விண்வெளியில் சீன சோலார் பவர் பிளான்ட்... ஆற்றலுக்கா... ஆயுதத்துக்கா? | China plans to build Space power plant

வெளியிடப்பட்ட நேரம்: 06:44 (06/03/2019)

கடைசி தொடர்பு:08:48 (06/03/2019)

விண்வெளியில் சீன சோலார் பவர் பிளான்ட்... ஆற்றலுக்கா... ஆயுதத்துக்கா?

ஆற்றல் தேவைக்காக அமைக்கப்போகிறோம் என்று சீனா கூறும் இந்த விண்வெளி சோலார் பவர் பிளான்ட் உண்மையிலேயே அதற்குத்தான் பயன்படப்போகிறதா அல்லது இது விண்வெளியில் மிதக்கும் நவீன ஆயுதமா ?

விண்வெளியில் சீன சோலார் பவர் பிளான்ட்... ஆற்றலுக்கா... ஆயுதத்துக்கா?

ன்று நீங்கள் உலகின் ஏதோ ஒரு பகுதிக்குச் சென்று கால் வைத்தாலும் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கும். மனிதர்கள் பூமியில் இருக்கும் பெரும்பாலான நிலப்பகுதிகளை அவர்களுக்கு ஏற்ற வகையில் எல்லைகளால் பிரித்து வைத்திருக்கிறார்கள். நிலம் என்ற ஒரு விஷயம்தான் வரலாற்றில் நிகழ்ந்த பல போர்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இப்படி நிலத்தைக் கூறுபோட்டு வைத்திருக்கும் மனிதர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் இடம் விண்வெளி மட்டும்தான். பூமியைச் சுற்றிலும் பரந்து விரிந்து கிடக்கும் அங்கே எல்லைகளைப் பிரிப்பது அவ்வளவு சுலபமில்லை என்ற ஒரே காரணத்துக்காக அதை விட்டு வைத்திருக்கிறார்கள்.

சீனா

உலக அரங்கில் அடுத்த வல்லரசாக யார் இருக்கப்போகிறார்கள் என்பது வரும் வருடங்களில் விண்வெளியில் யார் ஆதிக்கம் செலுத்தப்போகிறார்கள் என்பதை வைத்துதான் இருக்கப்போகிறது. விண்வெளியில் யார் ஆதிக்கம் அதிகம் என்பதைக் காட்டுவதற்காக அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையே கடந்த நூற்றாண்டு தொடங்கி நடந்து வரும் சம்பவங்களைப் பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். சில காலம் கழித்து இந்தப் போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளும் இணைந்துகொண்டன. இப்படிப்பட்ட சமயத்தில் விண்வெளியில் சோலார் பவர் பிளான்ட் ஒன்றைச் சீனா அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்கால ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம்

ஆற்றல் தேவை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான விஷயங்களில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறது. அதன்படி 2.5 டிரில்லியன் யுவான்களை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களில் அரசு முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னேறி வரும் சீனா தற்போது இந்த முடிவை எடுத்திருப்பது ஆச்சர்யப்படும் விஷயம் இல்லை. மறுபுறம் நாட்டின் மக்கள் தொகையும்  தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் தேவைப்படும் ஆற்றல் தேவைகளைச் சமாளிக்கத்தான்  விண்வெளியில் சோலார் பவர் பிளான்ட் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் அமையவுள்ள இந்த நிலையம் 2050-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆரம்பப் பணிகள் இன்னும் சில வருடங்களில் தொடங்கப்படலாம் எனவும், 2021 - 2025 ஆகிய இடைப்பட்ட வருடங்களில் வளிமண்டலத்தில் ஸ்ட்ராட்டோஸ்பியர் அடுக்கில் சிறிய அளவிலான சோலார் பவர் பிளான்ட்டை நிறுவ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளார்கள். அது வெற்றியடையும் பட்சத்தில் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். விண்வெளியில் இதை அமைக்க ரோபோக்கள் மற்றும் 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தைச் சீனா பயன்படுத்தும் என்றும் இவற்றின் எடை ஆயிரம் டன்கள் கொண்டதாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தியமாகுமா விண்வெளி சோலார் பவர் பிளான்ட்..?

விண்வெளி

எப்போதும் போலவே இப்படி ஒரு திட்டத்தை முதலில் முன் வைத்தது அமெரிக்காதான். நாசா பல ஆண்டுகளாகவே விண்வெளியில் சோலார் பவர் பிளான்ட்டை நிறுவும் திட்டத்தைக் கையில் வைத்து சுத்திக்கொண்டிருக்கிறது. ஜப்பானும் இதே யோசனையில்தான் இருக்கிறது. ஆனால், இதில் இருக்கும் ஒரு சிக்கலால்தான் இந்தத் திட்டம் சரிவர முன்னேற்றமடையாமல் இருக்கிறது. பொருள்களையும் மனிதர்களையும் அனுப்பி விண்வெளியில் சோலார் பவர் பிளான்ட் ஒன்றை அமைத்துவிடலாம். அதைப் பல நாடுகளால் எளிதாகச் செய்து விட முடியும். சிக்கல் என்னவென்றால் விண்வெளியில் கிடைக்கும் ஆற்றலை எப்படி பூமிக்குக் கொண்டு வருவது என்பதுதான். அதற்கான தீர்வு மட்டும் கிடைத்துவிட்டால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு திட்டமும் கைவசம் இருப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது. அதன்படி விண்வெளியில் அமைக்கப்படவிருக்கும் அந்த நிலையம் சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றலை உள்வாங்கும் வகையில் செயல்படும்.

பவர் பிளான்ட்

அதன் பின்னர், அந்த ஆற்றல் நுண்ணலைகளாகவோ அல்லது சக்தி வாய்ந்த லேசர் கற்றைகளாகவோ மாற்றப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பெறுவதற்காகப் பூமியில் ஓர் அமைப்பும் நிறுவப்பட்டிருக்கும் அதன் மூலமாக மின்சாரமாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இப்படித் தொடர்ந்து விண்வெளியிலிருந்து ஓரிடத்தில் குவிக்கப்படும் ஆற்றலால் மனிதர்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ ஏதேனும் பாதிப்பு இருக்குமா என்பதைப் பற்றியும் ஆராய வேண்டியிருக்கும் என்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தத் திட்டம் சீனா சொல்வதைப்போலவே யாருக்கும் பாதிப்பின்றி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் நல்லதுதான். ஆனால், இந்த விஷயத்தில் பலருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. சீனா இதை உண்மையாகவே ஆற்றல் தேவைக்காகத்தான் அமைக்கப்போகிறதா அல்லது ஆயுதத்துக்காகவா ?

பென்டகனின் சீக்ரெட் ரிப்போர்ட்... கடுப்பான சீனா

ஏவுகணை

தரை, கடல், ஆகாயம் எனப் பல்வேறு களங்களில் பயன்படுத்தப்படும் போர்க்கருவிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின்போது போர் விமானங்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருந்தது. அதன் பின்னர் சில காலத்திலேயே அதைவிடவும் திறன்வாய்ந்த ஆயுதம் தேவைப்பட்டது. எனவே, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவதில் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. நெடுந்தொலைவு செல்லும் இவற்றை சில நிமிடங்களில் தாக்குதலுக்குத் தயார் செய்துவிட முடியும். அது மட்டுமன்றி பல டன் எடை கொண்ட அணுகுண்டுகளைக்கூட இவை சுமந்து செல்லும் திறன் படைத்தவை. இருக்கும் இடத்திலிருந்தே சில நிமிடங்களில் எதிரியின் நாட்டைச் சேதப்படுத்திவிட இவற்றால் முடியும். இப்போது அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இணையான ஏவுகணைகள் சீனாவின் கைவசம் இருக்கின்றன. இதன் அடுத்தகட்டம்தான் விண்வெளியில் ஆயுதக் கட்டமைப்பை உருவாக்குவது. விண்வெளியில் அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமாக எதிரியின் நாட்டை எளிதாகக் கண்காணிக்க முடிவது மட்டுமன்றி எந்த இடமாக இருந்தாலும் உடனே குறிவைத்துத் தாக்கிவிடலாம். 

சீனா

குறிப்பாக சக்தி வாய்ந்த லேசர் ஆயுதங்களை விண்வெளியில் நிறுவுவதற்கான ஆராய்ச்சிகளில் சில உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. லேசர் என்பதால் எளிதாக உருவாக்கவும் முடியும், அதற்கான ஆற்றலை விண்வெளியில் எளிதாகவும் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சமயத்தில் கடந்த மாதம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு ஒன்று விண்வெளியில் ஆபத்தான ஆயுதங்களின் பயன்பாட்டைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மூலமாக விண்வெளியில் ஆயுதக் கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டித்த சீனா, ``விண்வெளி என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. அதன் மீது எந்த ஒரு தனி நாடும் உரிமை கோர முடியாது. குறிப்பாக, அது ஒன்றும் அமெரிக்காவின் தனிப்பட்ட சொத்து கிடையாது’’ என்று கடுமையான முறையில் எதிர்வினையாற்றியிருந்தது. சீனா லேசர் ஆயுதங்களின் மூலமாக அமெரிக்காவின் செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 லேசர் ஆயுதம்

ஒருவேளை சீனாவின் விண்வெளி சோலார் பவர் பிளான்ட்டும் ஓர் ஆயுதக் கட்டமைப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும், அதில் பயன்படுத்தப்படவிருக்கும் லேசர் தொழில்நுட்பம் அந்தச் சந்தேகத்தை அதிகரிக்கிறது. சொன்னதுபோலவே விண்வெளி அமைப்பை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் சீனா, அதை ஆயுதமாகவும் பயன்படுத்தலாம் அல்லவா. அதேநேரம் விண்வெளியை அமைதியாகவே பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் பென்டகனின் அறிக்கை விவகாரத்தில் சீனா தெரிவித்திருந்தது. எப்படிப் பார்த்தாலும் விண்வெளியில் இன்னும் சில காலத்தில் எல்லைகள் பிரிக்கப்படலாம். அப்போது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்கள்கூட நிறுவப்படக்கூடும். எதிர்காலத்தில் சீனாகூட வெளிப்படையாகவே இதைப் பற்றி அறிவிக்கக்கூடும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close