வாங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close