1,38,000 பாம்புக்கடி மரணங்கள்... உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வியூகம் என்ன? | "Snake bite mortality increased in developing countries" says WHO

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (06/03/2019)

கடைசி தொடர்பு:13:40 (06/03/2019)

1,38,000 பாம்புக்கடி மரணங்கள்... உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வியூகம் என்ன?

மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாக நடக்கும் மரணங்களில் அதிகமாகக் கவனிக்கப்படாமல் கைவிடப்படும் காரணங்களில் முக்கியமானது பாம்புக்கடியால் நிகழும் மரணங்கள். பூமியின் அதிகமான நச்சுப் பாம்புகளைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியா. இருப்பினும் அங்கு ஏற்படும் பாம்புக்கடி மரணங்கள் மிகவும் குறைவுதான். அதற்குக் காரணம், அந்த மக்கள் மத்தியில் இருக்கும் ஊர்வனங்கள் குறித்த விழிப்புணர்வு. அதேசமயம், உடனடி முதலுதவி சிகிச்சைகளைத் தரும் மருத்துவர்கள் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார்கள். விஷமுறிவு மருந்துகளும் போதுமான அளவில் எப்போதும் கையிருப்பு வைத்திருக்கிறார்கள். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவர்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. ஆனால், அதே நிலை மற்ற நாடுகளில் இல்லை. 

பாம்பு

அமெரிக்கா போன்ற நாடுகளில் பாம்புக்கடி மரணங்கள் அடிப்படை அறிவற்று நடந்துகொள்வதால் நடக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க இளைஞர்கள் தங்களைத் தைரியசாலிகளாகக் காட்டிக்கொள்ளச் செய்யும் சில அடிப்படையற்ற விஷயங்கள் ஆபத்தை விளைவிக்கின்றன. அதைத்தாண்டி பாதுகாப்பற்ற சூழலோ ஆபத்தான வாழிடமோ அந்த மக்களுக்குப் பெரும்பாலும் அமைவதில்லை.

ஆனால், வளரும் நாடுகளின் கதை முற்றிலும் வேறானது. அங்கு போதுமான விழிப்புணர்வு கிடையாது. அவர்கள் வாழிடங்கள் அவ்வளவு பாதுகாப்பான சூழலில் இல்லை. அவர்களுக்குத் தேவையான விஷமுறிவு மருந்துகளையும் மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் போதுமான கையிருப்பு வைத்திருப்பதில்லை. இதனால் அங்கு அதிகமாகக் கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்டிருக்கும் பாம்புக்கடிகளால் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அஞ்சத்தக்க வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த மரணங்கள் அதிகமாகி வருவதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆண்டுக்கு 1,38,000 மக்கள் இதனால் இறப்பதாகவும், 4,00,000 மக்கள் உடல் மற்றும் மூளைக் குறைபாடுகளுக்கு ஆளாவதாகவும் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். இந்த எண்ணிக்கையில் 90 சதவிகிதம் ஏழை நாடுகளில்தான் உள்ளது.

நஞ்சு

மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் பாம்புக்கடி மரணங்களைக் குறைப்பதற்காகப் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றும் திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் அரசுகளின் அசட்டையான அணுகுமுறைக்கு முக்கியக் காரணம், மக்கள் இதுகுறித்து அரசியல்ரீதியாகக் கேள்விகளை எழுப்பாததே என்கின்றன அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள். நூற்றாண்டு பழைமையான மருத்துவ முறைகளில் ஒன்று விஷமுறிவு மருத்துவம். இது உடனடியாகக் கிடைக்கும் வகையில் இருந்தால் 90 சதவிகித மரணங்களைத் தடுத்துவிடலாம். அதன் முதற்கட்டமாக, 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் முப்பது லட்சம் விஷமுறிவு மருந்துகளைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதில் ஐந்து லட்சம் மருந்துகளைப் பாம்புக்கடிகள் உலகிலேயே அதிகமாக நிகழும் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்குள் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.


[X] Close

[X] Close