கேமரா கண்களில் பார்க்காதீர்கள்... சிக்னேச்சர் உணவு சாப்பிடுங்கள்... டிரிப் டிப்ஸ்! | Don't do these things while traveling

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (03/03/2019)

கடைசி தொடர்பு:08:20 (03/03/2019)

கேமரா கண்களில் பார்க்காதீர்கள்... சிக்னேச்சர் உணவு சாப்பிடுங்கள்... டிரிப் டிப்ஸ்!

சுற்றுலா சமயங்களில் கூட, இந்தியர்கள் தங்களின் பிரச்னைகளை தூக்கிக் கொண்டே சுற்றுகிறார்கள். அதனால் அவர்களிடமிருக்கும் மனச்சோர்வும் மன அழுத்தமும் விலகுவதே இல்லை.

கேமரா கண்களில் பார்க்காதீர்கள்... சிக்னேச்சர் உணவு சாப்பிடுங்கள்... டிரிப் டிப்ஸ்!

ம்மில் பலர் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை கிடைத்தால், உடனே சுற்றுலாவுக்கு பிளான் போட்டுவிடுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம், நமக்குப் பயணிப்பதின் மீது காதல் அதிகரித்திருப்பதுதான். மகிழ்ச்சியான விஷயம்தான், ஆனால், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பயணத்தை முழுமையாய் கொண்டாடுவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். பயணிக்கும் போதும், இந்தியர்கள் தங்களின் பிரச்னைகளை தூக்கிக் கொண்டே சுற்றுகிறார்கள். அதனால் அவர்களிடமிருக்கும் மனச்சோர்வும், மன அழுத்தமும் விலகுவதே இல்லை.

ஸ்மார்ட்போனுடன் நேரத்தைச் செலவு செய்யாதீர்கள்!

டிரிப் டிப்ஸ்

ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. சாதாரண நாள்களில்தான் அப்படி இருக்கிறோம் என்றால், பயண நாள்களிலும் அப்படித்தான் இருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாவின் போது, வழக்கத்தை விட அதிக நேரம் ஸ்மார்ட்போனுடன் செலவு செய்கிறார்கள்.  இது அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல,  உங்களுக்கும் எரிச்சல் உண்டாகும். அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது. வருகிற அழைப்புகளுக்கு மட்டும் பதில் பேசிவிட்டு அமைதியாகச் சுற்றுலாவை கொண்டாடுங்கள்.

கேமரா கண்களில் பார்க்காதீர்கள்!

சுற்றுலா

அதிக மெகா பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இன்று எல்லோரின் கைகளிலும் இருக்கிறது. அதன் மூலம் துல்லியமான, தெளிவான புகைப்படங்களை உடனுக்குடன் எடுக்க முடியும், எடுத்த புகைப்படத்தை அப்போதே பிரின்ட்  செய்ய முடியும் என்பதால், புகைப்படம் எடுப்பதிலேயே பயண நாள்கள் பாதியை கழித்துவிடுகிறோம். சுற்றுலா சென்றிருக்கும் இடத்தில் இருக்கும் இயற்கையை நேரடியான கண்களில் பார்க்காமல், கேமரா கண்களில்தான் பார்க்கிறோம். இதனால் உண்மையான அழகை ரசிக்க முடியாமல் போகிறது. எங்குச் சென்றாலும் முதலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறோமே தவிர, அந்த இடத்தில் இருந்து அதை அனுபவிக்கத் தவறுகிறோம். இனி ஒவ்வொரு பயணத்தின் போதும், கேமராவின் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நம் கண்களை மட்டுமே கேமராவாக பயன்படுத்துவோம்.

சிக்னேச்சர் உணவுகளை வெறுக்காதீர்கள்!

சுற்றுலா

வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ செல்லும்போது, நம் நாட்டு உணவுகளை அல்லது நம் மாநிலத்து உணவுகளை தேடிப் போய் சாப்பிடும் பழக்கம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த நாட்டு உணவுகளை ருசிக்க தவறக் கூடாது. உணவின் ருசி பெரியது. ஒவ்வொரு நாட்டிலும் அது வெவ்வேறாக இருக்கும். அதை அனுபவிக்கத்தான் வேண்டுமே தவிர, ஒதுக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு உணவு மிகவும் பிரபலமாக இருக்கும். நம்மூர் இட்லி, தோசை போல. அங்குள்ள  சிக்னேச்சர் உணவுகளைத் தேடிப்போய் சாப்பிடுங்கள்.

அதிக நேரம் தூங்காதீர்கள்!

சுற்றுலா

பயணக் களைப்பு இருக்கத்தான் செய்யும், அது சுற்றுலா முழுவதும் தொடர்ந்தால், பயணத்துக்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், இன்று சுற்றுலாவுக்கு சென்று தூங்குபவர்கள்தான் அதிகம். மிக அழகானது காலைப் பொழுது. அதுவும் சுற்றுலா நாள்களில் அதன் அழகு கொஞ்சம் கூடுதலாக இருக்கும். மலைப் பிரதேசங்களின் காலைப் பொழுது, கடற்கரைகளின் காலைப்பொழுது, கிராமங்களின் காலைப் பொழுது என விடியற்காலை பொழுதுகளுக்கு வெவ்வேறு முகங்கள் உண்டு. அதை அந்த நாள்களில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். நம்மில் பலர் அந்த நேரத்தைத் தூக்கத்தில் தொலைத்துவிடுகிறோம். சுற்றுலா சென்றிருக்கும் நேரத்தில் அதிகாலை தூக்கத்தை துறந்து, இயற்கையில் மையல் கொள்ளுங்கள். உங்களின் பயண நாள்களை அது மிகவும் அழகாக்கும். 

காரில் மட்டுமே பயணம் செய்யாதீர்கள்!

சொந்த பயன்பாட்டுக்காக உங்களிடம் கார் இருக்கலாம். தினமும் அலுவலகத்துக்கு அந்தக் காரில் நீங்கள் பயணிக்கலாம். ஆனால், பயணம் மேற்கொள்ளும்போது காரில்தான் பயணிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இது சுற்றுலாவுக்கான உணர்வை ஏற்படுத்தாது. குடும்பமாகச் செல்லும் பட்சத்தில் கார் பயன்பாட்டை அமல்படுத்தலாம். ஆனால், சோலோ டிராவல் அல்லது நண்பர்களுடன் என வரும்போது, பேருந்து, ரயில், ரிக்ஸா என லோக்கல் டிரான்ஸ்போர்ட்களை பயன்படுத்துங்கள். செலவு கம்மியாவது மட்டுமில்லாமல், அந்த இடத்தின் பழக்க வழக்கங்களை, அங்குள்ள மனிதர்களை லோக்கல் டிரான்ஸ்போர்ட்களில் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல், பயண நாள்களில் ஊர் சுற்றிப்பார்க்க லோக்கல் டிரான்போர்ட்கள்தான் சிறப்பானவை. 

டிரிப் டிப்ஸ்

சுற்றுலா தளங்களுக்கு மட்டுமே போய் திரும்பாதீர்கள்!

பிரபலமான இடங்களுக்கு மட்டுமே டிரிப் அடிப்பதும், சுற்றுலாவுக்காக ஓர் இடத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருக்கும் பிரபலமான இடங்களை மட்டுமே காண்பதும் ஒன்றுதான். இந்த இரண்டு விஷயங்களையும் தவிர்ப்பது நல்லது. சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில் இருக்கும் பிரபலம் ஆகாத இடங்களுக்கு விசிட் அடியுங்கள். அது வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், புது அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். அதற்கான வாய்ப்புகளை முன்னதாக அமைத்துக் கொண்டால் சிறப்பு.

அடுத்தமுறை பயணிக்கும் போது, மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க முயலுங்கள். பிறகு, நீங்களே உணர்வீர்கள் சுற்றுலா நாள்களின் முழுமையான சந்தோஷத்தை!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close