Published:Updated:

`வாழ்நாளில் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை!'- சூர்யாவின் சோகக்கதை

`வாழ்நாளில் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை!'- சூர்யாவின் சோகக்கதை
`வாழ்நாளில் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை!'- சூர்யாவின் சோகக்கதை
`வாழ்நாளில் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை!'- சூர்யாவின் சோகக்கதை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி இளம்பெண் சூர்யாவின் நீண்ட ஆசைகள் நல்உள்ளம் படைத்தவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் மகிழ்ச்சியில் தன்னுடைய சோகத்தையே மறந்துபோனார் சூர்யா.  

கிருஷ்ணகிரி, காவேரி பட்டணத்தைச் சேர்ந்தவர் மாது. இவரின் மனைவி செல்வி. இவர்களின் மகள் சூர்யா (22). இவர் ப்ளஸ் டூ படித்தபோது முகத்தின் தாடையில் கட்டி வந்துள்ளது. அதற்கு சிகிச்சை அளித்தபோதுதான் சூர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் குடும்பம் நிலைகுலைந்துப்போனது. செல்விதான் குடும்ப சுமைகளைத் தாங்கிவருகிறார். சூர்யாவுக்கு இந்தப் பாதிப்பு தெரிந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த செல்வி, தன்னால் முடிந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார். வறுமை, குடும்பச் சூழல் காரணமாக சூர்யாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. 

இந்த நிலையில் சூர்யா, ப்ளஸ் டூ படிப்பை நிறைவு செய்ய முடியாதளவுக்கு நோயின் தாக்கம் இருந்தது. ஆஸ்பத்திரி வீடு என அலைந்தனர். ஒருகட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் வீட்டிலேயே சூர்யா முடங்கினார். இந்தத் தகவல் சென்னையில் செயல்படும் ழகரம் அறக்கட்டளைக்கு தெரியவந்தது. உடனடியாக சூர்யா குடும்பத்தினரை அறக்கட்டளையின் தலைவர் ராஜ்குமார் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது சூர்யா தன்னுடைய நீண்ட நாள் ஆசைகளைத் தெரிவித்தார். அதை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை கடற்கரையில் விளையாட வேண்டும், அசைவ உணவு, ஐஸ் க்ரீம் என ஆசைகளை பட்டியலிட்டார் சூர்யா. அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள ரிசார்ட் வாடகைக்கு எடுக்கப்பட்டது. அங்கு காரில் அழைத்து வரப்பட்டார் சூர்யா. 

`வாழ்நாளில் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை!'- சூர்யாவின் சோகக்கதை

அதன்பிறகு நடந்ததை ராஜ்குமார் ஸ்டாலின் நம்மிடம் விவரித்தார். ``கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சூர்யா, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற போக்குவரத்துக்குப் பணமில்லாமல் சிரமப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே கிருஷ்ணகிரியிலிருந்து அவர் சென்னை வருவதற்கான பணத்தை அனுப்பிவைத்தோம். அதன்பிறகுதான் சூர்யாவின் கடந்த கால வாழ்க்கை எங்களுக்குத் தெரியவந்தது. இந்தச் சின்ன வயதில் சூர்யாவுக்கு ஏற்பட்ட நிலை எங்களை மனவேதனைப்படுத்தியது. 4-வது கட்டத்தில் புற்றுநோயின் பாதிப்பிலிருக்கிறார். மருத்துவ உதவி கிடைக்காமல் இருக்கும் சூர்யாவுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அப்போதுதான் பீச்சில் விளையாட வேண்டும் என்ற ஆசையை சூர்யா எங்களிடம் தெரிவித்தார். உடனே கானத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்கு சூர்யாவையும் அவரின் அம்மா செல்வியை காரில் அழைத்து வந்தோம். அப்போது சூர்யாவை ஹீரோயினைப்போல கார்கள் அணிவகுக்க அவரை அழைத்து வந்தோம். கார்களுக்கு முன்னால் பைக்குகள் சென்றன. பூங்கொத்துக்களை கொடுத்ததும் சூர்யாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. 

ரிசார்ட்டுக்குள் நுழைந்ததும் சூர்யாவுக்கு செல்போன், சுடிதார், வாட்ச், வெள்ளி கொலுசு, நெக்லஸ் என பரிசு பொருள்களை வாங்கி கொடுத்தோம். அவர் விரும்பிய டெடிபேர் பொம்மையும் வாங்கினோம். அதன்பிறகு மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, ஐஸ் க்ரீம் ஆகியவற்றை அவர் ருசித்துச் சாப்பிட்டார். ப்ளாக் ஃபாரஸ்ட் என்ற கேக்கை வெட்டிக் கொண்டாடினார். அதன்பிறகு அவரை காரில் கடற்கரைக்கு அழைத்துச் சென்றோம். கடலின் அலைகள் காலில் பட்டவுடன் துள்ளிக் குதித்தார் சூர்யா. இவ்வாறு அன்றைய தினம் சூர்யாவுக்கு மகிழ்ச்சியாக கடந்தது. சூர்யாவின் ஆசைகளை நிறைவேற்றிய அந்த நாளுக்கு `சூர்யாவுடன் ஒருநாள்' என்று பெயரிட்டிருந்தோம். சூர்யாவுக்கு உதவிய ழகரம் அறக்கட்டளையின் டீம், ஹரி, அருள், லோகேஸ், ஸ்ரீதர், அபிராமி பாலாஜி, சுகா, அப்பாஸ், பிரேம், திலீப், சுதன், செந்தில், ஆர்.பி.சக்தி, பிரவீன், ஸ்ரீதேவி, குமார், சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினோம். இந்த நிகழ்ச்சிக்கு வந்த டாக்டர் இனியவன், சூர்யாவுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை இலவசமாக செய்வதாகக் கூறியுள்ளார். சூர்யாவுக்கு ஊட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அங்கும் விரைவில் அவரை அழைத்துச் செல்ல உள்ளோம்" என்றார். 

`வாழ்நாளில் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை!'- சூர்யாவின் சோகக்கதை

சூர்யா கூறுகையில், ``என்னுடைய அப்பா மாது, குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் அம்மாதான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றிவருகிறார். நான் 8-ம் வகுப்பு படித்தபோதுதான் தாடையில் கட்டி வந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 12-ம் வகுப்பு படிக்கும்போதுதான் அந்தக்கட்டி புற்றுநோய் என்று தெரியவந்தது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அடையாறு மருத்துவமனையிலும் ஆண்டுக்கணக்கில் சிகிச்சை பெற்றேன். டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். இதனால் நாட்டு மருந்து சாப்பிட்டு வருகிறேன். 

இந்தச் சமயத்தில்தான் ழகரம் அறக்கட்டளை குறித்த தகவல் எனக்குத் தெரியவந்தது. ராஜ்குமார் ஸ்டாலின் அண்ணனிடம் என் ஆசைகளைக் கூறினேன். அவரும் அவரின் டீமும்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். என் வாழ்நாளில் இதுபோன்ற சந்தோஷத்தை நான் அனுபவித்தது இல்லை. பல இடங்களுக்குச் என்னை அழைத்துள்ளனர். தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளனர். என் ஆசைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்றைய நாள் எனக்கு செம ஜாலியாக இருந்தது. இந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்" என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.