Published:Updated:

``எங்கப்பா நல்லா ஆகுற வரைக்கும் என்னால சரியா படிக்க முடியாது!"- கலங்கி நின்ற மாணவி... கைகொடுத்த டி.ஆர்.ஓ

``எங்கப்பா நல்லா ஆகுற வரைக்கும் என்னால சரியா படிக்க முடியாது!"- கலங்கி நின்ற மாணவி... கைகொடுத்த டி.ஆர்.ஓ
``எங்கப்பா நல்லா ஆகுற வரைக்கும் என்னால சரியா படிக்க முடியாது!"- கலங்கி நின்ற மாணவி... கைகொடுத்த டி.ஆர்.ஓ

பத்தாவது பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில், விபத்தினால் பாதிக்கப்பட்ட தன் தந்தை நலமாகாமல் தன்னால் சரியாக படிக்க முடியாது என்று கலங்கி நின்ற மாணவி ஒருவருக்கு, கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ் செய்த உதவியால், அந்த மாணவி மனநிம்மதி அடைந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது வாங்கல். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன்-இந்துமதியின் மகள் பிரீத்திஸ்ரீ. அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வாங்கலுக்கு அருகில் உள்ள கிராமமான நெரூரில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சமையல் மாஸ்டராக இருக்கிறார் கதிரவன். சொற்ப வருமானம் என்றாலும், மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருப்பவர். மகள் படிக்கும் தனியார் பள்ளியின் தாளாளர் சரவணனிடம் போய் தனது நிலையை சொல்ல, ஒன்றாம் வகுப்பில் இருந்தே பிரீத்திஸ்ரீயை இலவசமாக தனது பள்ளியில் படிக்க வைத்து வருகிறார் சரவணன்.

இந்த நிலையில், பத்தாவது படிக்கும் பிரீத்திஸ்ரீக்கு வரும் 14-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. தன் தந்தை தன்னுடைய கல்விக்காக படும் கஷ்டத்தை உணர்ந்த பிரீத்திஸ்ரீ, தந்தையின் மீது அளவில்லாத அன்பு வைத்துள்ளார். அதோடு, தந்தையின் முயற்சியை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில், நன்றாகவும் படிக்கவும் செய்திருக்கிறார். எல்லா தேர்வுகளிலும் முதல் ஐந்து ரேங்க் பட்டியலில் எப்போதும் இவர் பெயர் இருக்கும். இந்நிலையில்தான், வேலைக்குப் போய்விட்டு, டூவீலரில் திரும்பிய கதிரவன் கடந்த மாதம் 20-ம் தேதி விபத்துக்குள்ளாகி, அவரது இடது கால் உடைந்தது. உடம்பு முழுக்க பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

மேற்கொண்டு நடந்தவற்றை கதிரவனின் மனைவி இந்துமதி தெரிவிக்கையில், ``சீரியஸான நிலைக்கு போன அவரை தூக்கிட்டு கரூர் அரசு மருத்துவமனைக்குப் போனோம். முதலுதவி பண்ணிய மருத்துவர்கள், `உயிருக்கு ஆபத்தில்லை. ஆனா, மேஜரா ஒரு ஆபரேஷன் பண்ணனும். இல்லைன்னா, பிரச்னைதான்'னு சொன்னாங்க. `அப்ப உடனே பண்ணுங்க சார்'னு சொன்னேன். அதுக்கு அவங்க, `அவருக்கு சுகர் லெவல் அதிகமா இருக்கு. அதை கம்மி பண்ணிட்டு, குறைஞ்சது ஒரு மாதம் கழிச்சுதான் பண்ணனும். அதுவரை ஐ.சி.யூ வில் வச்சு ட்ரீட்மென்ட் கொடுப்போம்'ன்னாங்க. உள்ளம் நொறுங்கி கிடந்த நான், `சரி'னு சொன்னேன். ஆனா, என் பொண்ணு இவருக்கு இப்படி ஆனதை நெனச்சு சரியா சாப்புடுறதில்லை. சரியா தூங்குறதில்லை. சரியாகவும் படிக்கிறதில்லை. ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு, அப்பா

பக்கத்துலயே இருந்தா. இவருக்கு இப்படி ஆயிட்டேங்குறது ஒரு பக்கம்னா, இவ வேற இப்படி பண்றாளேன்னு கலங்கி நின்னேன். வர்ற 14-ம் தேதி வேற பொதுத் தேர்வு வருது. என்ன சமாதானம் பண்ணியும், அவ மாறலை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அவளோட நெருங்கிய தோழி அபிராமி, தன் தந்தையான மருத்துவர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லி இருக்கா. உடனே, அவர் தன் நண்பரான கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ்கிட்ட இந்த விசயத்தைச் சொல்லி இருக்கிறார். பதறிப்போன அவர், உடனே அரசு மருத்துவமனைக்கு வந்துட்டார். அங்க வந்து, என் மகள்கிட்ட அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், `எங்கப்பாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சு நல்லா ஆகுற வரைக்கும், என்னால எதுலயும் கவனம் செலுத்த முடியாது'னு என்று கண்ணீரோடு சொன்னா.

அவளின் தந்தை பாசத்தைப் பார்த்து டி.ஆர்.ஓ சாரே அசந்துபோய்ட்டார். உடனே, டீன், மருத்துவர்களை அழைத்த அவர், `இதுல ஒரு மாணவியோட படிப்பும் அடங்கி இருக்கு. ஏதாச்சும் பண்ணுங்க'னு சொன்னார். `சுகரை குறைக்காம அவருக்கு ஆபரேஷன் பண்றது கொஞ்சம் ரிஸ்க்குதான் சார்'னு சொன்னாங்க. `அந்த மாணவியின் பாசம் அவரை நல்லபடியா குணமாக்கும்'னு சொன்னார். மருத்துவர்களும், `100 சதவிகிதம் கேர் எடுத்து ஆபரேஷன் பண்றோம்'னு சொல்லிட்டு, கடந்த 1-ம் தேதி அவருக்கு ஆபரேஷன் பண்ணினாங்க. நான் எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டேன். என் மகள் அழுதுகிட்டே இருந்தா. எங்க வேண்டுதலும், மருத்துவர்களின் முயற்சியும், டி.ஆர்.ஓவின் நம்பிக்கையும் வீண் போகலை. என் கணவருக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சுச்சு. `பிரீத்தி'னு அவரு கண்

முழுச்சு கூப்புட்டதும், எல்லோரும் அழுதுட்டோம். `நீ மாவட்ட அளவுல முதல் மாணவியா வரணும்'னு அவகிட்ட என் கணவர் சொன்னார். அதன்பிறகே, என் மக நல்லா சாப்பிட்டா. இப்போ தந்தையின் கனவை நிறைவேத்த படிச்சுக்கிட்டு இருக்கா. டி.ஆர்.ஓ சார் உதவலன்னா, என் மக படிப்பு பாழாகி இருக்கும். ஃபெயிலாகூட போயிருக்கும் நிலை வந்துருக்கும்" என்றார் உணர்ச்சி மேலிட.

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் பேசினோம். ``நண்பர் மூலமா எனக்குத் தகவல் வந்துச்சு. ஒரு மாணவியின் படிப்பு பாழாய் போய்விடகூடாதுன்னு டீன்கிட்ட பேசி, ஆபரேஷன் பண்ண வச்சேன். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனா, அந்த மாணவியின் தந்தை பாசம் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வச்சுட்டு. அந்த பொண்ணோட அளவில்லாத அன்புதான் கதிரவனை நலமாக்கி இருக்கு. பாசத்துக்கு ஒரு பவர் இருக்குன்னு நான் உணர்ந்த தருணம் அது" என்றார் நெக்குருகி போய்!