Published:Updated:

`எங்க நெஞ்சமெல்லாம் நிறைஞ்சு கிடக்கு!' - கரூர் சிறுமி அட்சயாவுக்கு சீர் செய்த மோகன் குமாரமங்கலம்

`எங்க நெஞ்சமெல்லாம் நிறைஞ்சு கிடக்கு!' - கரூர் சிறுமி அட்சயாவுக்கு சீர் செய்த மோகன் குமாரமங்கலம்
`எங்க நெஞ்சமெல்லாம் நிறைஞ்சு கிடக்கு!' - கரூர் சிறுமி அட்சயாவுக்கு சீர் செய்த மோகன் குமாரமங்கலம்

சொன்னதுபோலவே இன்று நடைபெற்ற கரூர் சிறுமி அட்சயாவின் பூப்புனிதநீராட்டு விழாவில் கலந்துகொண்டதோடு, தாய்மாமன் முறையில் பூ, பழம், குங்குமம் கொடுத்து, ரூ.20,000 ரொக்கமும் சீராக கொடுத்து, அட்சயா குடும்பத்தை ஆனந்தக் கடலில் தத்தளிக்க வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி-ஜோதிமணி தம்பதியின் மகள்தான் அட்சயா. இதயத்தில் பிரச்னையோடு இருந்த அவர், தனது இதய அறுவைசிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் 5000 ரூபாயைத் தூக்கி கேரள மழை வெள்ள பாதிப்புக்கு வெள்ள நிவாரண நிதியாகக் கொடுத்து, தமிழகத்தையே பெருமிதத்தில் நெஞ்சம் விம்ம வைத்தார். அவரை அப்போது வந்து பாராட்டிய, முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனான மோகன் குமாரமங்கலம், 'அட்சயாவை பெற்றதற்காக நீங்கக் காலத்துக்கும் பெருமைப்படலாம்' என்று ஜோதிமணியை பாராட்டினார். அதோடு 25,000 நிதியுதவியும் செய்துவிட்டுப் போனார். அட்சயாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் இரண்டாவது அறுவைசிகிச்சை செய்ய அழைத்துச் சென்றனர். 

அங்கு அட்சயா பூப்பெய்திவிட, 'இப்போதைக்கு அறுவைசிகிச்சை வேண்டாம்' என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதனால், அட்சயாவை அழைத்துக் கொண்டு கரூருக்குத் திரும்பினர். அட்சயாவுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பே இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், ``நான் தாய்மாமனா முன்னின்று சீர்வரிசை செய்கிறேன்" என்று ஜோதிமணியிடம் போனில் தெரிவித்தார். இதனால், அட்சயா குடும்பமே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனது. இந்தத் தகவல் நமக்குக் கிடைக்க, நேற்று இரவு விகடன் இணையதளத்தில், `நான் தாய்மாமனா முன்னின்று உனக்குச் சீர் செய்கிறேன்! - கரூர் அட்சயாவை நெகிழ வைத்த மோகன் குமாரமங்கலம்' என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம். 

இந்த நிலையில், இன்று குமாரபாளையத்தில் நடைபெற்ற அட்சயாவின் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சொன்னதுபோலவே மோகன் குமாரமங்கலம் காரில் வந்து இறங்கினார். தாய்மாமன் போலவே பூ, பழம், குங்குமம் உள்ளிட்ட பொருள்களோடு ரூ.20,000 பணத்தையும் வைத்து, அட்சயாவுக்கு தாம்பூலத்தில் நிரப்பி சீராக தர, மொத்த குடும்பமும் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஆட்பட்டது. ``தாய்மாமனா சீர் பண்ணிட்டேன். இப்போது மட்டுமல்ல, உன் இதய அறுவை சிகிச்சைக்கும், உன் திருமணத்துக்கும் நானே முன்னின்று உதவிகள் பண்ணுவேன். இது இந்த தாய்மாமனின் கடமை" என்று சொன்னார். காலில் விழுந்த அட்சயாவுக்கு ஆசிகளை வழங்கினார். `நடப்பவை யாவும் நிஜம்தானா?' என்று அட்சயா குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊரும் அதிசயித்துப் பார்த்தது. அதன்பிறகு, அட்சயா குடும்பத்தாரிடம் விடைபெற்றுக் கிளம்பினார் மோகன் குமாரமங்கலம். 

நெகிழ்ந்து போயிருந்த அட்சயாவின் தாய் ஜோதிமணி, ``நடந்தது எல்லாம் கனவா, நனவான்னு இன்னும் புரியலை. `எனக்கு யாரும் இல்லையே'ன்னு மருகிப் போகாத நாளில்லை. ஆனால், இவ்வளவு பெரிய மனுசன் எங்கள் வீட்டுக்கு வந்து, என்னைச் சகோதரியாகவும், என் மகளுக்குத் தாய்மாமனாகவும் பாவித்து, எங்களை உருகவைத்துவிட்டார். எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைஞ்சு கிடக்கு. என்னோட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகூட வரவில்லை. இந்த ஜென்மத்துல என் மகளால நான் அடைஞ்ச கொடுப்பினை இது" என்றார் மகிழ்ச்சி முகத்தில் பூக்க....!