`குடும்பச்சூழலைச் சொல்லாதீர்கள்... மெயில் வேண்டாம்...’ அப்ரைசல் அட்வைஸ்! | 6 ways to talk salary hike with your manager

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (01/03/2019)

கடைசி தொடர்பு:17:59 (01/03/2019)

`குடும்பச்சூழலைச் சொல்லாதீர்கள்... மெயில் வேண்டாம்...’ அப்ரைசல் அட்வைஸ்!

உங்கள் மேலதிகாரியிடம் நீங்கள் நிகழ்த்தும் உரையாடல், ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனத்தைவிட முக்கியமானது. அதனால், அப்ரைசல் குறித்த உரையாடல் தெளிவாகவும், அதே சமயத்தில் உங்கள் பணியின் மீது நீங்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்கு புரியும்படியும் இருப்பது ரொம்ப முக்கியம்.

`குடும்பச்சூழலைச் சொல்லாதீர்கள்... மெயில் வேண்டாம்...’ அப்ரைசல் அட்வைஸ்!

சம்பந்தமே இல்லாமல் திடீரென எல்லோரும் ஹெச்.ஆர்.-ஐ வறுத்தெடுப்பார்கள். கூட்டம் கூட்டமாக நின்று சீரியஸாக சீக்ரெட் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலரின் முகம், வீட்டில் இழவு விழுந்ததுபோல இருக்கும். சிலரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போலப் பிரகாசமாக இருக்கும்... இது மாதிரியான காட்சிகளை ஒவ்வோர் அலுவலகத்திலும் அப்ரைசல் மாதத்தில் மட்டுமே பார்க்க முடியும். அப்படியான பரபரப்பு தொற்றிக்கொள்ள இதோ இன்னும் கொஞ்சம் நாள்தான் இருக்கிறது. 

பெரும்பாலான இந்திய நிறுவனங்களில் மே மாதம்தான் அப்ரைசல் என்றாலும், அதற்கு முந்தைய மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே அதற்கான பணிகளை ஆரம்பித்துவிடுவார்கள். இந்தச் சமயத்தில்தான், சம்பள உயர்வைப் பற்றி, உங்கள் நேரடி மேலதிகாரியிடம் பேச முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தயாரிப்பாளர் விலையை நிர்ணயம் செய்வதுபோல, நீங்கள் செய்யும் வேலைக்கு நீங்கள்தான் சம்பளத்தைத் தீர்மானிக்க வேண்டும். திறமையான பணியாளராக நீங்கள் இருக்கும்பட்சத்தில், சம்பள உயர்வு குறித்த உரையாடலுக்கு உங்களின் மேலதிகாரியைத் தயக்கமில்லாமல் அணுகுங்கள். அப்படி அணுகும்போது, ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

தெளிவு முக்கியம்

அப்ரைசல்

முதலில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் அப்ரைசல் முறையை ஆராய்ந்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நிறுவனத்தின் ஹெச்.ஆர்-க்கு அந்த நிறுவனத்தின் சட்டதிட்டங்கள், சம்பள உயர்வு நடவடிக்கைகள் என அனைத்தும் தெரியும். அதனால், மேலதிகாரியை அணுகுவதற்கு முன்பு, அவர்களிடம் அதுகுறித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் மேலதிகாரியிடம் நீங்கள் நிகழ்த்தும் உரையாடல், ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனத்தைவிட முக்கியமானது. அதனால், சம்பள உயர்வு குறித்த உரையாடல் தெளிவாகவும், அதே சமயத்தில் உங்கள் பணியின் மீது நீங்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்குப் புரியும்படியும் இருப்பது ரொம்ப முக்கியம். ஏனெனில், உங்களின் திறமையை மதிப்பீடு செய்வதில் அவருக்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது.

உணர்வுகளை ஒதுக்கி வைக்கவும்...

அப்ரைசல்

உணர்வுகளை அதிகம் கலக்காமல் உரையாடல் நிகழ்த்துவது நல்லது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, குடும்ப சூழ்நிலைகளை விளக்கிக்கொண்டிருப்பதுதான். அலுவலகத்தில் தனிப்பட்ட விஷயங்களை எப்போதுமே கலக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை நீங்கள்தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி, சம்பளத்தை அதிகப்படுத்திக் கேட்பது நியாயம் கிடையாது. அதேபோல உங்களின் பேச்சு, உங்களது திறமையை எடுத்துச் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும். அதை விற்பனை செய்வதாக இருக்கக் கூடாது. 

தகவல் சேகரிப்பு
உரையாடலுக்கு அமர்ந்த பிறகு, தத்துபித்துவென உளறாமலிருக்க, தகவல்களை முன்பாகவே தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பணி சார்ந்த விவரங்களை, திடீர் சப்பாத்திபோல உடனே சமைக்க முடியாது. இதை வாரம் தவறாமல் திரட்டி வைத்திருந்தால் சமயத்தில் கைகொடுக்கும். உங்களின் திறமையை நிரூபித்த பிறகான தருணம்தான், சம்பள உயர்வு பற்றி பேசுவதற்கான மிக முக்கியமான தருணம். இந்தச் சமயத்தில் உங்களின் மேலதிகாரி, உங்கள் மீது மிகுந்த மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார். அப்போது சம்பள உயர்வு பற்றி பேசினால், அவரால் முடியாது என்று சொல்லவதற்கு வாய்ப்புகள் குறைவு. 

சக ஊழியர்கள் பற்றி பேசாதீர்கள்

அப்ரைசல்

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததுமே, நம் எல்லோருக்கும் சக ஊழியர்களின் சம்பளம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், மற்றவர்களின் சம்பளத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதும், அவரவர்களின் சம்பள விவரங்களை சக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தாமல் இருப்பதும்தான் ஒரு நல்ல பணியாளருக்கு அழகு. ஆனால், பெரும்பாலானவர்கள் முதலில் அதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அப்ரைசல் சமயங்களில், மற்ற ஊழியர்களின் சம்பளத்துடன் ஒப்பீடு செய்து பேச்சுகளை ஆரம்பிப்பார்கள். இதனால் உங்கள் மீதான மதிப்புதான் பாதிக்கப்படுமே தவிர, நினைத்த காரியம் நன்மையில் முடியாது.

முன் அனுமதி பெறுங்கள்
சம்பள உயர்வு குறித்த உரையாடல் மேற்கொள்வதற்கு முன்பாக, மற்ற விஷயங்களைவிட மேலதிகாரியின் மனநிலையை ஆராய்வது ரொம்பவே முக்கியம். அவர் நல்ல மூடில் இருக்கிறாரா அல்லது கடுப்பாக இருக்கிறாரா என்பதைப் பொறுத்துதான் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். பேசுவதற்கான அனுமதியை அவரிடம் ஏற்கெனவே பெற்றுக்கொண்டு, அந்த நேரத்தில் பேசுவது புத்திசாலித்தனம். மற்ற நாள்களில் ஆடை விஷயங்களில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இது மாதிரியான முக்கிய தருணங்களில், ஆடை அணியும் விஷயங்களில் நன்மதிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ளுங்கள்.

மெயில் மூலம் பேசாதீர்கள்

அப்ரைசல் மெயில்

அப்ரைசல் பேச்சுகளை, நேரடியாகத்தான் மேலதிகாரியிடம் பேச வேண்டும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, அதற்கான வேண்டுகோளை ஒரு மெயில் மூலம் தெரிவித்துவிட்டு, அமைதியாகிவிடுவது அல்லது மேலதிகாரியின் பதில் மெயிலுக்காக காத்திருப்பது. இது முற்றிலும் தவறான விஷயம். எந்தவொரு விஷயத்தையும் நேரடியாகப் பேசும்போதுதான், தெளிவான விளக்கத்தைக் கொடுக்க முடியும், அப்போதுதான் எதிர்புறம் இருப்பவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

எனவே, தயங்காமல் மேலதிகாரியுடனான சம்பள உயர்வு குறித்த உரையாடலை இப்போதே ஆரம்பியுங்கள். அதே சமயம், அந்த உரையாடலானது வெற்றிகரமாக முடியவில்லை என்றால் அல்லது அந்த வருடத்துக்கான அப்ரைசல் உங்களுக்குச் சாதகமானதாக இல்லை என்றால், வருத்தப்படாதீர்கள். உண்மையை அறியப் பாருங்கள். ஒன்று, நீங்கள் நல்ல நிறுவனத்தில் உள்ளீர்கள் எனத் தெரிந்துகொள்வீர்கள். அல்லது நல்ல நிறுவனத்தை நோக்கி நகர்வீர்கள்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close