`இந்த வரலாறு படமானதே ஓர் அதிசயம்தான்!' - ஆஸ்கர் வென்ற #FreeSolo-வின் கதை | The story behind 'Free solo', the oscar winning documentary.

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (26/02/2019)

`இந்த வரலாறு படமானதே ஓர் அதிசயம்தான்!' - ஆஸ்கர் வென்ற #FreeSolo-வின் கதை

இந்தப் படத்தை எடுத்தவர்களை வைத்தே தனி ஆவணப்படம் எடுக்கலாம் என்னும் அளவுக்கு இந்தப் படக்குழுவும் இதில் உழைத்திருந்தது. பாறைகளில் கயிறுகள் கொண்டு ஏறி சுமார் 15-20 கிலோ எடையுள்ள கேமராவைத் தோலில் சுமந்து அலெக்ஸ் சென்ற பாதை முழுவதிலும் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்திருக்கிறது இந்தக் குழு.

`இந்த வரலாறு படமானதே ஓர் அதிசயம்தான்!' - ஆஸ்கர் வென்ற #FreeSolo-வின் கதை

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது `அகாடமி அவார்ட்ஸ்' என அழைக்கப்படும் `ஆஸ்கர் விருதுகள் விழா' நேற்று நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் பலரும் இந்த விருதுகளைப் பெற்றனர். இதில் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கரை `ஃப்ரீ சோலோ' என்னும் ஆவணப்படம் தட்டிச்சென்றது. இதை உருவாக்கிய எலிசபெத் சாய் வஸேர்ஹெல்யி, ஜிம்மி சின், எவன் ஹேய்ஸ் மற்றும் ஷானன் தில் ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர். 

இந்த ஆவணப்படம் அலெக்ஸ் ஹான்னால்டு அமெரிக்காவின் யோசெமிட்டி தேசியப் பூங்காவில் உள்ள எல் கபிடன் என்னும் பெரிய பாறையில் ஃப்ரீ சோலோ செய்ததை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஜூன் 2017-ல் நடந்த இந்த நிகழ்வு படமாக்கப்பட்டு 2018-ல் வெளியானது. இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம். 

எல் கபிடன்

இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

அலெக்ஸ்சாதாரண பாறைஏற்றத்திற்கும், ஃப்ரீ சோலோவிற்கும் வித்தியாசங்கள் பல உண்டு. முதல் வித்தியாசத்திலேயே உங்களுக்கு அது புரிந்துவிடும். சாதாரண பாறை ஏற்றத்தைப் போல் அல்லாமல் ஃப்ரீ சோலோவில் எந்தக் கயிறும், சப்போர்ட்டுகளும் இல்லாமல் தனிமனிதனாக பாறை ஏற வேண்டும். ஒரு சிறிய தவறான அடி எடுத்து வைத்துவிட்டாலும் மரணம்தான். ஃப்ரீ சோலோவில் முழுதாக ஈடுபட்ட பலரும் ஃப்ரீ சோலோவில் ஈடுபடும்போதுதான் உயிரிழந்திருக்கின்றனர். அலெக்ஸ் ஏறிய இந்த `எல் கபிடன்' பாறை என்பது ஃப்ரீ சோலோ செய்பவர்களின் கனவாக இருந்தது. செங்குத்தான ஒரு சுவர் போல் இருக்கும் இதன் உயரம் சுமார் 3000 அடி. இதற்குமுன்பு அலெக்ஸ் பல உயரமான பாறைகளை ஏறியிருந்தாலும் இது அவற்றைவிட சுமார் இரண்டு மடங்கு பெரிதானது. பிடிப்பதற்கோ, கால் வைப்பதற்கோ சிறிய இடம் கூட இல்லாத இரக்கமற்ற பாறை இது. 2009-லிருந்தே இதில் ஃப்ரீ சோலோ செய்யவேண்டும் என்ற ஆவலுடன் இருந்திருக்கிறார் அலெக்ஸ். இதற்கு முன்புவரை யாரும் அதில் ஃப்ரீ சோலோ செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செய்ய முன்வந்ததும் இல்லை. கயிறுகள் இல்லாமல் ஏறச் சாத்தியமே இல்லாத பாறையாக அது பார்க்கப்பட்டது. இந்த முயற்சியை மேற்கொள்ள முதலில் சிலமுறை கயிறுகளுடன் பயிற்சிகள் மேற்கொண்டு பாதைகளை வகுத்துக்கொண்டார் அவர். `Free-rider' என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்து அதற்காகத் திட்டமிடலில் ஈடுபட்டார். இந்த முயற்சிகளின்போது கயிறுகளுடன் ஏறியபோதே இரண்டு முறைகள் கீழே விழுந்து காயமடைந்திருக்கிறார். ஆயிரத்துக்கும் மேலான பாறைகளில் கயிறில்லாமல் ஃப்ரீ சோலோ செய்துள்ள இவர் இப்படி எங்கும் தடுமாறியதில்லை. எப்படி இதையெல்லாம் புறந்தள்ளி மீண்டு வந்து தனது கனவை விடாமுயற்சியுடன் அடைந்தார் என்பதன் பதிவுதான் இந்தப் படம். ``மரணம் அனைவருக்கும் என்றோ வரப்போகிற ஒன்றுதான். ஆனால் இப்படி ஃப்ரீ சோலோ செய்வதன் மூலம் அது அருகில் இருப்பதை உணரமுடிகிறது. ஃப்ரீ சோலோவின் அர்த்தமே அதில்தான் இருக்கிறது" எனச் சாகசப் பிரியர்களுக்கே உண்டான உத்வேகத்துடன் ஃப்ரீ சோலோ பற்றிப் பேசுகிறார் அவர்.

Freerider

இந்த முயற்சிக்கு முன்பு அலெக்ஸ் வாழ்க்கை எப்படிச் சென்றுகொண்டிருந்தது, அவரது உணவுப்பழக்கம் என்ன, இந்தத் துடிப்புக்குக் காரணம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடி அளிக்கிறது இந்த ஆவணப்படம். இவரது மூளையை ஸ்கேன் செய்து இவரின் இந்த சாகசப் பிரியத்திற்குக் காரணம் என்ன, எப்படி இவரால் இந்தப் பாறைகளில் ஏற முடிகிறது எனப் பரிசோதித்து பார்க்கும் காட்சிகள் என அறிவியல் ரீதியாகவும் இது கையாளப்பட்டிருக்கிறது. அத்துடன் நிற்காமல் இவரது காதல், உழைப்பு, நம்பிக்கை, வலி என அனைத்து உணர்வுகளையும் நமக்குக் கடத்துகிறது இந்தப் படம். இதில் அலெக்ஸிற்கு அடுத்து மிக முக்கிய பாத்திரமாக இருப்பவர் அவரின் காதலி ஷானி மெக்கென்டலஸ். இந்த முயற்சிக்கு முன் அவரது மனநிலை என்ன என்பதையும் அவர் அலெக்ஸ் மேல் ஏற்படுத்திய தாக்கத்தையும் கூறுகிறது. எல்லாவற்றையும் தாண்டி அலெக்ஸின் அந்த திக் திக் பயணத்தில் என்ன ஆகுமோ என நம்மையும் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது இந்தப் படம். 

ஃப்ரீ சோலோ

இந்தப் படத்தை எடுத்தவர்களை வைத்தே தனி ஆவணப்படம் எடுக்கலாம் என்னும் அளவிற்கு இந்தப் படக்குழுவும் இதில் உழைத்திருந்தது. பாறைகளில் கயிறுகள் கொண்டு ஏறி சுமார் 15-20 கிலோ எடையுள்ள கேமராவை தோலில் சுமந்து அலெக்ஸ் சென்ற பாதை முழுவதிலும் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அசைவையும் படம்பிடித்திருக்கிறது இந்தக் குழு. படம் எடுக்கப்படுகின்ற உணர்வே அலெக்ஸிற்கு எமனாக மாறலாம் என அறிந்த படக்குழு பெரும் பதற்றத்தில்தான் மொத்த படம்பிடிப்பின்போதும் இருந்துள்ளது. தங்கள் கேமராவின் வழி பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒருவர் விழுந்து மடிந்தால் அதனால் ஏற்படும் குற்றவுணர்ச்சி என்பது அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் இருக்கும். இருந்தும் இந்த வரலாற்று நிகழ்வு படமாக்கப்படுவது அவசியம் என உணர்வுகளைக் கட்டுப்படுத்தி களத்தில் உழைத்தது இந்தக் குழு. கயிறுகள் இருந்தாலும் இவர்களே ஆபத்தில்தான் இருந்தனர் என்பது வேறு கதை. மேலே கூறப்பட்ட `Free-rider' பகுதிகளாக அலெக்ஸால் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த இடங்கள் அனைத்திலும் அவரை மிக அருகில் பின்தொடர்ந்தது படம்பிடித்திருக்கிறது குழு. ஒரே நேரத்தில் படம் எடுக்கவும், பாறை ஏறவும் தெரியும் சிலரைத் தேடி இதற்காகக் கண்டுபிடித்திருக்கின்றனர். வைடு ஆங்கிள் காட்சிகளும் ஹெலிகேம் மூலமும் மற்ற வழிகள் மூலமும் எடுக்கப்பட்டன. 

ஆவணப்படம்

எப்போதும் இந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த படங்கள் பெறுவதுதான் வழக்கம். இந்த முறையும் ரூத் படெர் கின்ஸ்பெர்க் என்னும் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியின் வாழக்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட `RBG' படத்திற்குத்தான் ஆஸ்கர் கிடைக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விருது `ஃப்ரீ சோலோ' தரப்பட்டது. படக்குழுவினருடன் நாயகன் அலெக்ஸ் ஹானால்டும் அவரது காதலி ஷானியும் மேடை ஏறினர். விருதை பெற்ற இயக்குநர் எலிசபெத் சாய் வஸேர்ஹெல்யி பேசுகையில், ``எங்களுக்கு இந்த தைரியத்தையும், நம்பிக்கையும் தந்த அலெக்ஸ் ஹான்னல்டுக்கு நன்றி, முடியாததை முடிக்கமுடியும் என நம்பும் அனைவருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்" என்றார்.

ஆஸ்கர் வென்ற சமயம்

இந்த வெற்றியின் மூலம் கடின உழைப்பாலும், முயற்சியாலும் முடியாததை எவராலும் முடிக்கமுடியும் என அலெக்ஸ் ஹான்னால்டுடன் இந்தப் படக்குழுவும் இந்த உலகத்திற்கு உரக்கச்சொல்லியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close