''இந்திய திருமணங்களின் சக்ஸஸ் சீக்ரெட் என்ன?'' வெளிநாட்டு ஆராய்ச்சி முடிவு | ''Same wavelength not enough to marriage life'' - says a research

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (24/02/2019)

கடைசி தொடர்பு:10:23 (25/02/2019)

''இந்திய திருமணங்களின் சக்ஸஸ் சீக்ரெட் என்ன?'' வெளிநாட்டு ஆராய்ச்சி முடிவு

''உன்னிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள் எதுவும் இல்லாதபோதும், உன்னை உனக்காக மட்டுமே நேசிப்பேன்.''

தாம்பத்தியம் என்னும் ஒற்றை வார்த்தை தம்பதியரைப் பொறுத்து மாறிக் கொண்டே இருக்கிறது. சில தாம்பத்தியங்களை ஒத்தக் கருத்துகளே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் தாம்பத்தியம் எதிர் எதிர் துருவங்களின் ஈர்ப்பால் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில், எது நீடித்த தாம்பத்தியத்துக்கு  சரியானதாக இருக்கும் என்றொரு ஆராய்ச்சி மெக்சிகனில் நடத்தப்பட்டது. திருமணமாகிக் கிட்டத்தட்ட 20 வருடங்களான, ஒத்தக் கருத்துகள் கொண்ட 2,500 தம்பதிகளிடம் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. செய்தவர் ஆராய்ச்சியாளர் பில் சோப்பிக்.  

தாம்பத்தியம்

ஆராய்ச்சியின் முடிவில் பில், ''இதுநாள் வரை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர், நம்முடன் எல்லா வகையிலும் ஒத்துப் போகிறவராக இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி நினைத்து திருமணப் பந்தத்தில் இணைந்தவர்கள்கூட, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், ஒத்த விருப்பு, வெறுப்புகள் இல்லை. தம்பதியரில் ஒருவரோ அல்லது இரண்டு பேருமோ, அந்தப் பந்தத்துக்கு உண்மையானவர்களாக இருப்பது, சூழ்நிலைகளை அனுசரித்துச் செல்வது, வாழ்க்கைத் துணைக்கு மதிப்புத் தருவது,  துணையின் கருத்துகளுக்கு செவி கொடுப்பது போன்ற இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் அவர்களின் தாம்பத்தியம் அதன் இறுதிக்காலம் வரை இணைபிரியாமல் இருக்கும்.  டேட்டிங் ஆப்பில் ஒத்தக் கருத்துகளைக் கொண்டவர்களைத் தேடி இணைவதால் எல்லாம்,  ஒரு திருமண வாழ்க்கை அதன் கடைசி நிமிடம் வரை மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது'' என்றிருக்கிறார். 

காதல்

இந்த ஆராய்ச்சியின் முடிவுக் குறித்து சைக்காட்ரிஸ்ட் கண்ணன் அவர்களிடம் கருத்துக் கேட்டோம். 

சைக்காட்ரிஸ்ட் கண்ணன்''மனிதர்களுடைய ரசனைகள் ஒட்டு மொத்தமாக இல்லையென்றாலும் சின்னச் சின்னதாக மாறிக் கொண்டே இருப்பதுதான். முதலில் பிடித்த விஷயம் பிறகு பிடிக்காமல் போகலாம். வேறு விஷயங்களின் மீது ஆர்வம் வரலாம். இதுதான் மனித இயல்பு.  இதில், நம்முடைய ரசனையுடன் ஒத்துப் போகிறவர்களை திருமணம் செய்துகொண்டாலும், அது வாழ்க்கை முழுக்க கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது.  அந்த ஆராய்ச்சியில் சொல்லியிருக்கிறபடி மாறுகிற சூழ்நிலைகளை அனுசரித்துச் சென்றால் மட்டுமே, அந்த திருமண பந்தம் சக்சஸ்ஃபுல்லாக இருக்கும். 

காதலில் மூன்று நிலைகள் இருக்கின்றன. முதலில் நமக்குப் பிடித்த சில விஷயங்கள் எதிர்பாலினர்கிட்டே இருப்பதை கண்டுபிடிப்பது... அது அவர்களுடைய வெளித்தோற்றமாக இருக்கலாம்; கேரக்டராகவும் இருக்கலாம். 'இப்படிதான் எனக்கு லைஃப் பார்ட்னர் அமையணும்' என்று அவர்கள் நினைத்ததுபோலவே  எதிரில் நிற்கிற ஆண்/பெண் இருப்பதாக மனதுக்குள் ஒரு பிம்பம் எழும். இரண்டாவதாக, அதே நபருடன் சேர்ந்து வாழும்போது இந்தப் பிம்பம் மெல்ல மெல்லக் கலைந்து விடும். தன் துணையிடம் நமக்குப் பிடித்த விஷயங்களும் இருக்கு; பிடிக்காத விஷயங்களும் இருக்கு என்ற உண்மை தெரியும்போது, சில உறவுகள் பிரேக் அப்பில் முடியலாம். மூன்றாவதாக, இதுதான் யதார்த்தம் என்று புரிந்துகொள்கிற ஜோடி மட்டும்தான் தப்பிப் பிழைக்கும். இது திருமண உறவுக்கும் பொருந்தும். 

அன்பு

நம் ஊரில் ஒருவர் பற்றி ஒருவர்  முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலேயே  திருமணம் செய்துகொண்டாலும், அது நீடித்து நிலைத்திருப்பதற்குக் காரணம் இதுதான். உன்னிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள் எதுவும் இல்லாதபோதும், உன்னை உனக்காக மட்டுமே நேசிப்பேன். வாழ்க்கையின் எத்தனை மேடு, பள்ளங்கள் வந்தாலும் உன்னுடன் வாழ்ந்து குழந்தைகளை கரை சேர்த்து விடுவேன் என்கிற எண்ணம்தான் நம் நாட்டு திருமணங்களின் சக்ஸஸ் ஆஃப் சீக்ரெட். நாமெல்லாம் காலம் காலமாகச் செய்து வருவதை அவர்கள் இப்போதுதான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே விஷயம், நம் மண்ணின் தாம்பத்திய முறைதான் ஆகச் சிறந்தது என்பதுதான்.''


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close