`தமிழ்க் கலாசாரத்தைச் சீனாவில் பிரதிபலிக்க வேண்டும்!’ - யுனான் மின்சு பல்கலைக்கழகப் பேராசிரியை நிறைமதி | Yunnan Minzu University Professor Niraimathi's love for Tamil

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (25/02/2019)

கடைசி தொடர்பு:15:51 (25/02/2019)

`தமிழ்க் கலாசாரத்தைச் சீனாவில் பிரதிபலிக்க வேண்டும்!’ - யுனான் மின்சு பல்கலைக்கழகப் பேராசிரியை நிறைமதி

"சீனாவில் தமிழ்மொழியின் பெருமைகளை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு எங்களது பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்கலாம். நாங்கள் தென்னிந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நட்புப் பாலமாக இருக்க விரும்புகிறோம்."

`தமிழ்க் கலாசாரத்தைச் சீனாவில் பிரதிபலிக்க வேண்டும்!’ - யுனான் மின்சு பல்கலைக்கழகப் பேராசிரியை நிறைமதி

``மலர்கள் போன்ற வடிவமைப்பு உள்ள தமிழ் எழுத்துகள் என்னை வசீகரித்தன. தமிழ் மொழியின் மீதான காதலால் சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியையாக மாறி உள்ளேன். தமிழ் மொழிக்கும், சீன மொழிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆர்வமாக உள்ளேன்" என்கிறார் யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியை நிறைமதி.

கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தமிழ்த்துறை சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார் கிகி ஜாங். இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை நிறைமதி என்று மாற்றியுள்ளார். இவரிடம் பேசினோம். தூய தமிழில் நம்மிடையே உரையாடி அசத்தினார். 

``அப்பா மருத்துவர். அம்மா நிதி சார்ந்த பணி செய்து வருகிறார். ஒரே மகள். நிதித்துறையில் என்னை நிபுணத்துவம் பெற்றவராக மாற்ற வேண்டும் என்று அப்பா விரும்பினார். ஆனால், பள்ளிப்படிப்பின் போது மொழித் துறையின் மீது ஈர்ப்பு இருந்தது. 2007- 2011-ம் ஆண்டு சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். பட்டப்படிப்பு படிக்கும்போது தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. மலர்கள் போன்ற தமிழ் எழுத்துகள் என்னை வசீகரித்தன. தமிழைக் கற்றுக்கொள்ளச் சீன தமிழ் ஒலிபரப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

நிறைமதி சீனப் பல்கலைக்கழகம்

படித்து முடித்தவுடன் சீன வானொலியின் தமிழ்பிரிவில் வேலை கிடைத்தது. சீனாவின் சுற்றுலா தலங்கள், இசை, கலாசாரம் என்று பல விஷயங்களைத்  தமிழ் நேயர்களுக்காக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, ஹாங்காங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அங்கு தெற்காசியா குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். படித்து முடித்தவுடன் ஹாங்காங்கிலேயே வேலை கிடைத்தது. 

ஹாங்காங்கில் யுனான் பல்கலைக்கழகத்தின் மொழிப்பிரிவின் தலைவர் ஒருநாள் `எங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைத் தொடங்க உள்ளோம். அந்தத் துறையில் நீங்கள் பணியாற்ற  வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். பல்கலைக்கழகப் பணியில் சேரலாமா, வேண்டாமா என்று யோசித்தபோது பல்கலைக்கழகத்தில் பிற துறைகளில் பணி செய்தவர்கள், `நீங்கள் வரவில்லை என்றால் தமிழ்த் துறை தொடங்காமல் போக வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார்கள். அந்த உழைப்பை ஏற்று, ஹாங்காங் பணியிலிருந்து விலகி யுனான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். தற்போது 6 சீன மாணவர்கள் தமிழ்ப் படித்து வருகின்றனர். இவர்கள் தமிழ்ப் பாடநூல்கள், காணொலிகள் வழியாக விரைவாகத் தூய்மையான தமிழைக் கற்று வருகின்றனர். இவர்கள் அடுத்த ஆண்டு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தமிழ்த் துறைகளில் சேர்ந்து படிக்கவுள்ளனர். தற்போதே சென்னையில் உள்ள சீன நிறுவனங்கள் எங்களது மாணவர்களுக்கு வேலை வழங்கத் தயாராக இருப்பதாகத் தகவல் அனுப்பியுள்ளனர். 

நிறைமதி சீனப் பல்கலைக்கழகம்

எங்களுடைய துறையின் சார்பில் தமிழ்மொழிக்கும், சீன மொழிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளோம். தமிழ் நூல்களைச் சீன மொழியில் மொழிபெயர்க்கும் பணியினைத் தொடங்க உள்ளோம். சீனாவில் தமிழ்மொழியின் பெருமைகளை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு எங்களது பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்கலாம். நாங்கள் தென்னிந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நட்புப் பாலமாக இருக்க விரும்புகிறோம்.

கடந்த 2 வாரங்களாகத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பயணம் செய்தபோது தமிழ்மொழியின் மீதும், தமிழ்க் கலாசாரத்தின் மீதும் இன்னும் பிடிப்பும் காதலும் அதிகரித்திருக்கிறது. இந்த அனுபவத்தை எங்களது பல்கலைக்கழகத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். தமிழ்க் கலாசாரத்தை சீனாவில் பிரதிபலிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என்றார்.

தமிழ்நாட்டில் உள்ளவர்களே தமிழைப் படிக்க யோசித்து வரும் வேளையில், சீனப் பெண்மணி தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டு, தமிழ்மொழிக்கும் சீனமொழிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், தொடர்புகளையும் ஆராய்ச்சி செய்து வருவதைப் பாராட்டலாம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close